தடம் தந்த தகைமை : யோனத்தானின் தீரச் செயல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒருநாள் சவுலின் மகன் யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி “வா, நமக்கு எதிரே அந்தப் பக்கம் இருக்கின்ற பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் செல்வோம்” என்றார். ஆனால் இதைத் தம் தந்தையிடம் சொல்லவில்லை. சவுல் கிபயாவின் எல்லையில் மிக்ரோனிலிருந்து ஒரு மாதுளை மரத்தின் கீழ் காத்திருந்தார். அவரோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறு பேர். அப்போது சீலோவில் ஆண்டவரின் குரு ஏலியின் மகன் பினகாசுக்குப் பிறந்த இக்காபோதின் சகோதரனான அகிப்தூபின் மகன் அகியா ஏபோதை அணிந்திருந்தான். யோனத்தான் சென்றிருந்தது மக்களுக்குத் தெரியாது.
யோனத்தான் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் செல்ல முயன்ற கணவாயில் இப்பக்கமும் அப்பக்கமும் செங்குத்தான பாறைகள் இருந்தன. ஒன்று ‘போட்சேசு’ என்றும் மற்றொன்று ‘செனே’ என்றும் அழைக்கப்பட்டன. ஒரு தூண் பாறை வடக்கே மிக்மாசுக்கு எதிரிலும், மற்றொன்று தெற்கே கிபாவுக்கு எதிரிலும் இருந்தன.
யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி “வா, இந்த விருத்தசேதனம் அற்றோரின் எல்லைக்காவலுக்குக் கடந்து செல்வோம். ஒரு வேளை ஆண்டவர் நம் சார்பாகச் செயல்படுவார். ஏனெனில், சிலரைக் கொண்டோ பலரைக் கொண்டோ மீட்பு அளிப்பதில் ஆண்டவருக்குத் தடையில்லை” என்றார். அதற்கு, அவரின் படைக்கலன்களைத் தாங்குவோன், “உம் மனம் போல் செய்யும். நீர் முதலில் செல்லும். உம் மனத்திற்கேற்ப செய்யுமாறு நான் உம்மோடு இருக்கிறேன்” என்று சொன்னான். பிறகு, யோனத்தான், “இதோ! நாம் கடந்து அம்மனிதரிடம் சென்று, நம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். அவர்கள் நம்மிடம் ‘நாங்கள் உங்களிடம் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்று கூறினால், நாம் அவர்களிடம் செல்லாமல் நம் இடத்திலேயே நிற்போம். மாறாக, ‘எங்களிடம் வாருங்கள்’ என்று சொன்னால் நாம் அவர்களிடம் செல்வோம். ஆண்டவர் அவர்களை நம்மிடம் ஓப்படைத்துள்ளார் என்பதற்கு இதுவே அடையாளமாய் இருக்கும்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்