கந்தமால் கலவரத்தில் இறந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தள்ளிவைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்த ஆண்டு தேசிய மற்றும் மாநில தேர்தல்களுக்கு முன்னதாக நாட்டில் நிலவி வரும் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை காரணமாக, 2008-ஆம் ஆண்டில் கந்தமாலில் நடந்த மதவெறி வன்முறையின் போது கொல்லப்பட்ட கிறித்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியை இந்திய திருஅவை ஒத்திவைத்துள்ளது என யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 9, இச்செவ்வாயன்று யூகான் செய்தி நிறுவனத்திடம், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கட்டாக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பர்வா அவர்கள், கந்தமால் மாவட்டத்தில் கடைசி நேரத்தில் நிர்வாகம், காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சியை நாங்கள் ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நிர்வாகம் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் கூறியபடி, ஏப்ரல்-மே மாதங்களில் நாடு தேர்தலுக்குத் தயாராகி வருவதால், இந்த நிகழ்ச்சியை நடத்த இது உகந்த நேரம் அல்ல, என்றும் கூறியுள்ளார் பேராயர் பர்வா.
கடந்த ஆண்டு டிசம்பர் 31, ஞாயிறன்று, மாநிலத்தில், 1,000 கிறிஸ்தவர்கள் பங்கேற்ற அமைதி பேரணி நடந்தது என்றும், இந்தப் பேரணி ஏற்கனவே இந்து ஆதரவுக் கட்சியின் விளிம்பு நிலையில் உள்ளோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று குறிப்பிட்டார் பேராயர் பர்வா.
அக்டோபர் 2, 2023 அன்று கந்தமாலின் மறைசாட்சிகள் என்று அழைக்கப்படும் இறைஊழியர் காந்தீஸ்வர் திகல் மற்றும் 34 தோழர்களின் அருளாளர் பட்டமளிப்புக்கான செயல்முறையைத் தொடங்க வத்திக்கான் ஒப்புதல் அளித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
2008-ஆம் ஆண்டு ஆகஸ்டு 23-ஆம் தேதியன்று, கந்தமாலில் இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறந்தநாளான ஜன்மாஷ்டமியின் போது, மாவோயிஸ்டுகளால், ஒரு முக்கிய இந்துத் தலைவரான சுவாமி இலக்ஷ்மணானந்தா சரஸ்வதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது 'கிறித்தவர்களின் சதி' என்று இந்து அடிப்படைவாதிகளால் தவறான முறையில் செய்தி பரப்பப்பட்டு கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டிவிடப்பட்டது. ஏழு வாரங்களாகத் தொடர்ந்த இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 56,000 பேர் தங்களை வீடுகளை இழந்தனர், 6,000 வீடுகளும் 300 கிறித்தவ வழிப்பாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்டன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்