தேடுதல்

மூன்று ஞானியர் மூன்று ஞானியர்  

நேர்காணல் – கருத்தைக் கவரும் திருக்காட்சிப் பெருவிழா

இயேசு சபையின் மதுரை மறைமாநிலத்தின் தலைவரான அருள்தந்தை தாமஸ் அமிர்தம் அவர்கள், 1964 ஆம் ஆண்டு மே 25 அன்று பிறந்து, இறைப்பணி செய்ய அழைப்பு பெற்று 1984ஆம் ஆண்டு இயேசு சபையில் நுழைந்தார்.
திருக்காட்சி பெருவிழா - அருள்பணி தாமஸ் அமிர்தம் சே.ச.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பாலன் இயேசுவைக் கீழ்த்திசை ஞானிகள் காண வந்த நாளை திருக்காட்சிப் பெருவிழாவாக நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். தமிழகத்தின் பல இடங்களில் இத்திருவிழாவானது மூன்று ராஜாக்கள் திருவிழா, ஞானியர் வருகை, எபிஃபனி, ராஜாக்கள் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப்படுகின்றது.

திருக்காட்சி. காட்சிகள் பல விதம். கண்ணைக் கவர்வதல்ல காட்சி ,கண்ணோடு கருத்தையும் கவர்வதே காட்சி என்பர். அவ்வகையில் பாலன் இயேசுவைக் காண வந்த ஞானியர்களின் கண்ணோடு சேர்த்து கருத்தையும் கவர்ந்ததாலேயே இவ்விழா இத்தகைய சிறப்பு பெற்றிருக்கிறது. அக்காட்சி அவர்களின் கண்களுக்கு மட்டும் மகிழ்வைத் தந்திருந்தால், அது வெறும் காட்சி விழாவாக இருந்திருக்கும். மாறாக அவர்களின் கருத்தையும் வாழ்வையும் கவர்ந்ததால் தான் இன்று திருக்காட்சி விழாவாக நம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. நாமும் பல காட்சிகளைக் காண்கிறோம். தொலைதூரத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காண தொலைக்காட்சி, திரையரங்குகளில் காட்டப்படும் திரைக்காட்சி. குறுகிய நேரத்தில் கவனத்தை கவரும் தொடுதிரைக் காட்சி என பல காட்சிகளைக் காண்கிறோம். ஆனால் அவை அனைத்தும் நம் கண்களை மட்டுமே கவர்கின்றன. நம் கருத்துக்களை கவர்ந்து திருக்காட்சிகளாக நம் மனதில் இடம் பிடிப்பவையாக இருக்கின்றனவா என்று சிந்திப்போம். நமது பார்வைகள் எப்படி இருக்கின்றன? நமது காட்சிகள் எதை தேடிச்செல்ல உதவுபவைகளாக இருக்கின்றன என்பதை பற்றி சிந்திக்கவே இன்றைய நாள் விழா நமக்கு அழைப்புவிடுக்கின்றது.

இத்தகைய சிறப்பு பொருந்திய இந்நாளில் திருக்காட்சிப் பெருவிழா பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி தாமஸ் அமிர்தம். இயேசு சபையின் மதுரை மறைமாநிலத்தலைவரான அருள்தந்தை தாமஸ் அமிர்தம் அவர்கள், 1964 ஆம் ஆண்டு மே 25 அன்று பிறந்த தந்தை அவர்கள், இறைப்பணி செய்ய அழைப்பு பெற்று 1984ஆம் ஆண்டு இயேசு சபையில் நுழைந்தார். 1994ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவுபெற்று 2005 ஆம் ஆண்டு தனது நிரந்தர துறவு வார்த்தைப்பாட்டினையும் இறைவன் முன் வாக்களித்தார். புனே பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப்பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் பெற்றவர். பேராசிரியர், பொருளாளர், கல்லூரி மேலாளர், பொறுப்பாளர் என பல பணிகளைத் திறமையுடன் ஆற்றிய புகழுக்கு உரியவர். தற்போது இயேசு சபை மதுரை  மறைமாநிலத்தின் தலைவராக சீரும் சிறப்புமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தை அவர்களை திருக்காட்சிப் பெருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

காணும் காட்சியில் தெளிவு இருந்ததால் ஞானியர்களால் இரண்டு முறை விண்மீனைக் கண்டுணர முடிந்தது. கலக்கமும் குழப்பமும் நிறைந்திருந்ததனால் ஏரோதிற்கு விண்மீனின் வடிவம் கூட தெரியவில்லை. நாம் யார் போல் காட்சி காண்கின்றோம் ஏரோது போன்றா? இல்லை ஞானியர்கள் போன்றா? நமது காட்சி நமது கண்ணோடு கருத்தையும் கவர்கின்றதா?? சிந்தித்து செயல்படுவோம். நாம் காண்கின்ற காட்சிகள் நமது வாழ்வை மாற்றுகின்ற திருக்காட்சிகளாக அமையவும், நாம் பிறரால் தேடப்படுகின்ற ஒரு நபராக இருக்கவும், காணக் கிடைக்காத அரிய உறவாக நமது உறவு சிறப்படையவும் இறையருள் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2024, 08:17