காசாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இத்தாலியில் மருத்துவ உதவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
காசா பகுதியில் அண்மையில் இடம்பெற்றுவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுள் 100க்கும் மேற்பட்டோருக்கு இத்தாலியில் மருத்துவ உதவிகளை ஏற்பாடுச் செய்துள்ளதாக புனிதபூமிக்கு பொறுப்பான பிரான்சிஸ்கன் துறவி Ibrahim Faltas அறிவித்தார்.
அருள்பணி பால்தாஸ் அவர்களின் முயற்சியின் பேரில் இத்தாலிய அரசால் ஊக்குவிக்கப்பட்டு எகிப்து, இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட உள்ள இந்த மனிதாபிமான பணி திட்டம் விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருமுறையும் 40 குழந்தைகள் என்ற விகிதத்தில் 120 குழந்தைகள் இத்தாலியில் சிகிச்சைக்கென கொண்டுவரப்படுவர் என்ற அருள்பணி பால்தாஸ் அவர்கள், முதலில் இக்குழந்தைகள் எகிப்து எல்லையைக் கடந்து, பின்னர் எகிப்திலிருந்து விமானம் வழியாக இத்தாலிக்குக் கொணர்வதற்கு எகிப்து, இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என்றார்.
காசா பகுதியில் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், தான் இத்தாலிய அரசை அணுகியதாகவும், இத்தாலிய அரசு மனமுவந்து இதற்கு உதவ முன்வந்ததாகவும் தெரிவித்த பிரான்சிஸ்கன் துறவி, தொடர்ந்து ஆற்றப்பட்டுவரும் பிறரன்பு மறைப்பணி நடவடிக்கைகளின் ஒருபகுதியே இது எனவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மற்றும் நோயுற்ற குழந்தைகளுடன் யார் யார் மற்றும் எத்தனை பேர் பயணம் செய்ய உள்ளார்கள் என்பது குறித்தவைகளில் உடன்பாடு காணப்படாமையால் குழந்தைகளை இத்தாலிக்குக் கொண்டுச் செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார் அருள்பணி பால்தாஸ்.
குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை வழங்க முன்வந்திருப்பதில் இத்தாலிய பாதுகாப்புத்துறை மற்றும் மருத்துவத்துறையின் ஆர்வமும் அக்கறையும் மிகவும் பாராட்டுக்குரியன எனவும், தனது பங்களிப்பு என்பது அரசு அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியது மட்டுமே எனவும் கூறினார் அருள்பணி பால்தாஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்