குஜராத் அரசு 11 குற்றவாளிகளை விடுவித்ததற்கு நீதி மன்றம் கண்டனம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு கலவரத்தின்போது இஸ்லாமிய பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்களை சிறையிலிருந்து குஜராத் மாநில அரசு விடுவித்துள்ளது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதற்கு தங்கள் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர் இந்திய இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள்.
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு இந்து-இஸ்லாம் கலவரத்தின்போது, Bilkis Bano என்ற இஸ்லாமியப் பெண்ணின் உறவினர்களைக் கொன்றதுடன், அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியோர் 11 பேருக்கு 2008ஆம் ஆண்டில் சிறைத்தண்டனை வழங்கியிருக்க, அவர்களின் நன்னடத்தையைக் காரணம் காட்டி, 15 ஆண்டுகளுக்குப்பின் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று குஜராத் அரசு விடுதலைச் செய்துள்ளதை
செல்லாது என அறிவித்துள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.
இது குறித்து தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளியிட்ட இந்திய மனித உரிமை நடவடிக்கையாளர், இயேசுசபை அருள்பணி Cedric Prakash அவர்கள், கூட்டுப் பாலியல் நடவடிக்கை, மற்றும் கொலையில் ஈடுபட்டவர்களை அவர்களின் தண்டனைக் காலம் முடியுமுன்னரே, குஜராத் அரசு சட்டவிரோதமாக விடுவித்துள்ளதை தடைச் செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் செயல், உண்மை மற்றும் நீதியின் பெரும் வெற்றியாகும் என தெரிவித்தார்.
ஐந்து மாத கற்பம் தரித்திருந்த 21 வயது இஸ்லாமிய பெண் Bilkis Banoவை, கோத்ரா இரயில் எரிப்பு சமபவத்தையொட்டிய கலவரத்தின்போது கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 11 பேர், அப்பெண்ணின் 3 வயது குழந்தை உட்பட 7 உறவினர்களை படுகொலைச் செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு மும்பை சிறப்பு வழக்காடு மன்றத்தால் விசாரிக்கப்பட்டபின், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அது மும்பை உயர் நீதிமன்றத்தாலும் இந்திய உச்ச நீதிமன்றத்தாலும் உறுதிச் செய்யப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டில் குஜராத் அரசால் இவர்கள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
கொலையிலும் பாலியல் வன்கொடுமை செயல்களிலும் ஈடுபட்டதால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளையும் நன்னடத்தை காரணமாக குஜராத் அரசு விடுவித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் இரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்