தேடுதல்

கும்பல் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் (கோப்புப் படம்) கும்பல் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் (கோப்புப் படம்)   (RALPH TEDY EROL)

ஹெயிட்டியில் கடத்தப்பட்ட அருட்கன்னியரை விடுவிக்க இறைவேண்டல்!

ஹெயிட்டியில் ஜனவரி 19 அன்று கடத்தப்பட்ட ஆறு அருட்கன்னியரையும் மற்றும் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி, கெய்ட்டி தலத் திருஅவையின் தலைவர்கள் ஜனவரி 24, இப்புதனன்று இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஹெயிட்டியின் தலைநகர் Port-au-Prince-இல் பயணித்தபோது ஆறு அருட்கன்னியர்கள் மற்றும் அவர்களது இரண்டு தோழிகளும் கடத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, கெய்ட்டி ஆயர்கள்  மற்றும் துறவு சபைத்  தலைவர்கள் கடத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு கடத்தல்காரர்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனவரி 24, இப்புதனன்று,  ஹெயிட்டியிலுள்ள அனைத்து பிணையக்கைதிகளுக்காகவும்  இறைவேண்டல் செய்யும் நாளாகக் கடைபிடிக்குமாறு விசுவாசிகள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளது அந்நாட்டின் ஆயர்பேரவை.

ஜனவரி 22, இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள Port-au-Prince-இன் பேராயரும் அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவருமான மேதகு Max Leroys Mesidor மற்றும் துறவு சபைகள் அமைப்பின் தலைவர் அருள்பணியாளர் Morachel Bonhomme, இந்தக் கடத்தல் குறித்த தலத்திருஅவையின் உறுதியான கண்டனத்தையும் மீண்டும் பதிவு செய்துள்ளனர்.

பிணையக்கைதிகளாகக் கடத்திச்செல்லப்பட்ட அருட்கன்னியரையும், மற்றவர்களையும் நிபந்தனையின்றி உடனே விடுவிக்குமாறு தலத் திருஅவையின்  தலைவர்கள் அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.  

இந்தப் பூமியை நமக்களித்துள்ள, நீங்கள் அஞ்சுதற்குரிய கடவுளின் பெயரால் இந்த இழிவான மற்றும் குற்றச் செயல்களை நிறுத்துங்கள்! என உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றும், அக்கடத்தல்காரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர் தலத் திருஅவைத் தலைவர்கள்.

மக்களின் துன்பங்களை அவமதிக்கும் மனப்பான்மைக்கு ஒத்ததாக இருக்கும் அரசு அதிகாரிகளின் மௌனத்தை பல வேளைகளில் தலத் திருஅவைக் கண்டித்துள்ளது என்று அவ்வறிக்கையில் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ள ஆயர்கள், ஆயுதமேந்திய குழுக்களின் வன்முறை, நாட்டை பெருகிய முறையில் குழப்பமான மற்றும் ஒழுங்கற்ற சூழ்நிலையில் தள்ளியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

ஹெயிட்டியில் இதுவரை இயங்கி வரும் 300 ஆயுதமேந்திய கும்பல்களில் இதுவரை யாரும் இந்தக் கடத்தலுக்குப் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும் கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு, அவர்கள் 30 இலட்சம் அமெரிக்க டாலர் பணத்தை கேட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2024, 15:25