கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காரித்தாஸ் அமைப்பு விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கத்தோலிக்கர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட பிலிப்பீன்ஸ் நாட்டில் டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின்போது இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு மேலும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
மராவியிலுள்ள மின்டனாவோ தேசிய பல்கலைகழகத்திற்குள் இடம்பெற்ற திருப்பலியின்போது வெடிகுண்டு தாக்குதலில் 4 மாணவர்கள் இறந்துள்ளது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட பிலிப்பீன்ஸ் காரித்தாஸின் தலைவர், ஆயர் Jose Colin Bagaforo அவர்கள், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு முன்வரவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
4 மாணவர்களின் இறப்புக்கும், 50 பேர் காயமுறுதலுக்கும் காரணமான இக்குண்டு வெடிப்பு இடம்பெற்ற மராவி நகர், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் நகராகும்.
இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் ஒருபோதும் இடம்பெறாமல் தடுக்கவும், அச்சமின்றி வழிபட இருக்கும் மனிதனின் அடிப்படை உரிமையை உறுதிச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ள ஆயர் Bagaforo அவர்கள், அமைதியைக் கொணர்வதில் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் சமயத் தலைவர்களின்
ஒன்றிணைந்த பணிக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் திருத்தந்தையின் இரங்கல் செய்தி மராவியின் ஆயர் Edwin de la peña y angot அவர்களுக்கு ஞாயிறன்றே அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்