விவிலியத் தேடல்: திருப்பாடல் 48-1, ஆண்டவர் மாண்பு மிக்கவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'கடவுளே அனைத்திற்கும் மேலானவர்!' என்ற தலைப்பில் 47-வது திருப்பாடலில் 5 முதல் 9 வரையுள்ள இறைவார்த்தைகளைத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 48-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'கடவுளின் திருநகர்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 14 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. ‘கோராகியரின் புகழ்ப்பாடல்’ என்று அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. மோவாபியரும் அம்மோனியரும் அவர்களுடன் மெயோனியருள் சிலரும் ஒன்றுசேர்ந்து யோசபாத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர். அப்பொழுது அச்சமுற்ற யோசபாத்து யூதா, எருசலேம் சபையாருடன் ஆண்டவரின் இல்லத்துப் புது மண்டபத்தின்மேல் நின்று கொண்டு ஆண்டவரை நோக்கி குரல் எழுப்பி வேண்டினார். அவ்வேளையில் அச்சபை நடுவில் இருந்த யாகசியேலின்மேல் ஆண்டவரின் ஆவி இறங்கியது. இவர் ஆசாப்பின் குலத்தில் உதித்த ஒரு லேவியர்; இவர் மத்தனியா, எயியேல், பெனாயா ஆகியோரின் வழிவந்த சக்கரியாவின் புதல்வர். யாகசியேல் மக்களை நோக்கி, “யூதா, எருசலேம் வாழ்மக்களே, அரசே யோசபாத்து! கவனமாய்க் கேளுங்கள். ஆண்டவர் உங்களுக்குக் கூறுவது இதுவே: இப்பெரும் படையினரைக் கண்டு நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; நிலை குலையவும் வேண்டாம். இப்போர் உங்களுடையது அல்ல, கடவுளுடையது. நீங்கள் அவர்களுக்கு எதிராக நாளை படையெடுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ் மலைச்சரிவின் வழியாக வருவார்கள்; நீங்கள் போய் எருசவேல் பாலைநிலத்திற்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கின் எல்லையில் அவர்களைச் சந்திப்பீர்கள். அங்கே நீங்கள் போரிட வேண்டியதில்லை; அணிவகுத்து நின்றாலே போதும். யூதாவே! எருசலேமே! உங்கள் சார்பாக ஆண்டவர் கொள்ளும் வெற்றியைக் காண்பீர்கள்! எனவே, அஞ்சாமலும் நிலைகுலையாமலும் இருங்கள். நாளை அவர்களை நோக்கிச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்” என்றார். இதைக் கேட்டவுடன் யோசபாத்தும், அவருடன் யூதா, எருசலேம் வாழ்மக்கள் யாவரும் முகங்குப்புறத் தரையில் வீழ்ந்து ஆண்டவரை வணங்கினர். கோகாத்தியரையும் கோராகியரையும் சார்ந்த லேவியர் எழுந்து நின்று இஸ்ரயேலின் கடவுளை உரத்த குரலிலும் உயர்ந்த தொனியிலும் வாழ்த்தினர் (காண்க 2 குறி 20:14-19) என்று இரண்டாம் குறிப்பேடு நூலில் வாசிக்கின்றோம். நாம் தியானிக்கும் இத்திருப்பாடல் கோராகின் மகன்களின் திருப்பாடல் என்றே அழைக்கப்படுகிறது. கோராகின் இந்த மகன்கள் கோகாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த லேவியர்கள். தாவீதின் காலத்தில் அவர்கள் கோவில் வழிபாட்டின் இசை அம்சத்தில் சேவை செய்ததாக தெரிகிறது.
