தேடுதல்

ஆண்டின் இறுதி நாள் மாலையில் இத்தாலியின் மிலான் நகர பேராலயம் முன்பு கொண்டாட்டம் ஆண்டின் இறுதி நாள் மாலையில் இத்தாலியின் மிலான் நகர பேராலயம் முன்பு கொண்டாட்டம்  (ANSA)

வாரம் ஓர் அலசல் - 2023ஆம் ஆண்டை திரும்பிப் பார்ப்போம்

நேற்று தொடங்கியது போன்று இருந்த 2023ஆம் ஆண்டு, அதற்குள் தனது கடைசி நாட்களை எண்ணி முடித்து பல அனுபவங்களை வாரி வழங்கியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, வாழ்வின் வேக வேகமான ஓட்டத்தில் சிறிது நேரம் ஒதுக்கி நம் கடந்த காலம் முழுவதையும் ஒரு தராசில் இட்டுப் பார்த்தோமானால், நம் மனக்கண் முன் வரும் நிறைகளும் குறைகளும் நிச்சயமாக உண்மையானதாக இருக்காது. ஏனெனில், சிலர் பல நல்லவைகளை மறந்திருக்கலாம், பலர் பல தீமைகளை மறந்தே போயிருக்கலாம். ஆகவே, குறை காண்பதும் நிறை காண்பதும் ஒவ்வொருவரின் மன நிலையைப் பொறுத்தது. ஒரே அளவு துன்பங்களும் அதே அளவு இன்பங்களும் ஒருவருக்கு வாழ்வில் வந்தாலும், அவர் ‘ஏன் இறைவா எனக்கு இத்தனை வேதனைகள்’ என்று புலம்பவும் வாய்ப்புண்டு, அல்லது, ‘இத்தனை இன்பங்களைத் தந்த இறைவா உனக்கு நன்றி’ என புகழவும் வாய்ப்புண்டு. எல்லாம் நம் அணுகுமுறைகளைப் பொறுத்தது, வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் சந்தேகங்களையும் சார்ந்தது.

வாழ்க்கை முழுவதையும் அலசிப் பார்க்க முனையாமல், கடந்த ஓராண்டை மட்டும், அதாவது, 2023ஆம் ஆண்டை மட்டும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

மனிதன் தனது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு விதமான அனுபவங்களை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது. அதில் மகிழ்ச்சி, வேதனை, கவலை, உற்சாகம் என பல்வேறு உணர்வுகளும் அடங்கும். அந்த வகையில் தான், நேற்று தொடங்கியது போன்று இருந்த 2023ஆம் ஆண்டும், அதற்குள் தனது கடைசி நாட்களை எண்ணி முடித்து பல அனுபவங்களை வாரி வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த 12 மாதங்களில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகள் தொடங்கி, உலகையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவங்கள் வரையில், 2023ஆம் ஆண்டு நமக்குத் தந்த அனுபவப் பாடத்தைப் பார்ப்போம்.

2023ஆம் ஆண்டு அசாதரணமான வெப்பத்தைக் கொண்டிருந்ததுடன், காட்டுத்தீகள், மற்றும் காலநிலைத் தொடர்புடைய பேரழிவுகளைக் கண்டிருந்தது. உலகம் மேலும் மேலும் வெப்பமாகிக்கொண்டேப் போகிறது. காலநிலை மாற்றம் உலகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. 125,000 ஆண்டுகளிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 இருந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை கால நிலை மாற்றம் குறித்த மாநாடு துபாயில் நடைபெற்றது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டன. இது ஒரு நம்பிக்கையை விதைக்கும் செய்தியாக இருப்பினும், கடந்த ஆண்டில் இடம்பெற்ற இயற்கை பேரழிவுகளையும் கொஞ்சம் உற்று நோக்கிப் பார்த்துவிடுவது நல்லது.

இயற்கை பேரழிவுகள் - புயலும் சூறாவளியும்

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வனுவாடு பகுதிகளை கேப்ரியல் புயல் பிப்ரவரி மாதம்(பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 17 வரை) கடுமையாகத் தாக்கியது. இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்பு ஏறக்குறைய 8.4 பில்லியன் அமெரிக்க டாலராக கணக்கிடப்பட்டது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவியில் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ஃப்ரெடி (Cyclone Freddy) என்ற சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டது. மடகாஸ்கரும் மொசாம்பிக்கும் கூட இதில் பாதிக்கப்பட்டன. 1,400க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்திய இந்த சூறாவளியால் 1600 கல்வி நிலையங்களும் சேதமாகின.

