விடை தேடும் வினாக்கள் – முன்னுரை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
வாழ்க்கை என்பது கேள்விகளால் நிறைந்தது. கேள்வியில் துவங்கி கேள்வியில் முடிவது வாழ்க்கை. வாழ்வின் கேள்விகள் அனைத்திற்கும் விடை கண்டவர் என்று இன்றுவரை எவரும் இல்லை. தொழில் நுட்பம் என்பது வேகவேகமாக வளர்ந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் கூகுள் என்ற காலத்தை தாண்டிக் கொண்டிருக்கிறோம். நம் கேள்விகளுக்கான பதில்களை தேடிக்கண்டுபிடிப்பதாக, கேட்கும் விடயங்களை, ஏற்கனவே பதிவுச் செய்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலிருந்து நமக்குக் காட்டுவதாக, அதாவது, ஒரு தேடு மென்பொருளைத்தான் இதுவரை நாம் கண்டு வந்துள்ளோம். ஆனால் இன்றோ, நமக்கான விடயங்களை தேடிக்கண்டுபிடித்து, நமக்கு என்ன தேவையோ அதனை வடிவமைத்து, அதாவது தேடியவைகள் துணை கொண்டு உருவாக்கித் தரும் ஓர் AI, அதாவது செயற்கை நுண்ணறிவின் வெற்றியான, சேட்ஜிபிடி என்ற மெய்நிகர் ரோபோ போல் கணனியில் செயல்படும் மென்பொருளை உலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் அற்புதமான மென்பொருள் என புகழப்பட்டாலும், இதனால் மனிதனின் சிந்தனைத்திறன் முடக்கப்படுவது மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் கணனி மென்பொருளையே சார்ந்திருக்கும் ஒரு நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை சிறிது கற்பனைப் பண்ணிப் பார்த்தால், கேள்விகள் மட்டுமே கேட்பவனாக மனிதன் இருப்பான், அதேவேளை, அவனுக்கான பதில்கள் எல்லாம் பிறரால் நிர்ணயிக்கப்பட்டு, ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு தயாராக இருக்கும் என்ற பயம்தான் வருகிறது. அனைத்திற்கும், இது இப்படித்தான் என்ற பொதுவான ஓர் எண்ண ஓட்டம் உருவாக்கப்பட்டிருக்கும், அதைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் முதலாளிகளின், பெரும் உற்பத்தியாளர்களின் ஆதரவுடன்கூடிய அறிவியலாளர்களின் குழு மக்களின் எண்ண ஓட்டத்தை வழி நடத்திக்கொண்டிருக்கும். நமக்கு என்ன தேவை, எது நல்லது, நாம் எப்படிப் போக வேண்டும், எந்த கடையில் வாங்கவேண்டும் என அனைத்தும் நமக்காக மென்பொருள்களால் நிர்ணயிக்கப்படும். கேள்விகள் கேட்கத்தான், அதுவும் நம் தேவைகள் குறித்த கேள்விகளைக் கேட்கத்தான் உரிமையிருக்கும், முடிவுகளை எடுக்க நமக்கு உரிமையிருக்காது என்ற ஒரு மாயநிலை நோக்கித்தான் நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய ஒரு பின்னணியில் இருக்கும் நாம், அன்று இயேசு வரலாற்றில் கேட்ட கேள்விகளை இன்று நம் வாழ்வில் புகுத்திக் கேட்பது இந்த புதிய தொடர் நிகழ்ச்சியின் நோக்கம். ‘ஒரு மனிதனை அவன் கூறும் பதில்களை வைத்தல்ல, மாறாக, அவன் கேட்கும் கேள்விகளை வைத்து மதிப்பீடுச் செய்’ என்றவர் பிரெஞ்ச் அறிஞர் வால்ட்டர். ‘எக்காலத்திலும் கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்திவிடாதிருப்பதே முக்கியம்’ என்றவர் ஜெர்மனியில் பிறந்த அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டெய்ன்.
