விவிலியத்தேடல்: திருப்பாடல் 48-3, கடவுளின் நீதித்தீர்ப்புகள் தூயவை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'எதிரிகளைச் சிதறடித்த இறைவன்!' என்ற தலைப்பில் 48-வது திருப்பாடலில் 4 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 9 முதல் 14 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வருவோம். இப்போது அமைதியான மனநிலையில் அவ்வார்த்தைகளை செவிவழி உள்வாங்கி உள்ளத்தில் இறுத்தி நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். "கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். கடவுளே! உமது பெயரைப் போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. சீயோன் மலை மகிழ்வதாக! யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக! சீயோனை வலம் வாருங்கள்; அதைச்சுற்றி நடைபோடுங்கள்; அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள். அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்; அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்; அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு இதை உங்களால் விவரிக்க இயலும். இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்; அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார்” (வச.9-14)
ஒரு நாள் துறவியை காண ஒரு சாதாரண மனிதன் சென்றான். அவன் தன் வாழ்க்கையில் மிகவும் விரக்தியாக இருப்பதாகவும் யாரை நம்புவது என்று தெரியவில்லை என்றும் துறவியிடம் சொல்லி வருந்தினான். அதற்குத் துறவி அவனிடம், "உனக்கு ஒரு கதை சொல்கிறேன் நீ எளிதில் புரிந்து கொள்வாய்" என்றார். ஒருவன் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கனவில் கடவுள் தோன்றுகிறார்."கடவுளே நான் உங்களிடம் பேட்டியெடுக்க விரும்புகின்றேன் என்று சொல்கின்றான் அவன். கடவுள் சிரித்தவாறே, சரி. உன் கேள்விகளைக் கேள்! என்கிறார். நீங்கள் படைத்த மனித இனத்தில் எது உங்களுக்கு வியப்பளிக்கிறது" என்று கேட்டான். அதற்குக் கடவுள், "மனிதன் தன் குழந்தை பருவத்தில் இருந்து சீக்கிரமாக வளர்ந்து விடவேண்டும் என்று பெரியவனாக வளந்து விடுகிறான். ஆனால் வளர்ந்த பிறகு அவன் எண்ணங்கள் குழந்தை போன்றே இருக்கிறது. பணம் சம்பாதிப்பதற்காக வாழ்க்கை முழுவதும் உடல்நலனை கருதாமல் ஓடுகிறான். சம்பாதித்ததை பிற்பகுதியில் உடல்நிலை சரியில்லை என செலவு செய்கிறான். எதிர்காலம் என்னவாகுமோ என்று எண்ணியே நிகழ்காலத்தை தொலைக்கிறான். நிகழ்காலமும் இல்லாமல் எதிர்காலமும் இல்லாமல் பின்பு தவியாய்த் தவிக்கிறான். சாகாமல் இருப்பதற்காகவே வாழ்கிறான். ஆனால், வாழாமலே செத்துப்போகிறான்" என்றார். “சரி” என்று தலையாட்டிய அவன், "நீங்கள் கடவுள், நீங்கள் படைத்த இந்த உலகத்தில் வாழும் இந்த மனிதர்களுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கை பாடம் என்ன? என்று கேட்டான். அமைதியாகப் புன்னகைத்த கடவுள், "குழந்தாய்.. யாரும் உன்னை நேசிக்க வேண்டும் எனப் போராடாதே. அவர்கள் நேசிக்கும் அளவுக்கு உன் செயல்கள் இருக்கட்டும். வாழ்க்கையில் ஒருவன் எவ்வளவு சம்பாதித்தான் என்பது முக்கியம் இல்லை. அதை எவ்வாறு சம்பாதித்தான் என்பதே முக்கியம். ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுக்கொண்டே இருக்காதே. அனைத்தும் இருந்தால்தான் நீ பணக்காரன் என்று எண்ணாதே. யாருக்குத் தேவைகள் உண்மையில் குறைவோ அவனே பணக்காரன். நாம் நேசிக்கும் ஒருவரை எளிதில் புண்படுத்திவிடலாம். ஆனால் அவர்கள் மனதில் ஏற்பட்ட வலி மறைய ஆண்டுகள் பல ஆகலாம். பணம் இருந்தால் அனைத்தையும் வாங்கி விடலாம் என்று எண்ணாதே. உண்மையான அன்பை பணத்தால் வாங்க முடியாது. ஒருவரின் கண்ணோட்டத்தில் இருந்து மற்றொருவர் கண்ணோட்டம் வேறாகத்தான் இருக்கும். நல்ல நண்பன் என்பவன் தனது நட்பை எந்தச் சூழலிலும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவன் கடினமான சூழலிலும் உடன் நிற்க வேண்டும். அடுத்தவர்களை மன்னித்தால் மட்டும் போதாது. நமது தவறுகளை உணர்ந்து நம்மை நாமே மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். நீ பேசியதையும் செய்தததையும் மற்றவர் மறக்கலாம். ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற வலிகளை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!" என்றார். இறுதியாக, “உங்களின் உயரிய படைப்பான மானிடரிடத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது எவை? என்று கேட்டான் அவன். தாய்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்று மானிடர் கூறுகின்றனர். அப்படியானால், உங்கள் கடவுளாகிய நான் நீதிநெறி கொண்டு ஒழுகுவதுபோல நீங்களும் ஒழுகவேண்டாமா? என்னிடத்தில் இருக்கும் அன்பும், பரிவிரக்கமும், வேறுபாடுகளைக் களைந்து எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் உங்களிடமும் இருக்க வேண்டாமா? உங்களின் பல்வேறு பணிகள் மத்தியிலும் உங்களின் கோவில்களில் வீற்றிருக்கும் என்னிடம் வந்து செபம், தியானம் போன்ற ஆன்மிகக் காரியங்கள் வழியாக என்னோடு ஒன்றித்து இன்புற்றிருக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பிய கடவுள், “இதுதான் என்றும் நிரந்தரம், இதைத்தான் நான் அதிகம் விரும்புகின்றேன்” என்று கூறி பேட்டி முடிந்தது என்பதைபோல் கடவுள் கண்ணசைத்து மறைந்தார். அவனும் கனவில் இருந்து விழித்தான் என்றார் துறவி. தெளிந்த மனநிலையை பெற்றவனாய் அந்த மனிதன் தனது இல்லத்திற்கு திரும்பிச் சென்றான்.
இன்று நாம் தியானித்துக்கொண்டிருக்கும் இந்த இறைவார்த்தைகளில் இரண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார் தாவீது அரசர். முதலாவதாக, "கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். கடவுளே! உமது பெயரைப் போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. சீயோன் மலை மகிழ்வதாக! யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக! என்கின்றார் தாவீது. கடவுள் நீதியானவர், நேர்மைகொண்டவர், அவரை நம்பியிருப்போரை அவர் என்றும் கைவிடுவதில்லை. ஆகவே, இப்படிப்பட்ட கடவுளின் பேரன்பை நினைத்து உருகியதாகவும் அவருடைய புகழ் பூவுலகு முழுவதும் நிறைந்துள்ளதாகவும் பாடுகின்றார் தாவீது.
மேற்கண்ட கதையில் கடவுள் மானிடரிடத்தில் நீதியையும் நேர்மையையும் உண்மையையும் விரும்புவதாகக் கூறியதைக் கேட்டோம். அப்படியென்றால் இன்றைய உலகில் நீதி இருக்கிறதா, நேர்மை துலங்குகிறதா, உண்மை உறங்காமல் இருக்கின்றதா என்றால் சட்டென இல்லையென்று கூறிவிடலாம், அதுவும் நுகர்வுவெறி கலாச்சாரத்தில் சிக்கித்தவிக்கும் இன்றைய உலகில் நீதியை எதிர்பார்க்க முடியுமா? பணம் பாதாளம் வரை பாயும் என்பதுபோல, இன்றைய உலகில் பணம் நீதியையே விலைக்கு வாங்கி விடுகிறது. 2016-ஆம் ஆண்டு, ஏப்ரல் 24-ஆம் தேதியன்று, இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றில் தலைமை நீதிபதி டிஎஸ் தாக்கூர், பிரதமர் மோடியின் முன் மனமுடைந்து அழுததுடன், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அழைப்பு விடுத்தார். இந்தச் செய்தி இந்திய மக்கள் அனைவரையும் நிலைகுலைய வைத்தது. நீதிமன்றத்தின்மீதான மக்களின் நமகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. அவ்வாறே, அண்மையில் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக இதுவரை என்ன நீதி கிடைத்துவிட்டது என்றுதான் அனைத்து சமூக செயல்பாட்டாளர்களும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இருப்பவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி என்ற நிலை இன்றும் தொடர்வதைப் பார்க்கின்றோம். இதனால்தான், ‘மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! என்றும், ‘நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா, அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா? தர்ம தாயின் பிள்ளைகள், தாயின் கண்ணை மறைப்பதா? உண்மை தன்னை ஊமையாக்கி தலைகுனிய வைப்பதா?" என்றும் மறைந்த கவிஞர் வாலி எழுதினார். ஆனால், அதேவேளையில் நீதிக்காக உழைத்தவர்களும், அதனைச் செய்லபடுத்திக் காட்டியவர்களும் உலகெங்கிலும் தலைவர்களாக வாழ்ந்துச் சென்றுள்ளனர் என்பதையும் பார்க்கின்றோம். கடவுள் எப்படி ஏழையென்றும் பணக்காரர் என்றும் பாராமல் அனைவருக்கும் ஒரேவிதமான நீதியை வழங்குகின்றாரோ அவ்வாறே இவ்வுலகின் அரசர்களும் நீதிபதிகளும் விளங்கிட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை ‘நீதியரசர்கள்’ என்று அழைக்கின்றோம். ஆக, தாவீது தனது திருப்பாடல்கள் முழுவதிலும் கடவுளை நீதியின் கடவுளாகவே காட்டுகின்றார் என்பதையும் நாம் அறிகின்றோம். “ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை” (காண்க திபா 19:9) என்கின்றார் தாவீது.
இறுதியாக, “சீயோனை வலம் வாருங்கள்; அதைச்சுற்றி நடைபோடுங்கள்; அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள். அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்; அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்; அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு இதை உங்களால் விவரிக்க இயலும். இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்; அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார்” என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். அதாவது, சீயோன் அல்லது எருசலேம் நகர் நீதியின் உறைவிடம், நேர்மையின் பிறப்பிடம், கடவுளின் அன்பு ஊற்றெடுக்கும் தூய இடம் என்பதை கருத்தில் கொண்டவராகவே தாவீது இப்படி கூறுகின்றார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. எருசலேம் நகர் கடவுள் வாழும் நகராக இருப்பதனால்தான், “ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்” என்று இத்திருப்பாடலின் தொடக்கத்தில் தாவீது கூறுகின்றார் என்பதையும் இப்போது நினைவுகூர்வோம். இதன் அடிப்படையில் பார்க்கின்றபோது, நமதாண்டவர் இயேசுவும், தனது 80 விழுக்காட்டுப் பணியை எருசலேமிலும் அதனைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் ஆற்றி இறைநீதிக்கான செயல்களை வெளிப்படுத்தினார் என்பதையும் இந்நோக்கத்திற்காகவே கல்வாரியில் தனது இன்னுயிரையும் ஈந்தார் என்பதையும் மீண்டும் நாம் நினைவில் கொள்வோம். ஆகவே, நீதிநெறியும் தூய அன்பும் கொண்டு விளங்கும் கடவுளின் மக்களாக நாமும் அவரின் வழியில் வாழ்வதற்கான அருளை இந்நாளில் வேண்டி மன்றாடுவோம்.
இப்போது சிறியதொரு செபத்துடன் இவ்வார நமது விவிலியத்தேடல் நிகழ்ச்சியை நிறைவு செய்வோம். அன்புத்தந்தையே இறைவா! உம்மைப் போற்றி புகழ்கின்றோம். உமது அன்புத் திருமகனின் பிறப்புப் பெருவிழாவை இந்நாட்களில் நாங்கள் மகிழ்ந்து கொண்டாடி வருகின்றோம். பாவத்திலிருந்து மட்டுமல்ல அநீதிகள், அக்கிரமங்கள், வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்திலிருந்தும் எங்களை மீட்பதற்காக நீதியின் கதிரான உம் திருமகனை எங்களுக்காக மனுவுருவெடுக்க உதவினீரே. எங்களின் அன்றாட வாழ்வில் நாங்கள் ஒவ்வொருவரும் உம்திருமகனின் வழியில் அன்புக்கும், உண்மைக்கும், நீதிக்கும், நேர்மைக்கும், அமைதிக்கும் சான்று பகர்ந்திட எங்களுக்கு வரமருளும் ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்