தேடுதல்

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு 

திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு : சமத்துவம் பேணும் இறைவன்!

நாமும் நமது அன்றாட வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இறையாட்சிக்கான இயேசுவின் கனவை நனவாக்க முற்படுவோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசா 40: 1-5, 9-11   II.  2 பேது  3: 8-14    III.  மாற் 1: 1-8)

ஞாயிறு சிந்தனை 101223

ஓர் ஆய்வாளர் ஓர் ஆய்வுக்காக ஓர் ஆட்டு மந்தை வைத்திருப்பவரைச் சந்திக்க சென்றார் அப்பொழுது அங்குள்ள ஆட்டு மேய்ப்பர் ஒருவரை சந்தித்த ஆய்வாளர், "உங்களுக்கு எத்தனை ஆடுகள் உள்ளது" என்று கேட்டார். அதற்கு ஆடு மேய்ப்பவர், "எனக்கு 50 வெள்ளாடுகளும், 50 கறுப்பாடுகளும் உள்ளன என்றார். "சரி வெள்ளாடு ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறது, கறுப்பு ஆடு ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறது" என்று கேட்டார் ஆய்வாளர். "வெள்ளாடுகள் ஒரு நாளைக்கு 50 கிலோ இலைதளைகள் சாப்பிடும். அதுபோல கறுப்பாடுகளும் ஒரு நாளைக்கு 50 கிலோ இலைதளைகள் சாப்பிடும்" என்றார் ஆடு மேய்ப்பவர். சரி "வெள்ளாடு எவ்வளவு குட்டி ஈனும், கறுப்பாடு எவ்வளவு குட்டி ஈனும்" என்று கேட்டார் ஆய்வாளர். "வெள்ளாடு ஓர் ஆண்டிற்கு 12 குட்டிகள் ஈனும், கறுப்பாடும் ஓர் ஆண்டிற்கு 12 குட்டிகள் ஈனும்" என்றார் மேய்ப்பர். இதனால் சற்று கடுப்பான ஆய்வாளர், "வெள்ளாட்டுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள், கறுப்பாட்டுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்" என்று கேட்டார். வெள்ளாடு ஒவ்வொன்றுக்கும் ஆண்டுதோறும் 10,000 ரூபாயும் கறுப்பாடு ஒவ்வொன்றுக்கும் ஆண்டுதோறும் 10,000 ரூபாயும் செலவு செய்வேன்" என்று சளைக்காமல் பதில் கூறினார் மேய்ப்பர். இதனால் இன்னும் சற்று கோபமடைந்த அந்த ஆய்வாளர், வெள்ளாட்டிலிருந்து எத்தனை கம்பளிகள், கறுப்பாட்டிலிருந்து எத்தனை கம்பளிகள் கிடைக்கும்" என்று வினவினார். அதற்கு மேய்ப்பர் பெருமையுடன், வெள்ளாட்டிலிருந்து ஆண்டிற்கு 15 கம்பளிகளும், கறுப்பாட்டிலிருந்து 15 கம்பளிகளும் கிடைக்கும் என்றார். இதனால் உச்சக்கட்ட கோபத்திற்கே சென்ற அந்த ஆய்வாளர், அப்படின்னா வெள்ளாட்டுக்கும் கறுப்பாட்டுக்கும் என்னதான் வேறுபாடு" என்று கேட்டார். அதற்கு அந்த மேய்ப்பர், வெள்ளாடுகளும் என்னுடையதுதான் கறுப்பாடுகளும் என்னுடையதுதான். அவைகளைப் பொறுத்தளவில் நான் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை" என்று பொறுமையாகப் பதிலளித்தார்.

