தேடுதல்

கடவுளே அனைத்திற்கும் மேலானவர் கடவுளே அனைத்திற்கும் மேலானவர் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 47-2, கடவுளே அனைத்திற்கும் மேலானவர்!

நமது கிறிஸ்தவ வாழ்வில் நாம் எத்தகையதொரு பொறுப்பில் இருந்தாலும், நாம் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்பதையும் அவரே அனைவருக்கும் மேலானவர் என்பதையும் உணர்ந்து வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 47-2, கடவுளே அனைத்திற்கும் மேலானவர்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அரசர் ஒருவர் கோவில் ஒன்றில் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தார்.  அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றார். அவரைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றார். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவர் தள்ளி நின்றதால் இவருக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இந்த ஏழை மனிதரை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள். இவர் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும், மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் வழங்கப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது? அவ்வுணவைப் பெறுவதற்கு  எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன பிறவியில் நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை, ஒருவேளை உணவிற்காக இப்படித் தவியாய்த் தவிக்கிறோமே? என்று தன் விதியை நினைத்து தன்னை நொந்துகொண்டார் அந்தப் பரம ஏழை. மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல, என்று நினைத்தவராக 'கடவுளே என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று அந்தக் கோவிலின் கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் வந்து அமர்ந்தார். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தார். அப்போது அரசர் அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார் அரசர். கேட்பது அரசர் என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது... என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னார் அந்த ஏழை.

அவர்  சொன்ன பதில் அரசரின் மனதை உருக்கியது. "என் முதல் குழந்தை பிறந்த நாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தேன்? ஓர் அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளாரே என்று கூறியவாறு அவரருகில் சென்று அவரின் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்டார். அப்போது குளத்து நீரில் தலையில் அணிந்திருந்த தங்கக் கிரீடத்துடன் அரசரைக் கண்டு எழுந்தார் அந்த ஏழை மனிதர், அரசே! நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினார். இவரின் பண்பை பார்த்த அரசர் சத்தமாக சிரித்தார். “சரி வா... இன்று நீ என்னோடும் குழந்தை, அரசியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவரைப் பேசவிடாமல் அழைத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்தார் அரசர். சிறிது நேரத்தில் அந்த ஏழை மனிதர் குளித்துவிட்டு புத்தாடை அணிந்து வந்த அந்த ஏழை மனிதருக்கு அறுசுவை விருந்து கொடுத்தார் அரசர். சாப்பிட்டு முடித்து அவர் கையில் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, "இன்றிலிருந்து நீ ஏழை இல்லை... இந்தப் பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாகப் பிழைத்துக்கொள்" என்று அவரை வாழ்த்தினார். அதுவரை அமைதியாக இருந்த அந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. இதனைக் கண்டா அரசர், "ஏனப்பா அழுகிறாய்?" என்று கேட்க. "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் அரசே!...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னார் . அதற்கு அரசர், "ஏன் அப்படிச் சொல்கிறாய்" என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி பரம ஏழையாக வைத்திருக்கிறாய் என்று கடவுளிடம் கேட்டேன்... கேட்ட சில நிமிடங்களிலேயே உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டார்... கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவார் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதார். அப்போது அரசர், "நான் இந்த நாட்டிற்கு மட்டும்தான் அரசர். ஆனால் கடவுள்தான் இம்மண்ணுலகம் முழுவதற்கும் என்றென்றும் அரசர். என்னால் என் நாட்டு மக்களின்  குறைகளை மட்டும்தான் தீர்க்கமுடியும். ஆனால் அந்த அரசரால் இவ்வுல மக்கள் அனைவரின் குறைகளையும் தீர்க்கமுடியும். இன்னும் சொல்லப்போனால் நாம் அனைவருமே அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்” என்று மிகவும் பணிவுடன் கூறினார். மன்னரின் எளிமையைக் கண்ட அந்த ஏழை அப்படியே வியந்துபோய் நின்றார்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘ஆண்டவரே அனைத்துலகின் அரசர!' என்ற தலைப்பில் 47-வது திருப்பாடலில் முதல் நான்கு இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 5 முதல் 9 வரையுள்ள இறைவார்த்தைகளைத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வருவோம். இப்போது இறையமைதியுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்” (வச. 5-9). தாவீது அரசர், ஆண்டவரே இவ்வுலகின் அரசர் என்றும், அவர் தந்த வெற்றிகள், பாதுகாப்புகள், அரவணைப்புகள் அனைத்தையும் எடுத்துரைத்து அவரைப்  போற்றிப் புகழ்ந்தார் என்பதையும் கடந்த வார நமது விவிலியத் தேடலில் கண்டோம். சிறப்பாக, ஓர் அரசருக்கு இருக்க வேண்டிய தாயுள்ளம் மற்றும் தந்தையுள்ளம் குறித்துச் சிந்தித்தோம். இவ்வாரம் நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில் இப்படிப்பட்ட மாபெரும் அரசருக்குப் பண்ணிசைத்துப் புகழ்பாட அழைப்பதுடன், "மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்" என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. இத்திருப்பாடலின் இறுதியாக அமைந்துள்ள இந்த இரண்டு இறைவசனங்களும் மேலே கூறப்பட்ட கடவுள் என்னும் அரசரைக் குறித்த புகழ்ச்சிக்கு அடிப்படையாக அமைவதால், இவற்றைக் குறித்த நமது சிந்தனைகளை சற்று ஆழப்படுத்துவோம்.

