கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரமும், பவுலின் மனமாற்றமும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சவுல் பவுலாக மாறிய திருநாளை நாம் ஜனவரி 25 அன்று கொண்டாடுகிறோம்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதி நாளாகிய ஜனவரி 25ஆம் தேதி இது கொண்டாடப்படுகின்றது. ‘புறவினத்தாரின் திருத்தூதர்’ என்று அழைக்கப்படும் தூய பவுலின் மனமாற்றப் பெருவிழாவை இந்நாளில் கொண்டாடுகிறோம். திருஅவை உலகெங்கும் இன்று பரவியிருக்கிறது என்று சொன்னால் அதற்கு அடித்தளமிட்டவர் தூய பவுல் என்பதை எவராலும் மறுக்க முடியாது. கடவுளின் அழைப்பைப் பெறுவதற்கு முன் திருஅவையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி, ஒழிக்க முயன்றவர் இவர்.
'கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தேன். சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன்' (திப 22:4) என்று தன்னைப் பற்றி அவரே அறிக்கையிடுவதை விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். ஆனால் அவரேதான் பின்னர் உரோமையருக்கு எழுதிய திருமடலின் தொடக்கத்தில், 'இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது' (உரோ 1:1) என தன்னைப் பற்றிப் பெருமையுடன் எழுதுகின்றார்.
இனி வாழ்பவன் நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்று கூறக்கூடிய நிலையை அடைகிறார் இவர். அதோடு மட்டுமல்ல, தன் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தார்க்கு அறிவிக்குமாறு உயரிய பணியையும் இறைவனிடமிருந்துப் பெறுகிறார்.
தூய பவுல் கி.பி. 9ஆம் ஆண்டளவில் யூதாவின் பன்னிரு குலங்களில் ஒன்றான பெஞ்சமின் குலத்தில் பிறந்தார். இவரது யூதப் பெயர் சவுல். இன்றைய துருக்கி நாட்டின் பகுதியான சிலிசியா மாநிலத்தின் உரோமைக் குடியிருப்பான தர்சு நகரத்தில் இவரது குடும்பம் வாழ்ந்து வந்ததாக அறிகிறோம். செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இவரது குடும்பத்திற்கு உரோமைக் குடியுரிமையும் இருந்தது. இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கற்றறிந்தார். அக்காலத்தில் பிரபலமாக இருந்த கிரேக்க மொழியில் புலமைப் பெற்றிருந்தார். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பாலஸ்தீனாவில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கிறிஸ்தவ மதத்தை அடியோடு அழிக்க நினைத்து, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களை சிறையில் அடைக்க நினைத்தவரே கிறித்துவுக்காக உயிர் துறக்க துணிந்த புதுமை இவரில் இடம்பெறுகிறது. அவர் கிறிஸ்துவுக்காக அனுபவித்தத் துன்பங்களையும் அவரே பட்டியிலிட்டுக் காட்டுவதை கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலில் நாம் காண்கிறோம். ‘பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது’(2கொரி 11:23-28), என உரைக்கிறார் புனித பவுல். இவ்வளவு துன்பங்களை வரிசையாக அடுக்கிக்கொண்டேப் போகும் புனித பவுல், இறுதியாக உரைக்கும், ‘எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது’ என்பது சிந்திக்கப்பட வேண்டியது. அந்நாட்களிலும் பல்வேறு பகுதிகளின் திருஅவைகளுக்குள் முரண்பாடுகள், தப்பெண்ணங்கள், மனக்கசப்புகள் இருந்தன. இன்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்கிடையே முரண்பாடுகளும், பிரிவினைகளும் கொட்டிக் கிடப்பதைக் காண்கிறோம். இவைகளையெல்லாம் களைந்து, கிறிஸ்துவின் ஒரே உடலாக நாம் மாறவேண்டும் என்ற முயற்சிகளின், தொடர் செபத்தின் ஒரு பகுதியே இந்த கிறிஸ்தவ ஒன்றிப்புவாரக் கொண்டாட்டங்கள். கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். பல்வேறு பகுதிகளின் திருஅவைகள் குறித்துக் கவலைகொண்டிருந்த புனித பவுலின் மனமாற்ற திருவிழா அன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
தூய பவுலின் மனமாற்றம் அவருக்கு மட்டுமல்ல, திருஅவையின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில், தூய பவுலின் மனமாற்றத்திற்குப் பின்தான் இயேசுவின் நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
ஒருமுறை கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில்தான் ஆண்டவர் இயேசு அவரைத் தடுத்து ஆட்கொள்கிறார். அவரை புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவுக்கும் கருவியாக ஏற்படுத்துகிறார்.
பவுலின் மனமாற்றம் நமக்குத் தரும் செய்திகளுள் ஒன்று, கிறிஸ்தவர்களில் கிறிஸ்து வாழ்கிறார் என்பது. புனித பவுல் எருசலேமிலிருந்து தமஸ்கு நகரை நோக்கிச் செல்கிறபோது, வானத்திலிருந்து தோன்றிய ஒளியானது அவரைச் சூழ்ந்துகொள்ள அவர் தான் பயணம் செய்த குதிரையிலிருந்து கீழே இடறி விழுகிறார். அப்போது அவர், "ஆண்டவரே நீர் யார்? என்று கேட்கிறார். அதற்கு இயேசு, "நீ துன்புறுத்தும் இயேசு நானே" என்கிறார் (திப 9:6). இங்கே இயேசு தன்னை கிறிஸ்தவர்களோடு, திருஅவையோடு இணைத்துகொள்கிறார், அல்லது அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது உண்மை. நாம் நம்மோடு வாழும் சகோதரர் சகோதரிகளுக்கு ஒன்று செய்ய, அது இறைவனுக்கே செய்வதாகும் (மத் 25:40) என்ற உண்மையை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் அடுத்தவரில் ஆண்டவர் இயேசு இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து, எல்லாரையும் அன்புசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்