தடம் தந்த தகைமை - நாபோத்தின் திராட்சைத் தோட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. ஆகாபு நாபோத்திடம், “உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகிலிருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்து விடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்” என்றான். அதற்கு நாபோத்து ஆகாபிடம், “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!” என்றான். “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்” என்று இஸ்ரயேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான்.
அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து “நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?” என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் அவளிடம், “நான் இஸ்ரயேலனாகிய நாபோத்திடம் பேசினேன். ‘உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்து விடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்’ என்றேன். அதற்கு அவன் ‘என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டான்” என்றான். அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி “இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்” என்றாள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்