நிக்கராகுவாவில் 16 அரசு சாரா நிறுவனங்கள் கலைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 16, இச்செவ்வாயன்று, நிக்கராகுவா அரசு, 16 அரசு சாரா நிறுவனங்களின் சட்ட தகுதிநிலையை இரத்து செய்துள்ளதுடன் அவற்றின் சொத்துக்களைக் கைப்பற்ற்றியுள்ளது என்றும், அவற்றில் பத்து கத்தோலிக்க அல்லது நற்செய்தி அறிவிப்பு சபை கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒன்பது அரசு சாரா நிறுவனங்கள் அவற்றை நிர்வகிக்கும் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காகவும், அதிகாரிகள் வழங்கிய மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், மேலும் இது சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைகள் தெரிவிப்பதாக அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசு சாரா நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுக்கு மாற்றப்படும் என்றும், எவ்வாறாயினும், மேலும் ஏழு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கலைக்கப்படுவதற்கான கோரிக்கைகளை தாங்களாகவே முன்வந்து சமர்ப்பித்துள்ளன என்றும் அவ்வறிக்கை தெரிவிப்பதாக அச்செய்திக் குறிப்பு கூறுகின்றது.
சமூகப் பாதுகாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புகள் கிளம்பிய ஆண்டான 2018-ஆம் ஆண்டு முதல் 3,500-க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மானாகுவாவில் அந்நாட்டு அரசால் கலைக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் குறிப்படத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்