வாழ்வின் முக்கிய கேள்விகள்
அன்புள்ளங்களே, நம் வாழ்வின் நான்கு முக்கிய கேள்விகள் என்றுப் பார்த்தோமானால், நான் யார்?, நான் எங்கிருந்து வருகிறேன்?, இங்கு என் நோக்கம் என்ன?, நான் எங்கு செல்கிறேன்? என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் இத்தகைய கேள்விகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. வாழ்க்கை ஓட்டத்தில் நாம் சந்திக்கும் சூழல்களுக்கு ஏற்ப அந்தந்த நிலைக்குத் தேவையான கேள்விகளையும், அதற்கான விடைகளையும் நாமே நிர்ணயித்துக் கொள்கின்றோம். முக்கியக் கேள்விகளுக்கு விடை தேடத் தேவையில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
விவிலியத்தில் காணப்படும் இயேசுவின் கேள்விகளுக்குச் செல்வதற்கு முன்னால், நம் வாழ்வின் துவக்கத்தைக் கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். நமக்குத் தெரிந்த குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்தவுடன், அதாவது, இவ்வுலகிற்கு புது மனிதன் ஒருவன் வந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நம் பதில் மொழி என்ன என சிந்தித்துப் பாருங்கள். என்ன குழந்தை? ஆணா, பெண்ணா? அல்லது, குழந்தை அப்பாவைப் போலவா, அம்மாவைப் போலவா? கருப்பா, சிகப்பா?, நல்ல ஆரோக்கியத்தோடு உள்ளதா? என கேள்விகளைத்தான் கேட்கிறோம். வாழ்வில் துவக்கமே கேள்வியோடுதான், கேள்விகுறியோடுதான் முளைவிடுகிறது. இப்போது, இயேசுவின் வாழ்வை, அதாவது, விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளதன் துணைகொண்டு கொஞ்சம் உற்று நோக்குவோம்.
கேள்வியோடு துவங்கும் வாழ்வு
கபிரியேல் தூதரின் வார்த்தைகளைக் கேட்டு அன்னை மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என கேட்கிறார். இது எப்படி நிகழும் என்பதுதான் அன்னமரியா விவிலியத்தில் கூறும் முதல் வார்த்தை.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு குறித்த அறிவிப்பிலும் இதைத்தான் பார்க்கிறோம். குழந்தை பிறக்கும் என்பது அறிவிக்கப்பட்டவுடன் செக்கரியா வானதூதரிடம், “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்கிறார்.
மகிழ்ச்சிச் செய்தியை அறிந்தபின், மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று, எலிசபெத்தை வாழ்த்தியபோது, எலிசபெத்தின் பதில்மொழி என்ன? பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என கேட்கிறார்.
எலிசபெத்துக்கு குழந்தை பிறந்ததும், அங்கு நடந்தவைகளைக் கண்ட மக்களின் உள்ளப்போக்கு, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்ற கேள்வியை எழுப்புவதைக் காண்கிறோம்.
அதன்பின், ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறக்கிறார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்கிறார்கள்.
இப்போது அப்படியே, பன்னிரண்டு வயது இயேசுவைச் சந்திக்க எருசலேம் கோவிலுக்குச் செல்வோம். விழாவைக் கொண்டாட எருசலேம் சென்ற சிறுவன் இயேசு, விழா நாள்கள் முடிந்து பெற்றோர் திரும்பியபோது, அங்கேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது. அவரை உறவினர்களிடையேயும் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பி வருகிறார்கள் இயேசுவின் பெற்றோர். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டபோது, அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார் எனப் பார்க்கிறோம்.
அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்கிறார். இயேசு அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று, கேள்விக்கான பதிலை உள்ளடக்கிய கேள்வியை முன்வைக்கிறார்.
இந்த 12 வயதின் நிகழ்வுக்குப்பின், நாம் இயேசுவை, யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வருவதில் சந்திக்கிறோம். அப்போது யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுப்பதையும், பின்னர் திருமுழுக்கு வழங்குவதையும் பார்க்கின்றோம். திருமுழுக்கு யோவானின் இரு சீடர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்ட இயேசு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்க, அவர்களோ, “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்கிறார்கள். இப்படி, இயேசுவின் வாழ்வின் துவக்கத்திலிருந்தே கேள்விகள் ஒரு மிக முக்கிய அங்கம் வகிப்பதைப் பார்க்கிறோம். நான்கு நற்செய்திகளையும் மொத்தமாக எடுத்துப் பார்ப்போமானல், மொத்தம் 305 கேள்விகளை இயேசு கேட்டுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பல கேள்விகள் ஒன்றையொன்று ஒத்திருப்பவைகளாகவும், சில, ஒரேவிதமான பதிலை எதிர்பார்ப்பவைகளாகவும் உள்ளன. ஏனெனில், இந்த ஆய்வாளர்கள் 4 நற்செய்திகளிலும் காணப்படும் அனைத்து கேள்விகளையும் திரட்டி 305 என்கின்றனர். ஆகவே, இவைகளுள் ஒரு சிலவற்றை, அதாவது, நம் வாழ்வுக்கு முக்கியமானவைகளை மட்டும் நம் ஆய்வுக்கு என எடுத்துக்கொள்வோம்.