யோசபாத்து இறைவனிடம் வேண்டுதல் எழுப்பும்போது, “எங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரே! விண்ணகக் கடவுள் நீரே அன்றோ! நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர்; நீரே வலிமையும் ஆற்றலும் வாய்ந்தவர்! உம்மை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது. எங்கள் கடவுளே, உம் மக்கள் இஸ்ரயேலருக்காக இந்த நாட்டு மக்கள் அனைவரையும் வெளியேற்றி, இதனை உம் நண்பர் ஆபிரகாமின் வழிமரபினருக்கு என்றென்றுமாகக் கொடுத்தவர் நீரே அன்றோ!” (வசனம் 6,7) என்று கூறி தங்களுக்கு இந்தப் போரில் வெற்றி தருமாறு வேண்டுகிறார். இதனைப் பின்னணியாகக் கொண்டு இத்திருப்பாடலும் வடிக்கப்பட்டுள்ளது. அங்கே வெற்றிக்கு முன்பாக இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து வல்லவராம் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றனர். இங்கே வெற்றிபெற்ற பிறகு என்றும் வாழும் ஒப்பற்ற அரசரின் திருநகராகிய எருசலேமில் கடவுள் அளித்த வெற்றிக்கு நன்றி கீதம் இசைக்கப்படுவதுடன் அவருடைய வலிமையையும், வல்லமையையும், பேராற்றலையும், தனது மக்களைப் பேரன்புடன் வழிநடத்தும் அவரது இரக்கப்பெருக்கத்தையும் இத்திருப்பாடல் முழுதும் பாடிபுகழ்கின்றார் தாவீது அரசர். இன்று இத்திருப்பாடலின் முதல் மூன்று இறைவார்த்தைகளை நமது தியானச் சிந்தனைகளுக்கு எடுத்துக்கொள்ளவோம். இப்போது அவ்வார்த்தைகளைப் பக்தியுணர்வுடன் வாசிக்கக் கேட்போம். “ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார் (வச.1-3)
ஆண்டவர் மாண்பு மிக்கவர்
மாண்பு என்பதை ஆங்கிலத்தில் the Great என்கின்றோம். இந்த Great என்பதற்கு மாண்புக்குரிய, புகழுக்குரிய, போற்றுதற்குரிய, மேன்மைக்குரிய, அளவிடமுடியாத, அள்ள அள்ள குறையாத, என்றுமே நிலைத்திருக்கின்ற, முடிவில்லாத, குறைசொல்லுக்கு ஆளாக முடியாத என்ற வார்த்தைகளைக் கொண்டு இதனை நாம் அர்த்தம்படுத்தலாம். ஆனால், இந்தச் சொற்கள் அனைத்தும் என்றும் வாழும் விண்ணக மண்ணக அரசரான கடவுள் ஓருவருக்கே தகும் என்பதை நாம் மிகவும் கவனமாக கருத்தில் கொள்ளவேண்டும். நம் நாட்டு அரசியல் சூழலில் நமது அரசுத் தலைவருக்கும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ‘மாண்புமிகு’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறோம், அப்படியென்றால், அவர்கள் அனைவரும் எத்துணை தூயவர்களாக, அப்பழுக்கற்றவர்களாக, அர்ப்பணிப்புள்ளவர்களாக, மக்கள்மீது அக்கறையுள்ளவர்களாக, தியாமிக்கவர்களாக வாழவேண்டும் என்பதை நாம் மட்டுமல்ல அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்ரயேல் மக்களின் மிகப்பெரும் அரசர்களாக இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட சவுலும், தாவீதும், சாலமோனும் கூட தங்கள் வாழ்க்கையில் எதோ ஒருவிதத்தில் குறையுள்ளவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை நாம் அறிய வருகின்றோம். இவர்களே இப்படியென்றால், நம்காலத்து அரசர்களையும் தலைவர்களையும் நாம் சொல்லவும் வேண்டுமோ? இத்தகைய குறைபாடுகளெல்லாம் இல்லாமல் நம்மை ஆளும் ஒப்பற்ற அரசர் கடவுள் ஒருவர்தான். அதனால்தான் அவரை, ‘ஆண்டவர் மாண்பு மிக்கவர்’ என்கின்றார் தாவீது. மேலும் எகிப்திலிருந்து செங்கடலைக் கடந்து வந்ததும், எகிப்தியர்களின் வீழ்ச்சியைக் கண்ட மோசேயும் இஸ்ரயேல் மக்களும், ஆண்டவரைப் புகழ்ந்து பாடுகின்றனர் என்பதைக் காண்கின்றோம். “ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன். போரில் வல்லவர் ஆண்டவர்; ‛ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்” என்றும் பாடும் அவர்கள், அப்பாடலின் இறுதியில், ‘ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்’ என்று முடிக்கின்றனர் (காண்க விப 12:1-3,18).