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுள் தனது சாயலாகப் படைத்த மானிடரில் எவ்வித வேறுபாடுகளும் பார்ப்பதில்லை மற்றும் அவருடைய பார்வைக்கு மானிடர் அனைவரும் சமம் என்ற உயரிய கருத்தை நமக்கு உரக்கச் சொல்கின்றன. உலகத் தலைவர்களாலும் மக்களாலும் இன்றும் போற்றப்படுபவர் மறைந்த அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். அதற்குக் காரணம், அடிமைத்தளையை ஒழித்து சமத்துவ வாழ்வை நிலைநிறுத்தப் போராடியவர் என்பது மட்டுமல்ல, அந்த உயரிய நோக்கத்திற்காகத் தன் இன்னுயிரையும் கையளிக்கத் துணிந்தவர் என்பதுதான். 'மக்களால் மக்களுக்காக நடக்கும் மக்காளாட்சி' என்ற ஒரு சொற்றொடர் அவர் பேசிய கெட்டிஸ்பர்க் உரையில் இடம்பெற்றது. உலகின் தலைசிறந்த சொற்பொழிவுகளில் மிகவும் முக்கியமானது  கெட்டிஸ்பர்க் உரை. அமெரிக்கக் குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன் நவம்பர் மாதம் 19-ஆம் தேதி,  தனது உரையை கெட்டிஸ்பர்க் போர்க்கள நினைவிடத்தில் நிகழ்த்தினார். இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் ஏறக்குறைய 15,000 பேர் ஒன்றுதிரண்டிருந்த அக்கூட்டத்தில் லிங்கன் உரையாற்றியது வெறும் 3 நிமிடங்கள் மட்டும்தான். ஆனால் 272 சொற்கள் மட்டுமே அடங்கிய அந்த உரை உலக வரலாற்றில் மறக்க முடியாததாக மாறிப்போனதுதான் வியப்பு. ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு கறுப்பின மக்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் பண்ணைகளில் அடிமைகளாக விற்கப்பட்டு விலங்குகளை விடவும் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர். அடிமைகளாக வாங்கப்பட்ட அவர்களின் உடம்பில் அடையாளப் பச்சைக் குத்தப்பட்டது. கறுப்பின அடிமைப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். கொடுமையான சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் ஆயிரக்கணக்கான அடிமைகள் உயிர்துறந்தனர்.

அடிமைகளை விற்பனை செய்வது, அவர்களைப் பணயமாக வைத்துச் சூதாடுவது, அடமானம் வைப்பது, ஏலம்விடுவது ஆகிய மனித மாண்பைக் குலைக்கும் செயல்கள் அரங்கேறின. அந்தக் கால கட்டங்களில் இவ்வடிமைகளுக்கு எவ்விதமான சட்டப் பாதுகாப்பும் கிடையாது. அவர்கள் திருமணம் செய்துகொள்ளகூட உரிமை கிடையாது. அவர்களுக்கு ஒருவேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் கூட கிடைக்கப் பெறாமல் பலர் பட்டினிக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இப்படிப்பட்ட நிலையில், 'மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடைமையாக்குவது மனித உரிமைகளுக்குப் புறம்பானது' என எதிர்ப்புக் குரல் கொடுத்தார் லிங்கன். ஆனால் அமெரிக்காவின் தென் மாநிலங்கள் அனைத்தும் கறுப்பின மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தன. இதனால் இக்கொடிய நிலையை எதிர்த்து அமெரிக்க அரசும் வட மாநிலங்களும் போராடின. 1861-ஆம் ஆண்டு முதல் 1865-ஆம் ஆண்டு வரை இருதரப்புக்கும் நடந்த யுத்தமே அமெரிக்க உள்நாட்டுப் போர். இந்தப் போரில் வட மாநிலங்கள் தரப்பில் 23,000 வீரர்கள் உயிர்துறந்தனர். அந்த வீரர்களின் நினைவிடத்தில் ஆபிரகாம் லிங்கன் செலுத்திய அஞ்சலிதான் கெட்டிஸ்பர்க் உரை.

"உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். போர்க்களத்தில் நாம் கூடியிருக்கின்றோம். நமது நாடு உயர்வடைய வேண்டும் என்பதற்காகப் பலர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். இங்குப் போரிட்டு இறந்தவர்கள் செய்து முடிக்காமல் விட்டுப்போன பணியை செய்து முடிக்க, உயிரோடு இருக்கும் நாம் நம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். எந்த இலட்சியத்தை அடைவதற்காக அவர்கள் தங்கள் இன்னுயிரைக் கையளித்தார்களோ, அந்த இலட்சியத்தை நாம் நம்பிக்கையுடன் நிறைவேற்றுவோம். அவர்களின் தியாகம் வீண்போகாது. மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மக்களின் அரசை உலகத்திலிருந்து யாராலும் அழிக்க முடியாது" என்று மூன்றே நிமிடங்களில் பேசிமுடித்தார் ஆபிராம் லிங்கன். ஆனாலும் இந்த மூன்று நிமிட உரை இன்றும் உலகெங்கினும் அடிமைத்தளைகளை அழித்தொழித்து சமத்துவத்தை நிலைநிறுத்தப் போராடும் ஆயிரமாயிரம் புரட்சியாளர்களின் வாழ்வில் உந்துசக்தியாய் அமைந்து ஊக்கமளித்து வருகிறது.