கடந்த ஆண்டு மே மாதம் வடக்கு இந்திய பெருங்கடலில் உருவான மோக்கா புயல் மே 14 ஆம் தேதி மிக தீவிர புயலாக வலுப்பெற்று மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் மியான்மரை ஒட்டிய கடலோர பகுதியை சென்றடைந்தது. மே 15 ஆம் தேதி வலுவிழந்த புயல் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தினால் 460 பேர் வரை உயிரிழந்தனர்.

பசிபிக் கடலில் ஆகஸ்ட் 16ஆம் தேதி மிக தீவிர புயலாக மாறிய ஹிலாரி 235 கி.மீ. வேகத்தில் மெக்சிகோ மற்றும் கலிபோர்னியாவை கடுமையாகத் தாக்கியது. ஹிலாரி புயலால் அமெரிக்காவில் ஏற்பட்ட சேதம் மட்டும் 675 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழையால் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் கொட்டிய கனமழையால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.

நிலநடுக்கம்

பிப்ரவரி 6ஆம் தேதி அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவுக் கொண்ட நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து 7.7 ரிக்டர் அளவுக் கொண்ட நிலநடுக்கமும் கடுமையாக துருக்கி மற்றும் சிரியாவை தாக்கின. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்பில் 59,259 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் துருக்கியில் மட்டும் 15 மில்லியன் மக்கள் அதாவது மக்கள் தொகையில் 16 விழுக்காட்டினர் பாதிப்பிற்கு உள்ளாகினர். 20 இலட்சம் மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். துருக்கி நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் 148.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கின்றனர்.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 (3)ஆம் தேதி நேபாளத்தை 6.4 ரிக்டர் அளவைக் கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் 157 பேர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டவர் காயமடைந்தனர்.

Otis புயல், லிபியா வெள்ளப் பெருக்கு, மொரோக்கோ நில நடுக்கம், சீனா வெள்ளப் பெருக்கு, அட்லாண்டிக் புயல்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சூறாவளிகள், துருக்கி-சிரியா நில நடுக்கம், ஆப்கானிஸ்தான் நில நடுக்கம் என அவலங்களைக் கூறிக்கொண்டேச் செல்லலாம். 2023ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, சூறாவளிகள், பெரும்புயல்கள், நிலச்சரிவுகள் என்பவைகளால் உயிரிழந்தவர்கள் 12,000 வரை இருக்கலாம். நில நடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இங்கு சேர்க்கப்படவில்லை.

கவலை தரும் போர்களும் மோதல்களும்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை பல வருடங்களாக நிலவிவருகிறது. பாலஸ்தீனத்தில் இருந்து இயங்கும் ஆயுத குழுவான ஹமாஸ் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் குழு இஸ்ரேலில் இருந்து 240க்கும் மேற்பட்ட நபர்களை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதுவரையில் 20,400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் ஏறக்குறைய 1,200 பேர் பலியாகியுள்ளனர்.

இதுபோல், 2022 பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் இடம்பெற்றுவரும் உக்ரைன்-இரஷ்யா போருக்கும் ஒரு முடிவு வந்ததாகத் தெரியவில்லை.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டுப் போர் ஆப்பிரிக்காவை ஆட்டிப் படைத்தது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான், ஏப்ரல் மாத உள்நாட்டுப் போரில் சின்னாபின்னமானது. இதில் ஏறக்குறைய 9000 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாண்டு ஜுலை மாதத்தில் மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடயே ஏற்பட்ட மோதலின்போது, இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். மணிப்பூர் கலவரம் தீவிரமடைந்து, 175க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க, 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்றைய சூழலில், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடு சூடான். தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக 77 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். உக்ரைனிலிருந்தும் காசா பகுதியிலிருந்தும் மக்கள் இன்று அகதிகளாக வெளியேறி வருகின்றனர். ஏமனில் 2 கோடியே 16 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.