கேள்விகளின் வகைகள்
இயேசுவின் கேள்விகளை நாம் வகைப்படுத்தினோமானால், அவைகளை நாம் மூன்று வகைகளுக்குள் உள்ளடக்கிவிடலாம். ஒன்று அவர் ஆர்வம் கொண்டு கேட்ட கேள்விகள். அதாவது, ஏன், எவ்வாறு என்ற கேள்வியை உள்ளடக்கியவைகள். புனித பேதுரு நீரில் மூழ்க இருந்தபோது, இயேசு கையை நீட்டி அவரைப் பிடித்து, ஏன் ஐயம் கொண்டாய்?(மத், 14:31) என கேட்பது, கப்பர்நகூமில் மறைநூல் அறிஞரை நோக்கி, உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?(மாற் 2:8) என கேட்பது போன்ற கேள்விகளை இங்கு குறிப்பிடலாம்.
இயேசுவின் கேள்விகளுள் ஏறக்குறைய எண்பது, ஏன், எப்படி என்ற கேள்விக்குறியை உள்ளடக்கியவைகளாகத்தான் உள்ளன. இத்தகைய ஆர்வக் கேள்விகளை இயேசு கேட்டதன் பொருள் என்ன?. இறைவனாகவும் மனிதனாகவும் இருந்த இயேசு, இதன் பதில்களை தெரிந்தவராகத்தான் இருந்தார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இருப்பினும், அவர் வெளிப்படையாக இக்கேள்விகளை முன்வைத்தார் என்றால் அது நமக்காக, நாம் நம் விசுவாசத்தில் வளர உதவுவதற்கு. நம் விசுவாசம் குருட்டுத்தனமானது அல்ல. கேள்விகளும் அவ்வப்போது தோன்றும்போது விசுவாசம் தெளிவடைகின்றது, வளர்கிறது.
இரண்டாவது வகை என்னும்போது, நாம் ஒரு திறந்த மனதுடன் கூடிய பதிலை எதிர்பார்க்கும் கேள்விகளைப் பார்க்கலாம். அதாவது, ஆம், இல்லை என்று மட்டும் சொல்லி பதிலளிக்க முடியாத கேள்விகள். பதிலளிக்கும் முன் சிறிது நேரமாவது சிந்திக்க வைக்கும் கேள்விகளை இந்த வகையில் நாம் குறிப்பிடலாம். “என்ன தேடுகிறீர்கள்?”(யோவா 1:38) , “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? (மாற் 10:18) என்பன போன்ற கேள்விகளை இந்த வகையில் சேர்க்கலாம்.
மூன்றாவது வகை கேள்விகள் என்று பார்த்தோமானால், அவை உண்மையிலேயே நமக்கு சவால் விடுக்கும் கேள்விகள். இயேசுவின் இத்தகைய கேள்விகள் நமக்குள் உண்மையிலேயே சவாலாக இருக்கின்றன. தனக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக உரைத்த புனித பேதுருவிடம் இயேசு, எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? (யோவான் 13:38) எனக் கேட்பதும், தம் சீடரை நோக்கி, மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?(மத் 16:26) எனக் கேட்பதும் இவ்வகையின் கீழ் சேர்க்கப்படலாம்.
இறைவனிடம் கேள்விகள்
இதையெல்லாம் தாண்டி, ‘எப்போது’ என்ற கேள்வியுடன் வருபவைகள் குறித்து ஆய்வு செய்தோமானால், இத்தகைய ஒரு கேள்வியை இயேசு ஒருமுறைக் கூட தன் வாழ்வில் கேட்டதாக விவிலியத்தில் நாம் வாசிக்கவில்லை. ஆனால், நம் வாழ்வில் இது மிக மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. எப்போது ஆண்டவா எனக்கு வேலை கிடைக்கும், நிம்மதி கிட்டும், திருமணமாகும், குழந்தை பிறக்கும் என பலமுறை ஆண்டவனை நோக்கியே இந்த கேள்விகளைக் கேட்டுள்ளோம்.
இயேசு கிறிஸ்து பல கேள்விகளைக் கேட்டிருந்தாலும், அவரை நோக்கியும் ஏறக்குறைய 183 கேள்விகள் கேட்கப்பட்டதாக விவிலியத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மூன்றுக்குத்தான் அவர் நேரடியாக பதில் தருகிறார். ஒரு கேள்விக்கு இயேசு பதில் தரும்போது, அதற்குள் நூறு கேள்விகள் மறைந்திருக்கின்றன என்பதும் பொய்யல்ல. தன்னிடம் கேள்வி கேட்பவர்களை கேள்விகளாலேயே மடக்குவது இயேசுவுக்கு கை வந்த கலை. இத்தகைய கேள்விகளுள் 29 கேள்விகளை முக்கியமானவைகளாக நோக்கலாம்.
ஆனால், எவரையும் திணறடிக்க விரும்பாமல், அதேவேளை பதிலை உள்ளடக்கியதாக இருக்கும் அவரின் முதல் கேள்வி குறித்து நாம் வரும் வாரம் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்