ஆறுதல், கனிமொழி, மன்னிப்பு 

இந்தப் பின்னணியில் இன்றைய முதல் வாசகத்தைப் பார்க்கும்போது அது மூன்று காரியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது. இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் அடிமைத்தளை என்பது ஒன்றரகலந்திருந்தது என்பதே உண்மை. முதலில் இது எகிப்தில் தொடங்குகிறது. அதன்பிறகு சாலமோன் காலத்திற்குப் பின்பு இஸ்ரயேல் மக்கள் பாபிலோனுக்கும் பாரசீகத்திற்கும் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டு அவர்கள் சொல்லொண்ணா துயருற்றனர். இப்படியாக அவர்கள் வாழ்வின் விளிம்பு நிலைக்கு விரட்டியடிக்கப்பட்டு வேதனையின் உச்சசத்தில் இருந்த காலத்தில் இந்த மீட்பின் செய்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் கடவுள் மீதான இம்மக்களின் நன்றிகெட்ட தனமும் பாவ வாழ்வும்தான் இவர்களின் அடிமைத்தளைக்கும் அத்தனை வேதனைகளும் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, அடிமைத்தனங்களாலும், வேறுபாடுகளாலும், மாறுபாடுகளாலும் சிக்குண்டு சிதறிப்போயிருந்த இஸ்ரயேல் மக்களின் வாழ்வு இத்தகைய மீட்பர் குறித்த அறிவிப்பால் மீண்டும் ஒன்றிணைக்கப்படுகின்றது. அதாவது, அடிமைத்தனத்தால் நொறுக்குண்டு போயிருந்த அவர்களின் உள்ளங்களுக்கு ஆறுதலும், கனிமொழியும், மன்னிப்பும் வழங்குகின்றார் கடவுள். இதனைத்தான், “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்" என்கின்றார் கடவுள்.

வேறுபாடுகளற்ற சமத்துவ வாழ்வு

இரண்டாவதாக, அடிமைத்தனங்களால் தனித்தனி தீவுகளாக்கப்பட்ட அவர்களின் வாழ்வில் சமத்துவத்தை ஏற்படுத்துவதன் வழியாக அவர்களை ஒன்றிணைக்க விரும்புகின்றார் கடவுள். இதனைத்தான், "குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்;  கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்” என்று இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. மேலும் இந்த வேறுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை ஏற்படுத்தவே இறைத்தந்தையின் ஒரே மகனான இயேசுக் கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். இயேசுவின் காலத்திற்கு முன்பும் இதே வேறுபாடுகள் தொடர்ந்தன. அதனால்தான் வேறுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை நிலைநிறுத்தும் கடவுளின் என்றுமுள்ள ஆட்டுக்குட்டி இயேசுவே என்பதை உரக்கச் சொல்கின்றார் திருமுழுக்கு யோவான். இவர் கடவுளின் தூதனாகவும், இயேசுவின் வழியை ஆயத்தம் செய்பவராகவும் கடவுளால் முன்னிறுத்தப்படுகிறார். திருமுழுக்கு யோவானும் மீட்படைய பாவமன்னிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துகின்றார். இதன்படியே அவர் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர் என்று இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துரைக்கின்றது.

நற்செய்தி  முழங்கட்டும்

மூன்றாவதாக, சமத்துவத்தின் வழியாக அனைவருக்கும் மீட்பளிக்கும் மீட்பரைக் குறித்து முழக்கமிட்டு அறிவிக்க அவர்தம் மக்களாகிய நம்மை அழைக்கின்றார் கடவுள். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.” என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள், இயேசு எப்படிப்பட்ட மீட்பராக இருப்பார் என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. ஆகவே, தன் மக்களுக்காகத் தனது இன்னுயிரையே கையளித்து எல்லா மக்களினங்களையும் ஒன்றிணைக்கப்போகும் (காண்க யோவா 10:7-11; 16) இந்த மீட்பரைக் குறித்துதான் திருமுழுக்கு யோவான் அறிவித்தார். அவர் வழியில் நாமும் நம் பாவங்களுக்காக மன்னிப்புப் பெற்று இந்த மீட்பரைக் குறித்துப் பறைசாற்ற அழைக்கப்படுகிறோம்.

இன்னொரு விதத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாளாக அமைகின்றது. ஆண்டுதோறும் டிசம்பர் 10-ஆம் தேதியன்று, உலகம் முழுவதும் மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், சமூகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் சமத்துவத்தை ஏற்படுத்தி, சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படடுகிறது என்பதையும் நம் நினைவில் கொள்வோம். இம்மண்ணில் மானிடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், தனது சொந்த நாட்டில் வாழவும், கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், உடல்நலம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர்  வாழவும் உரிமை உண்டு என்பதை இந்நாள் தெளிவுபடுத்துகிறது. அவ்வாறே இனம், மொழி, நிறம், பாலினம், அரசியல், சாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூகத் தோற்றம் என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதும் இந்நாள் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைகிறது.

எனவே, நாமும் நமது வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இறையாட்சிக்கான இயேசுவின் கனவை நனவாக்க முற்படுவோம். இதுவே உண்மையான கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான நமது விருதுவாக்காக அமையட்டும். இவ்வருளுக்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2023, 11:20