பிரித்தானிய கல்வியாளருக்குப் பாகிஸ்தான் கிறித்தவர்கள் அஞ்சலி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாகிஸ்தானில் பிறந்த பிரித்தானிய அரசியல்வாதியும், கல்வியாளரும் மற்றும் பல ஆண்டுகளாக கிறிஸ்தவ சிறும்பான்மை சமூகத்தை ஆதரித்தவருமான James Shera அவர்களின் மறைவிற்குப் பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
கத்தோலிக்கரான Shera அவர்கள், ஜனவரி 15, இத்திங்களன்று, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தனது சொந்த நகரமான குஜ்ரன்வாலாவிற்குத் தனது 76வது வயதில் சென்றிருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார் என்றும், அவர் பல ஆண்டுகளாக நடுக்குவாத நோயால் அவதிப்பட்டு வந்தார் என்றும், அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்றபும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை கிறிஸ்தவர்களை Shera பல ஆண்டுகளாக சட்டவடிவிலும், தூதரக உறவுகள் வழியாகவும் ஆதரித்தார் என்றும் கூறியுள்ள அவரது மருமகன் Javed Bhatti அவர்கள், சமூக ஊடகங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தியதற்காக பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும். எங்களைப் போன்றவர்கள் வாழும் ஒரு நாட்டில், சிறுபான்மைத் தலைவர்கள் சிலரே இத்தகைய அஞ்சலிகளைப் பெறுகிறார்கள் என்றும், அவர் பாகிஸ்தானின் இளகிய மனம் கொண்ட மனிதராக இருந்தார் என்றும் யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
நடுக்குவாத நோயால் அவதியுற்றபோதிலும் எங்களுக்கு உதவ அவர் எப்போதும் தயாராக இருந்தார் என்றும், அவர் நோயுற்ற நிலையிலும், கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்பிற்கு உதவி செய்யும் செல்வாக்கு மிக்க மனிதராக இருந்தார் என்றும கூறியுள்ள பாகிஸ்தான் தலத் திருஅவையின் நிர்வாகச் செயலாளர் Majid Abel அவர்கள், தேவைப்படும்போதெல்லாம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து எங்களை ஒழுங்கமைத்தார் என்றும் ஒரு செல்வாக்குமிக்க குரலை இழந்துவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
1946-இல் குஜ்ரன்வாலாவில் பிறந்த ஷெரா, 1970-களில் மத்திய இங்கிலாந்தின் Warwickshire-விலுள்ள Rugby என்ற நகரத்திற்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் வார்விக் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்து ஆசிரியரானார் என்றும், 1988-இல், அவர் Rugby-இன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இங்கிலாந்தின் மேயரான முதல் பாகிஸ்தானியர் ஆனார் என்றும் தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, பிரித்தானியாவில் ஒரு புதிய வாழ்க்கையை கண்டுபிடித்த போதிலும், ஷெரா தனது பாகிஸ்தானை ஒருபோதும் மறக்கவில்லை என்றும் உரைக்கின்றது.
1992-ஆம் ஆண்டில், இங்கிலாந்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நல்லுறவு மற்றும் மதங்களுக்கு இடையேயான உறவுகளை அவர் வளர்த்து வந்ததற்காக, நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 'பாகிஸ்தானின் நட்சத்திரம்' அவருக்கு வழங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டில், இலண்டனில் உள்ள பாகிஸ்தானிய வர்த்தக மன்றத்தால் அவருக்குப் பாகிஸ்தானின் மற்றொரு நட்சத்திர விருது வழங்கப்பட்டது.
2021-இல், இலாகூரில் உள்ள ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரி பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கடந்த ஆண்டு, பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தானுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் Quaid-e-Azam Hilal விருதை வழங்கினார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்