விரோதங்கள் முடிவுக்கு வரவேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
போர் நிறுத்தம் பற்றி பேசினால் மட்டும் போதாது; நாங்கள் போர்நிறுத்தத்தை விரும்பவில்லை, மாறாக, விரோதங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்றும், இந்த மதியற்ற போரை நாம் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa
டிசம்பர் 24, ஞாயிறு இரவு, பெத்லேகேமிலுள்ள இயேசு பிறந்த இடத்தின் கோவிலில் திருவிழிப்புத் திருப்பலியைத் தலைமையேற்று நடத்தியபோது அதில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்த Pizzaballa அவர்கள், அனைத்து மக்களுக்கும் ஓர் இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இன்றயைச் சூழலில் இயேசு பிறப்பதற்கு ஓர் இடம் கூட இல்லையென்றே தனக்குத் தோன்றுகிறது என்று உரைத்த கர்தினால் Pizzaballa அவர்கள், ஆயுதங்களின் சத்தம், குழந்தைகளின் கண்ணீர், புலம்பெயர்ந்தோரின் தவிப்பு, ஏழைகளின் அழுகை, துயரத்தின் பிடியில் இருக்கும் பல குடும்பங்களின் வேதனை யாவும் நல்லிணக்கத்தை இழக்கச் செய்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இந்த உலகத்தின் இருளில்தான் திருஅவை கிறிஸ்து பிறப்பைப் புதிதாக அறிவிக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்த கர்தினால் Pizzaballa அவர்கள், “ஒவ்வொரு இரவும், கடவுள் தனது மகன் கிறிஸ்துவின் பிறப்பிற்கு எப்போதும் இடமளிக்கிறார் என்றும், இன்று இங்கே, கடினமான இதயத்திலும் கடவுளால் நமக்கு இடமளிக்க முடியும் என்றும் கூறினார்.
"சகோதரத்துவம், அமைதி, ஏற்றுக்கொள்ளல், மன்னிப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசும் நமது செயல்களை அதிகரிக்க வேண்டும் என்றும், நற்செயல்களுக்கும், அமைதிக்கும், உரையாடலுக்கும் நாம் ‘ஆம்’ என்று கூறவேண்டும் என்று அழைப்புவிடுத்த கர்தினால் Pizzaballa அவர்கள், இது ஒரு சொல்லாட்சி பயிற்சியாக மட்டுமே இருக்கக்கூடாது, ஆனால் ஒரு பொறுப்பான அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு முன்பு காசா மக்களுடன் தான் இருப்பது வழக்கம் என்றும், போர்ச்சூழல் நிறைந்த இவ்வாண்டு தான் எவ்வளவோ முயன்றும் கூட அது முடியாமற்போனது என்ற தனது இயலாமையை எடுத்துக்காட்டிய கர்தினால் Pizzaballa அவர்கள், உங்களுக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளோம் என்று கூறி தனது உடனிருப்பை உறுதிப்படுத்தினார்.
மேலும் நாங்கள் அனைவரும் உங்களுக்காகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம், நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்று காசா மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்த கர்தினால் Pizzaballa அவர்கள், நீங்கள் பயம், மரணம் மற்றும் துயரங்களை அனுபவித்தாலும், இந்தத் தருணத்தில் நீங்கள் ஓர் ஒளியாய் இருக்கிறீர்கள் என்றும், காசாவில் நீங்கள் மிகவும் துணிவுடன் இருப்பதை எண்ணி உங்களை நாங்கள் அரவணைத்துக்கொள்கின்றோம் என்றும் எங்களின் நெருக்கம் மற்றும் பாசத்தை நீங்கள் உணர்வீர்களாக என்றும் உணர்வுபொங்க கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்