இவ்விதத்தில் தாவீது அரசரும், “ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர். பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன" (திபா 95:3) என்றும், “ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது (திபா 145:3) என்று தாவீது அரசர் என்றும் ஆளும் அரசராகிய கடவுளை மாண்புக்குரியவர், மாண்புமிககவர், அனைத்துக்கும் மேலான அரசர்” என்றும் கூறி புளங்காகிதம் அடைகின்றார்.
எருசலேம் கடவுளின் நகர்
இரண்டாவதாக, தனது திருமலையான எருசலேமில் ஆண்டவர் புகழுக்குரியவராகத் திகழ்வதாகக் கூறுகின்றார் தாவீது. இந்த எருசலேம் திருநகர்தான் கடவுளின் இல்லமாகவும், கோட்டையாகவும், கடவுள் வழங்கும் அமைதியின் பிறப்பிடமாகவும் விளங்கியது. அதனால்தான் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினத்தாரிடையேயும் சூழ்ந்துள்ள நாடுகள் நடுவிலும் நான் திகழச் செய்த எருசலேம் இதுவே (எசே 5:5) என்று இறைவனாகிய ஆண்டவரே உரைக்கின்றார். அத்துடன், ‘நான் எகிப்து நாட்டிலிருந்து என் மக்களை அழைத்து வந்த நாள் முதல், என் பெயருக்கென ஒரு கோவிலை எழுப்புமாறு நான் இஸ்ரயேலின் வேறொரு குலத்து நகரையும் தேர்ந்துகொள்ளவில்லை. என் மக்கள் இஸ்ரயேலருக்குத் தலைவராக நான் எவரையும் தேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், இப்பொழுது எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்கள் இஸ்ரயேலை ஆளத் தாவீதையும் தேர்ந்து கொண்டேன்’ என்பதாகும் (காண்க 2 குறி 6:5-6) என்று தனது தந்தை தாவீதுக்கு கடவுள் அளித்த வாக்குறுதிக் குறித்து சாலமோன் அரசர் கூறுகின்றார். ஆக, இந்த வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்கு எருசலேமை அன்புகூர்ந்தார் என்பதையும், தன் இல்லமாகிய அதில் என்றென்றும் உறைந்திருந்தார் என்பதையும் நாம் அறியவருகின்றோம். சிறப்பாகத் திருப்பாடல் 122 முழுவதும் எருசலேமின் பெருமை குறித்து புளங்காகிதமடைந்து அதனைப் புகழ்ந்துபாடுகின்றார் தாவீது என்பதையும் நாம் பார்க்கின்றோம். "அங்கே (எருசலேமில்) நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன் (காண்க திபா 122:5-9). நமதாண்டவர் இயேசுவும் 80 விழுக்காடு தனது இறையாட்சிப் பணியை எருசலேமிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் ஆற்றினார். அதனால்தான் இப்படிப்பட்ட மேன்மை வாய்ந்த, கடவுளின் உறைவிடமான எருசலேமில் நிகழ்ந்த அநீதி நிறைந்த செயல்களை எண்ணி கண்ணீர் சிந்தினார் (காண்க லூக் 19:19:41-44) அவர்.
ஆகவே, தனது இல்லமான எருசலேமில் வாழும் மாண்புமிக்க அரசராம் நம் கடவுள் நம் உள்ளம் என்னும் எருசலேமில் வாழ்கின்றார் என்பதை உணர்வோம். அப்படிப்பட்ட கடவுள் வாழும் நம் உள்ளத்தை இறையன்பாலும், மகிழ்ச்சியாலும், அமைதியாலும் நிரப்புவோம். எருசலேமை நாடிவந்தோர் அனைவரும் இறையாசீரையும், நிறைவான இறையன்பையும், அமைதியையும் பெற்று மகிழ்ந்ததுபோல நம் உள்ளங்களைத் தேடிவருவோரும் அத்தகைய இன்பங்களைப் பெற்று மகிழட்டும். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இஸ்ரயேலின் மாண்புக்குரிய மாவேந்தராம் கடவுளிடம் அருள் வேண்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்