அமைதியும் உரையாடலும் சாத்தியம் என்பதை தயவுகூர்ந்து நம்புவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அமைதியும் உரையாடலும் சாத்தியம் என்பதை நாங்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறோம் என்றும் தயவுகூர்ந்து இதனை நம்புங்கள்! என்றும் கூறியுள்ளார் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி
புனித பூமியில் அமைதிக்கான ஒரு வார கால திருப்பயணத்தை முடித்துக் கொண்ட வேளை, வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், இஸ்ரேலிய மக்களும் பாலஸ்தீனிய மக்களும் ஆழமாகக் காயப்பட்டு துயருறும் இவ்வேளையில், திருஅவை அமைதிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளிப்பதையே தனது திருப்பயணம் நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும் கூறியுள்ளார்.
தனது பிரசன்னம் மற்றும் பயணத் தோழர்களின் உடனிருப்பு யாவும், ஒற்றுமையின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் ஃபிலோனி அவர்கள், யாரும் இங்கு வராத நேரத்தில், நாங்கள் இங்கே இருப்பது சாத்தியம் என்பதைக் காட்ட விரும்புகிறோம் என்றும், எங்களின் இந்த முயற்சி, திருப்பயணங்கள் மற்றும் மத சுற்றுலாவை நம்பியிருக்கும் பலரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் மீண்டும் தொடங்குவதற்கு உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெறும் பார்வையாளர்களாகவோ அல்லது வழிப்போக்கராகவோ இருக்க விரும்பவில்லை, மாறாக, பாதிக்கப்பட்ட மக்களின் மத்தியில் அவர்களில் ஒருவராகவே இருக்கவிரும்புகின்றோம் என்று எடுத்துக்காட்டினார் கர்தினால் ஃபிலோனி.
கடவுள் நமக்கு உதவ முடியும் என்ற நமது நம்பிக்கையுடன் நாம் ஒருவரொருவருடன் கரம்கோர்த்து செல்ல வேண்டும் என்பதையே கத்தோலிக்கராக, ஒரு திருஅவையாக நாங்கள் உலகிற்குச் சொல்ல விரும்புகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் ஃபிலோனி.
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இடம் இப்புனித பூமி என்று எடுத்துக்காட்டியுள்ள கர்தினால் ஃபிலோனி அவர்கள், உயிர்த்தெழுதல் என்பது நம்பிக்கை மற்றும், எதிர்காலதை அடையாளப்படுத்துகிறது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்