தேடுதல்

உலகில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டும் Open Doors அமைப்பின் வரைபடம் உலகில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டும் Open Doors அமைப்பின் வரைபடம்  

கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன

ஆசிய கிறிஸ்தவர்களில் ஐந்துக்கு இருவரும், ஆப்ரிக்க கிறிஸ்தவர்களில் ஐந்துக்கு ஒருவரும் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடந்த 30 ஆண்டுகளிலேயே 2023ல்தான் மிக அதிகமாக இருந்ததாக, Open Doors என்ற அமைப்பு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகில் இடம்பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாகக் கண்காணித்துவரும் இவ்வமைப்பு, 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023 செப்டம்பர் வரை திரட்டிய புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் 36 கோடியே 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர், அதாவது, உலகில் ஏழு கிறிஸ்தவர்களில் ஒருவர் தனது கிறிஸ்தவ நம்பிக்கைக்காக அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கிறது.

ஜனவரி 17, இப்புதனன்று, உரோமையிலுள்ள இத்தாலியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு எடுத்துக்காட்டியுள்ள Open Doors அமைப்பு, கிறிஸ்தவர்கள் மிக மோசமான துன்புறுத்தலை எதிர்கொள்ளும் ஐம்பது நாடுகளையும் அதில் வரிசைப்படுத்தியுள்ளது.

வடகொரியா முதலிடத்தில்

கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக வட கொரியா மீண்டும் தோன்றுகிறது என்றும், அரசின் கிறிஸ்தவ விரோத நடவடிக்கைகளால் கைது செய்யப்படும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, கிறிஸ்தவர்களுக்கு முற்றிலும் சுதந்திரம் இல்லை என்றும், திருவிவிலியத்தை வைத்திருப்பது கூட கடுமையான குற்றம், மற்றும் அதற்குக் கடுமையான தண்டனை உண்டு என்றும் கூறுகிறது.

கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு நைஜீரியா மிகவும் ஆபத்து நிறைந்த நாடு எனவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11லிருந்து 13 ஆக உயர்வு

கிறிஸ்தவ ஆலயங்களும் கிறிஸ்தவர்களின் உடைமைகளும் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகும் நாடுகள் 2022ஆம் ஆண்டு அறிக்கையில் 11 ஆக காண்பிக்கப்பட்டிருக்க, இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டில் 13 ஆக உயர்ந்துள்ளதாகவும் எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, ஆசியாவில் வாழும் கிறிஸ்தவர்களில் ஐந்துக்கு இருவர் என்ற விகிதத்திலும், ஆப்ரிக்க கிறிஸ்தவர்களில் ஐந்துக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கிறது.

கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவ கல்வி நிலையங்கள், கிறிஸ்தவ மருத்துவமனைகள், கல்லறைகள் போன்றவைகளின் மீதான தாக்குதல்கள் கடந்த ஆண்டில் 7 மடங்கு அதிகரித்திருந்ததாகவும் கூறும் Open Doors அமைப்பு, இந்தியாவில் வன்முறைக் கும்பல்களின் தாக்குதல்கள், சீனாவில் கோவில்கள் மூடப்படுதல், நைஜீரியா, நிகரகுவா, எத்தியோப்பியா ஆகியவைகளில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2024, 15:21