தடம் தந்த தகைமை – கைது செய்யப்பட்ட இறைவாக்கினர் மீக்காயா
மெரினா ராஜ் – வத்திக்கான்
மீக்காயா மீண்டும் கூறியது: “ஆண்டவரின் வாக்கைக் கேளும்; ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும் இடத்திலும் நின்றனர். அப்பொழுது ஆண்டவர் ‘இராமோத்து-கிலயாதைத் தாக்கி வீழ்ச்சியுறும்படி ஆகாபைத் தூண்டிவிடக் கூடியவன் யாரேனும் உண்டா?’ என்று கேட்டார். அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, வேறொருவன் வேறொன்றைச் சொன்னான். இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, ‘நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.’ என்றது. அதற்கு ஆண்டவர், ‘அது எப்படி?’ என்றார். அப்பொழுது அது, ‘நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்’ என்றது. அதற்கு அவர், ‘நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்’ என்றார். ஆதலால், இங்குள்ள உம்முடைய எல்லாப் போலி இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும்படி ஆவியை ஆண்டவர் ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்குத் தீங்கானவற்றையே கூறியிருக்கிறார்” என்றார்.
அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா, மீக்காயாவின் அருகே வந்து, அவரைக் கன்னத்தில் அறைந்து, “ஆண்டவரின் ஆவி உன்னிடம் பேசும்படி எப்படி என்னை விட்டுவிட்டு வந்தது?” என்று கேட்டான். அதற்கு மீக்காயா, “நீ உன் அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளன்று, அதைத் தெரிந்து கொள்வாய்” என்றார். அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் கட்டளையிட்டது: “மீக்காயாவைக் கைது செய்து அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும் அரசனின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள். நீங்கள், ‘அரசர் கூறுவது இதுவே; போரை முடித்து நலமாய் நான் திரும்பும் வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள். இவனுக்குச் சிறிதளவு அப்பமும் தண்ணீருமே கொடுத்து வாருங்கள்” என்றும் கூறுங்கள். அப்பொழுது மீக்காயா, “நலமாய் நீர் திரும்பி வந்தீரானால், ஆண்டவர் என் மூலம் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே! நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்