தடம் தந்த தகைமை – அரசன் ஆகாபு கண்டிக்கப்படுதல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறைவாக்கினர் குழுவைச் சார்ந்த ஒருவர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க தம் தோழன் ஒருவனை நோக்கி, “என்னை அடி” என்றார். அவனோ அவரை அடிக்க மறுத்துவிட்டான். அவர் அவனைப் பார்த்து, “நீ ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனதால், நீ என்னைவிட்டு அகன்றவுடன் ஒரு சிங்கம் உன்னை அடித்துக் கொல்லும்” என்றார். அவ்வாறே அவன் அவரை விட்டுச் செல்கையில் ஒரு சிங்கம் அவனைக் கண்டு அடித்துக் கொன்றது. அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, “என்னை அடி” என்றார். அம்மனிதனோ அவரைக் காயமுற அடித்தான். அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று தம் கண்ணைக் கட்டிக்கொண்டு, மாறுவேடத்தில் அரசனுக்காக வழியில் காத்திருந்தார்.
அவ்வழியே அரசன் வந்தபோது அவர் அரசனை அழைத்து, “உம் அடியான் போர்க்களத்தினுள் நுழைந்தபோது ஒருவன் திரும்பி என்னிடம் ஓர் ஆளைக் கொண்டு வந்து, ‘இம்மனிதனைக் காவல் செய். அவன் தப்பி ஓடினால், அவன் உயிருக்கு ஈடாக உன் உயிரையோ நாற்பது கிலோ நிறையுள்ள வெள்ளியையோ கொடுக்க வேண்டும்” என்றார். உம் அடியான் இங்குமங்கும் வேலையாய் இருந்தபோது, அவனைக் காணவில்லை” என்றார். இஸ்ரயேலின் அரசன் அவரைப் பார்த்து “உன் தீர்ப்பை நீயே உனக்கு அளித்துவிட்டாய்” என்றான். உடனே அவர் தமது கண்கட்டை அவிழ்த்துக் கொள்ளவே, இஸ்ரயேலின் அரசன் அவர் இறைவாக்கினருள் ஒருவர் என்று அறிந்து கொண்டான். அப்போது இறைவாக்கினர் அரசனை நோக்கி, “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சாவுக்குக் குறிக்கப்பட்டவனை நீ உன் கையிலிருந்து தப்பிப் போகும்படி செய்ததால், அவன் உயிருக்குப் பதிலாக உன் உயிரையும் அவன் மக்களுக்கு ஈடாக உன் மக்களையும் எடுத்துக் கொள்வேன்” என்றார். இஸ்ரயேலின் அரசனோ ஆத்திரமும் கோபமும் கொண்டவனாய் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்