‘மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்’ எனத் தாவீது ஏன் கூறுகின்றார் என்பது குறித்து சிந்திப்பதற்கு முன்பாக கொற்றம் என்பதன் பொருள் குறித்து ஆராய்வோம். கொற்றம் என்ற சொல்லுக்கு அரசாட்சி, வெற்றி, வீரம்; வலிமை; வன்மை என்ற வார்த்தைகள் பொருள்களாக அமைகின்றன. கடும் சினத்த கொல் களிறும் கதழ் பரிய கலி_மாவும் நெடும் கொடிய நிமிர் தேரும் நெஞ்சு உடைய புகல் மறவரும் என நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – (புறம் 55/7-12) என்ற புறப்பாடலில் வரும் வரிகள் கொற்றம் குறித்த செய்தியை நமக்கு வழங்குகின்றன. அதாவது, கொடிய சினத்தையுடைய கொல்லும் களிறும், விரைந்த ஓட்டத்தையுடைய மனம் செருக்கிய குதிரையும், நெடிய கொடியைக் கொண்ட உயர்ந்த தேரும், நெஞ்சு வலிமையுடைய போரை விரும்பும் மறவரும் என நான்கு படையும் கூட மாட்சிமைப்பட்டதாயினும், மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாகக் கொண்டது வேந்தரது வெற்றி என்று இதற்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. "ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல்” (குறள் 583) என்ற குறளுக்கு, நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசரின் கொற்றம் (வீரமும் வலிமையும்) தழைத்திட வழியே இல்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது. அப்படியென்றால், கொற்றம் என்ற வார்த்தைக்கு சிறந்த அரசாட்சி, வலிமை, வீரம், வேகம், விவேகம், வெற்றி, வன்மை ஆகிய சொற்கள் மிகவும் பொருத்தம் உடையதாக அமைகின்றன அல்லவா? ஆக, இவை எல்லாவற்றையும் கடவுள் ஒருவர் மட்டுமே தன்னகத்தே கொண்டிருப்பதால் இம்மண்ணுலக அரசர்களைக் காட்டிலும் விண்ணுலக மண்ணுலக அரசராகிய கடவுள் மிகவும் மேன்மைபொருந்தியவராக இருக்கின்றார் என்பதையும் இங்கே நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த விதத்தில் பார்க்கும்போது, இம்மண்ணகத்தை ஆள்பவர் அனைவரும் என்றுமுள்ள கடவுளின் கொற்றத்திற்கு அதாவது, வலிமைக்கும், அரசாட்சிக்கும், வீரத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் ஆகின்றனர். மேலும் இம்மண்ணுலகை ஆள்பவர்க்கு தோல்விகள் கிடைத்தாலும், இவ்விரு உலகையும் ஆளும் கடவுளுக்கு எப்போதும் தோல்வியே கிடையாது. காரணம், அவரன்றி ஓர் அணுவும் அசையாது என்பது திண்ணம். இதனை தாவீது நன்கு அறிந்து உணர்ந்திருந்தபடியால் தான், "மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்" என்கின்றார்.

இரண்டாவதாக, கடவுளே அனைத்திற்கும் மேலானவர் என்கின்றார் தாவீது. பொதுவாக,  கடவுளே அனைத்திற்கும் மேலானவர் என்பதை யார் ஏற்றுக்கொள்வார்? ஆயுதங்களையும், ஆள்பலத்தையும் நம்பாமல் கடவுளை மட்டுமே நம்பி வாழ்வோர் மட்டுமே இதனை ஏற்றுக்கொள்வர். இல்லையா? மேற்கண்ட கதையில் நாம் கேட்ட அரசரின் சொற்களைப்போல, நான் யார்? நான் ஒன்றுமே இல்லை. எனக்கு மேல் வலிமை பொருந்திய கடவுள் என்னும் அரசர் ஒருவர் இருக்கிறார் என்று கருதி இவ்வுலகை ஆட்சி செய்வோர் மட்டுமே, ‘கடவுளே அனைத்திற்கும் மேலானவர்’ என்று கூற முடியும். இதனை தாவீது மனதில் கொண்டிருந்ததனால்தான், "கடவுளே அனைத்திற்கும் மேலானவர்!" என்று அழுத்தமாகக் கூறுகின்றார். அதுமட்டுமன்றி இத்தகைய மனநிலை கொண்ட ஆட்சியாளர்கள் மட்டுமே மக்களின் நலன்களுக்காக வாழ்ந்திட முடியும். இன்றைய உலகில் நாம் காணும் ஆட்சியாளர்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் இதுதான். தங்களுக்குக் கீழ்தான் கடவுள் என்று கருதி மனசாட்சியற்ற நிலையில் தான்தோன்றித்தனமாக வாழும் ஆட்சியாளர்களால்தான் போரும், வன்முறையும், கலவரங்களும், பிரிவினைகளும் பிளவுகளும் இன்றைய உலகின் பல பகுதிகளிலும் தலைவிரித்தாடுகின்றன. உக்ரைன் மற்றும் இஸ்ரயேல்-ஹமாஸ் பகுதிகளில் நடந்து வரும் மோதல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. ஆகவே, நமது கிறிஸ்தவ வாழ்வில் நாம் எத்தகையதொரு பொறுப்பில் இருந்தாலும், நாம் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்பதையும் அவரே அனைவருக்கும் மேலானவர் என்பதையும் உணர்ந்து வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2023, 14:24