துப்பாக்கிச்சூடு கலாச்சாரம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அமெரிக்க துப்பாக்கி வன்முறைகள் தொடர்பான ஆவணக் காப்பகக் குறிப்பின்படி 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் மட்டுமே துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 25,198 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் வீதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 170 பேர் குழந்தைகள் 879 பேர் பதின்ம வயதினர் ஆவர். இந்த 25 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள். 2023 தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் வரை சராசரியாக நாளொன்றுக்கு 66 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய செயற்கை நுண்ணறிவு அதாவது, சாட்ஜிபிடி அறிமுகமாகியது. படைப்பாற்றல், கற்றல் மற்றும் கல்வி, வேலை, டிஜிட்டல் பாதுகாப்பு, ஏன் ஜனநாயகத்திலும் கூட தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடைய இந்த ChatGPT என்பது அடிப்படையில் ஒரு மெய்நிகர் ரோபோ. ஒரு மனிதனால் இதுவரை கூறப்பட்டு வந்த கருத்துகள், இனி ஒரு ரோபோட்டால் உருவாக்கப்பட்ட ஒரு வாதமாக இருக்கலாம். ஒருவர் நாள்கணக்கில் செய்யக்கூடிய பணிகளை, உதாரணமாக, ஒரு பெரிய ஆய்வு கட்டுரை எழுதுவதை,  சாட்ஜிபிடி(ChatGPT) சில நொடிகளில் செய்துகாட்டியது. இதில் பல்வேறு நன்மைகள் இருப்பினும், இதனால் பெரும் ஆபத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்திய விபத்துக்கள்

2023 நவம்பர் மாதம் தீபாவளியன்று உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் நடைபெற்ற விபத்தில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். 17 நாட்களின் கடும் முயற்சிக்குப் பிறகு அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

2023 ஜுன் மாதத்தில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் நடந்த கோர இரயில் விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2023ல் இந்தியா

மக்கள் தொகை எண்ணிக்கையில் இதுவரை முதலிடத்தை வகித்துவந்த சீனாவைத் தாண்டி, இந்தியா முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது. ‘வேர்ல்டு பாப்புலேஷன் ரிவியூ’ (World Population Review) அமைப்பின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.78 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகவும் உள்ளது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதி அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா. சந்திரயான்-3ன் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டது இது.

ஜி-20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்தியாவில் முதன்முறையாக, டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வழியாக 36 செயற்கைக் கோள்கள் மார்ச் 26ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்த ஆண்டு இந்திய சினிமாதுறை இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்துள்ளது. ‘RRR’ படத்தில் கீரவாணி இசை அமைத்து பெரிதும் வரவேற்பு பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அதேபோல் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது தமிழக இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கிய ‘தி எலிபண்ட் விஸ்பர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விளையாட்டு துறையிலும் இந்தியா சாதித்துள்ளது. சீனாவில் நடைபெற்ற ஆசியா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவு இந்தியா 100 பதக்கங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி 41 வெண்கலம் என 107 பதக்கங்களை குவித்து நான்காவது இடத்தைப் பிடித்தது.

இந்தியாவின் பெங்களூருவின் தும்கூரில் 615 ஏக்கர் பரப்பளவு கொண்ட, ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) நிறுவனத்தினால் திறக்கப்பட்டது. ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் என்ற கணக்கில் உற்பத்தி செய்யத் தொடங்கி இந்தியாவின் மொத்த ஹெலிகாப்டர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் திருஅவை

திருஅவையை எடுத்துக்கொண்டோமானால் கடந்த ஆண்டு, அதாவது 2023ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் இறைபதம் அடைந்ததோடு துவங்கியது. 2022ஆம் ஆண்டு இறுதி நாளில் மரணமடைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் நிலத்தடி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் என்று பார்த்தோமானால், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை காங்கோ குடியரசிலும், பிப்ரவரி 3 முதல் 5 வரை தென் சூடானிலும் இடம்பெற்ற திருத்தூதுப் பயணத்தையும், ஏப்ரல் 28 முதல் 30 வரை ஹங்கேரியில் இடம்பெற்ற திருத்தூதுப் பயணத்தையும், உலக இளையோர் தின கொண்டாட்டங்களையொட்டி ஆகஸ்ட் 2 முதல் 6 வரை போர்த்துக்கல்லில் இடம்பெற்ற திருத்தூதுப்பயணத்தையும், குறிப்பிடலாம். இது தவிர, ஆசியாவிலுள்ள மங்கோலியா நாட்டிற்கு முதன் முறையாக ஒரு திருத்தந்தையின் திருப்பயணம் செப்டம்பர் மாத துவக்கத்தில் இடம்பெற்றது. மேலும், அதே மாதத்தின் 22 மற்றும் 23 தேதிகளில் பிரான்சின் மர்செய்ல்ஸ் நகர் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடல்பயணத்தின்போது உயிரிழந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் மாலுமிகளுக்கு என எழுப்பப்பட்ட நினைவகத்தில் மதத்தலைவர்களுடன் இணைந்து செபித்தார்.

