நேர்காணல் – அமலமரி தூதுவர் மற்றும் அமலமரி புதல்வியர் சபை - பகுதி 1
மெரினா ராஜ் - வத்திக்கான்
”பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க இவ்வுலக பொருள்களின் மேல் பற்றில்லாது இறைவனை மட்டுமே பற்றிக்கொண்டு தங்கள் வாழ்வை வாழ்பவர்கள் துறவிகள். இவ்வுலகில் இருக்கும் துறவற சபைகளின் எண்ணிக்கைக் கணக்கிலடங்காது. அன்பர் பணி செய்ய அனுதினமும் அழைப்பு பெற்று அயராது உழைப்பவர்கள் பலர் இவ்வுலகில் உள்ளனர். அதிலும் அன்னை மரியாவை தங்களது பாதுகாவலராகக் கொண்டு, மறைப்பணியாற்றும் சபையாக திகழ்வது அமலமரி தூதுவர் சபை மற்றும் அமலமரி புதல்வியர் சபை. அண்மையில் திருஅவையால் பாப்பிறை சபை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள அமலமரி தூதுவர் மற்றும் புதல்வியர் சபைகளின் வரலாறு மற்றும் பணி பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி முனைவர் ஜார்ஜ் டோலின். அமலமரி தூதுவர் சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தை அவர்கள், உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டங்களில் மேற்படிப்பையும், முனைவர் பட்டத்தையும் பெற்றவர். அமலமரி தூதுவர் சபையின் துணைத்தலைவர், இறையியல் பேராசிரியர், ஆலோசகர் என பல பணிகளைத் திறம்பட ஆற்றிவருபவர். பல்வேறு துறவற சபைகளுக்கு சட்ட ஆலோசகராக சீரும் சிறப்புமாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். துறவிகள், அருள்பணியாளர்களுக்கு தியானக் கருத்துக்களையும், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் வாழ்வில் முன்னேற ஊக்கமூட்டும் கருத்தரங்குகளையும் வழங்கி வருபவர். தந்தை அவர்களை பாப்பிறை சபை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள அமலமரி தூதுவர் சபை மற்றும் அமலமரி புதல்வியர் சபை பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்