தேடுதல்

தன் சீடர்களுடன் இயேசு தன் சீடர்களுடன் இயேசு 

தடம் தந்த தகைமை – நத்தனியேலின் உண்மைத்தன்மை

உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறும் இவ்வுலகில் உள்ளிருந்ததையும், உணர்ந்ததையும் ஒளிவு மறைவின்றிச் சொன்ன நத்தனியேலின் உண்மைத்தன்மை இயேசுவுக்குப் பிடித்திருந்தது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நத்தனியேல் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று கூறினார். நத்தனியேலோ, “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கிறார். இயேசுவோ, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளிக்கிறார்.

இஸ்ரயேலருக்குள் சில குறுகிய எண்ணங்கள் குடியிருந்தன. யாவே கடவுள் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவர்; தங்களை மட்டுமே தேர்ந்துள்ளார்; தங்கள் பலியை மட்டுமே ஏற்கிறார்; அவரது உடன்படிக்கை தங்களோடு மட்டும்தான் எனக் கடவுளைத் தங்களுக்குள் கரைகட்டி வைத்தனர். அது நற்பார்வை அல்ல; அவர் எல்லாருக்கும் சொந்தமானவர் என்ற உண்மையை இயேசு தன்னுள் கொண்டிருந்தார். அதனை அப்பட்டமாகப் பிலிப்புவிடம் சொன்னவர் கானாவைச் சார்ந்த நத்தனியேல். உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறும் இவ்வுலகில் உள்ளிருந்ததையும், உணர்ந்ததையும் ஒளிவு மறைவின்றிச் சொன்ன நத்தனியேலின் உண்மைத்தன்மை இயேசுவுக்குப் பிடித்துப் போயிற்று. அவரது திறந்த மன, நேரிய சொல்திறன் கண்டு “கபடற்றவர்” எனச் சான்றளித்துத் தம்மைப் பின்தொடர அடித்தளமிடுகின்றார். இறையாட்சிப் பணியாளர் ஒவ்வொருவரும் உண்மை உணர்வோடும், கபடற்ற உள்ளத்தோடும் பணியாற்ற வேண்டும் என்ற இயேசுவின் ஏக்கம் நம் வழியாக ஆக்கம் ஆகட்டும். உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றுதலே ஞானம்.

இறைவா! உண்மையைத் தவிர உலகில் வேறு எதுவும் உயர்ந்ததில்லை என உணரும் உள்ளம் தாரும்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2024, 12:50