கடவுள், நமது வலியை அறிந்து நமக்கு உதவ வருகிறார்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடவுள் உக்ரைனில் அமைதியை வழங்குவதற்கான நாளை ஏற்கனவே திட்டமிட்டுள்ளார் என்றும், துயருறும் மக்களின் வலியை அறிந்து அவர்களுக்கு உதவுகிறார் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார் கியேவ்-சய்த்தோமியர் (Kyiv-Zhytomyr) மறைமாவட்டத்தின் துணை ஆயர் ஒலெக்சாண்டர் யாஸ்லோவெட்ஸ்கி (Oleksandr Yazlovetskiy)
டிசம்பர் 29, வெள்ளியன்று, உக்ரைனில் இரஷ்யப் படைகளால் நிகழ்த்தப்பட்ட ஏறத்தாழ 160 ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் 50 பேர் இறந்துள்ள வேளை, அது குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் துணை ஆயர் ஒலெக்சாண்டர்.
உக்ரேனிய ஊடகங்களின் ஆய்வின்படி, இந்தத் தாக்குதல்களுக்காக இரஷ்யா 12,700 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக இந்நேர்காணலின்போது குறிப்பிட்ட ஆயர் ஒலெக்சாண்டர் அவர்கள், இங்குள்ள மக்கள்மீது பயங்கரவாதம், மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறைக்காக இவ்வளவுபெரிய தொகை செலவு செய்யப்பட்டிருக்கின்றது என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இரஷ்யா மேற்கொண்ட இந்தத் தாக்குதலில், உக்ரைன் பொதுமக்களின் இறப்புகளின் எண்னிக்கை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது, ஆனால் வீரர்கள் மற்றும், இராணுவ நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களும் இறந்திருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆயர் ஒலெக்சாண்டர் அவர்கள், உக்ரைன் முழுவதுமே இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், அதைப் பற்றி பேசுவது மிகவும் வலிநிறைந்ததாக இருக்கும் என்றும் விவரித்துள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக, உரோமன் மற்றும் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைகளின் காரித்தாஸ் என்ற முறையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி புதிய திட்டங்களிலும் நாங்கள் பணியாற்றுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் ஒலெக்சாண்டர்.
இந்தக் கடினமான தருணங்களில் பொதுவாக ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டியுள்ள ஆயர் ஒலெக்சாண்டர் அவர்கள், துயரங்கள் நிறைந்த இந்த நேரத்தில் மக்களுக்கு ஆறுதல் தரும் கடவுளின் வார்த்தை தேவைப்படுவதால், அவற்றை இவர்களிடமிருந்தே மக்கள் பெறமுடியும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
கடவுள் தம் மக்களை மறப்பதில்லை, பொதுவாக அவர் மானுடத்தை மறப்பதில்லை என்றும், தான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மீட்பரைத் தருவதாக வாக்களித்த அவர் அவர்களை ஒருபோதும் மறப்பதில்லை என்றும் விளக்கியுள்ள ஆயர் ஒலெக்சாண்டர் அவர்கள், கடவுள் நம்மை மறக்கவில்லை, நம்முடைய வலியைப் பார்த்து, அவர் ஏற்கனவே நமக்கு உதவ வந்திருக்கிறார் என்றும், வரப்போகும் வெற்றியின், அமைதியின் நாளை அவர் ஏற்கனவே திட்டமிட்டுவிட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் ஏறக்குறைய 120 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கட்டிடங்கள் இத்தாக்குதலில் சேதமடைந்தன, ஏறத்தாழ 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்