இந்த 6 நாடுகளில் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, காலநிலை மாற்றம் குறித்து நாடுகளின் தலைவர்களின் உடனிருப்புடன்  கடந்த ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் இடம்பெற்ற COP28 கூட்டத்திலும் கலந்துகொள்ள பயணத்திட்டங்களை வகுத்திருந்தார். ஆனால், இறுதி நேரத்தில் இடம்பெற்ற உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவர்களின் ஆலோசனைப்படி இப்பயணத்திட்டம் கைவிடப்பட்டது.

ஏனைய மிக முக்கிய நிகழ்வுகள் என்று பார்த்தோமானால், திருஅவையில் 21 புதிய கர்தினால்கள், செப்டம்பர் 30 ஆம் தேதி திருத்தந்தையின் தலைமையில் இடம்பெற்ற திருவழிபாட்டில், கர்தினால்களாக உயர்த்தப்பட்டதும், அதைத் தொடர்ந்து அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் தேதி உலக ஆயர்கள் மாமன்றத்தின் கூட்டம் துவங்கி அதே மாதம் 29 ஆம் தேதி முடிவடைந்ததையும் குறிப்பிடலாம்.

நல்லவைகளை நோக்கி

இவ்வுலகில் நல்லவைகளும் இடம்பெற்றுள்ளன. மருத்துவத்துறையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. Alzheimer எனப்படும் மறதித் தொடர்புடைய நரம்பு மண்டல நோய்க்கு சிகிச்சை, புற்று நோய்க்கான சிகிச்சை, பல நோய்களை முற்றிலுமாக அழிக்கும் முயற்சி போன்றவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.

புதைபடிவ எரிமங்களைப் பயன்படுத்துவதிலிருந்து விலகி நிற்க ஏறக்குறைய 200 நாடுகள் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஈக்குவதோர் நாட்டில் பாதுகாக்கப்பட்ட அமேசான் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க பூமியில் துளையிட எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் வாக்களித்து அதில் வெற்றி கண்டுள்ளனர்.

20 ஆண்டுகளாக தொடர்ந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக, உலகின் பெருங்கடல்களை பாதுகாப்பது குறித்த ஒப்பந்தம் ஐ.நா. உறுப்பினர் நாடுகளிடையே கையெழுத்திடப்பட்டது.

பூர்வீகக் குடிமக்களின் நிலம் குறித்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படும் நிலை வேகமெடுத்து வருகின்றது.

விண்வெளி ஆய்வு மிகப் பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வளமான மேற்கை நோக்கி ஓடிய நாடுகள் இன்று விண்ணை நோக்கி ஆட்களை அனுப்ப துணிந்து வருகின்றன. இன்று, 77  நாடுகளில் விண்வெளி நிறுவனங்கள் உள்ளன. 16 நாடுகள் விண்வெளிக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் விண்கலங்களைக் கொண்டுள்ளன. நிலவில் ஆய்வுச் செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்போது அதையும் தாண்டி, இந்தியா, சூரியனுக்கான தன் ஆய்வைத் துவக்கியுள்ளது.

வருங்காலத்தில் உலக இளையோருள் 80 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் இருப்பர் என கூறப்படும் நிலையில், இவர்களின் கல்வி, நலவாழ்வு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து இன்றே திட்டமிட்டு செயல்பட வேண்டியதும் அவசியம்.

2023ஆம் ஆண்டின் இரு பக்கங்களையும் பார்த்துள்ள நாம், 2024ஆம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்ற நம் எதிர்பார்ப்புகளை வெளியிட்டு செயல்படுத்துவோமா?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2024, 12:53