நேர்காணல் – இளையோரின் ஆற்றல் தூய தொன்போஸ்கோ
மெரினா ராஜ் - வத்திக்கான்
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை என்று கூறுகின்றார் சுவாமி விவேகானந்தர். நாட்டின் வளர்ச்சிக்கும், வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்துசக்திகளாக பல்வேறு காரணிகள் இருந்தாலும் அவற்றுள் முதன்மையானதாக தவிர்க்க முடியாத சக்தியாக முன்நிற்பது, அந்நாட்டின் இளையோர்களே. புத்தம் புதிய சிந்தனைகள், படிப்படியாக வளர்ச்சியடையும் திறன்கள், காலத்திற்கேற்றவாறு புதுமைகளை உள்வாங்கும் நிலை, தொடர் முயற்சி, தளராத வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற பண்புநலன்கள் கொண்டு இளைஞர்கள் செயல்படுகின்றனர். எனவே தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.
அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகள், மற்றும் வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர். தகவல் தொழில்நுட்பப் புரட்சியை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிடும் நாடுகள் பின்தங்கிய நாடுகளாகவே இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இன்று அந்தநிலை மாறி எந்தவொரு நாடு இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தத் தவறுகின்றதோ அல்லது திட்டமிடாமல் தவறான வழிகளில் பயன்படுத்திட முயலுகின்றதோ அது வளர்ந்த நாடுகளின் பட்டியலை எட்டிப் பிடிக்க இயலாது என்பதும் உறுதியாகிறது. தொடர்ந்து அந்த நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாது என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது. இத்தகைய திறம் படைத்த இளையோர் மேல் அளவுக்கதிகமான அன்பும் பற்றும் கொண்டு வாழ்ந்தவர் தூய தொன்போஸ்கோ. ஜனவரி 31 அன்று தூய தொன்போஸ்கோவின் திருநாளை சிறப்பிக்க இருக்கின்ற வேளையில் இளையோரின் ஆற்றல் தூய தொன்போஸ்கோ என்ற தலைப்பில் தனது கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி அகிலன் சற்பிரசாதம். சலேசிய சபை திருச்சி மறைமாநில தலைவரான அருள்பணி அகிலன் சற்பிரசாதம் அவர்கள், தத்துவஇயல், ஊடக்கல்வி, இதழியல், மற்றும் தகவல் தொடர்புக்கல்வியில் பட்டம் பெற்றவர். கடந்த 30 வருடங்களாக இளைஞர்களுடன் இணைந்து ஏழை மாணவர்களின் செயல்திறன், நல்வாழ்வு, கல்விமேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தன்னையே அர்ப்பணித்து செயல்படும் சிறந்த கல்வியாளர். பல்வேறு பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் இசை, ஊடகம், திரைப்பட விமர்சனப் பட்டறைகள், வாழ்க்கைத்திறன் பயிற்சி, இசைக் குழுக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான குழுக்கள் போன்றவற்றை உருவாக்கி அவர்களின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்.
அன்பின் அதிர்வுகள், ராகம் 2000, இறை அலைகள், அன்னைக்கு புகழ் பா என்பன இவரின் தயாரிப்பில் வெளிவந்த கத்தோலிக்க பாடல் புத்தகங்களாகும். நீயே நிரந்தரம் என்னும் புகழ்பெற்ற ஆடியோ ஆல்பம் உட்பட சமபந்தி, 100, நிழலே என் நிஜமே, பார்க்கும் முகமெல்லாம், இதயம் வாராயோ, எங்களோடு தங்கும் என்பன போன்ற பல mp3 குறுந்தகடுகளை படைத்தளித்த பெருமை இவரையேச் சாரும். இத்தகைய சிறப்பு பெற்ற தந்தை அவர்களை இளையோரின் ஆற்றல் தூய தொன்போஸ்கோ என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்