தேடுதல்

திருத்தந்தையுடன் கர்தினால் Beshara al-Rai திருத்தந்தையுடன் கர்தினால் Beshara al-Rai  (AFP or licensors)

இஸ்ராயேலுடன் போர் புரிவதை லெபனான் மக்கள் விரும்பவில்லை

கர்தினால் Beshara al-Rai : இஸ்ராயேலுடன் போரை மேற்கொள்ளவோ, நாட்டின் தென்பகுதியில் போர் பதட்டநிலைகளை அனுமதிக்கவோ லெபனான் நாடு ஒரு நாளும் முயலாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்ராயேலுடன் போரை மேற்கொள்ளவோ, நாட்டின் தென்பகுதியில் போர் பதட்டநிலைகளை அனுமதிக்கவோ  லெபனான் நாடு ஒரு நாளும் முயலாது என அறிவித்துள்ளார் அந்நாட்டின் மேரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Beshara al-Rahi.  

ஹமாஸ் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவர் Saleh el-Arouri கொலைச் செய்யப்பட்டதையொட்டி, லெபனனின் தென்பகுதி எல்லையில் பதட்டம் உருவாகும் என்ற அச்சம் நிலவிவரும் சூழலில், அத்தகைய போர்ச் சூழல் உருவாகாது என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் கர்தினால்.

Gaza Strip பகுதியில் நான்கு மாதங்களாக இஸ்ராயேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், லெபனான் நாடு இந்த போரில் கட்டாயமாக இழுக்கப்படுவதைத் தடுக்கவும், கத்தார், ஜோர்டான் உட்பட அரபு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் முயன்றுவரும் நிலையில் இது குறித்துக் கருத்து தெரிவித்த லெபனான் கர்தினால் Beshara al-Rahi அவர்கள், போரில் லெபனான் நாடு ஈடுபடாது என்ற உறுதியை வழங்கியுள்ளார்.  

இஸ்ராயேலுடன் போர் புரிவதை லெபனான் மக்கள் விரும்பவில்லை என்ற கர்தினால், காசா மோதல்களால் மத்தியக் கிழக்குப் பகுதியில் பதட்ட நிலைகள் உருவாகும் என்ற அச்சம் விரைவில் நீக்கப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

காசா பகுதியில் இடம்பெற்று வரும் போர், லெபனான் மக்களின், மற்றும் நட்பு நாடுகளின் விருப்பத்திற்கு எதிராக தென் லெபனான் எல்லை வரை பரவியுள்ளதைப் பற்றி கவலையை வெளியிட்ட கர்தினால், ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மான எண் 1701ஆல் இஸ்ராயேல் போரிலிருந்து லெபனானுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதை மனதில் கொண்டு எந்த ஒரு மோதலும் பேச்சுவார்த்தைகள் வழி தீர்வுகாணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2024, 14:38