தேடுதல்

யாழிசைத்து இறைவனைப் புகழும் பேரரசர் தாவீது யாழிசைத்து இறைவனைப் புகழும் பேரரசர் தாவீது  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 49-1, ஞானமும் விவேகமும் கொள்வோம்!

தேனீக்கள் மலர்களைத் தேடிச்சென்று தேனை சேகரிப்பதுபோல, ஞானமும் விவேகமும் தரும் நீதிமொழிகளைத் தேடிச் சென்று பெறுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 49-1, ஞானமும் விவேகமும் கொள்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'கடவுளின் நீதித்தீர்ப்புகள் தூயவை!' என்ற தலைப்பில் 48-வது திருப்பாடலில் 9 முதல் 14 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வந்தோம். இவ்வாரம் 49-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'செல்வம் பயன் அற்றது' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 20 இறைவார்த்தைகளைக் கொண்டுள்ளது. இத்திருப்பாடல் மறையுரை வழங்குவது போன்று அமைத்துள்ளது. தாவீதின் பெரும்பாலான திருப்பாடல்களில் இறைவேண்டல் செய்வது அல்லது ஆண்டவரைப் புகழ்வதைக் காணமுடிகிறது. ஆனால் இத்திருப்பாடலில், தாவீது படிப்பினைகளை வழங்குகின்றார். திருப்பாடல்களைப் படிப்பதன் வழியாக நாமும் ஒருவருக்கொருவர் இந்தப் படிப்பினைகளை கற்றுக்கொள்வதும், கற்பிக்க வேண்டியதும் நமது கடமையாக அமைகிறது என்பதையும் இத்திருப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மனிதர்களில் பலர் இவ்வுலகக் காரியங்களில் (செல்வங்களில்) மூழ்கிப்போய், தங்களின் மதியீனத்தால் பாவத்திற்கு உள்ளாகி தங்களுக்குத் தாங்களே கேடு வருவித்துக்கொள்ளக் கூடாது என்பதையும் இத்திருப்பாடலில் தாவீது எடுத்துரைக்க விரும்புகின்றார். மேலும் தாவீது இருவகையான மனிதர்களை இத்திருப்பாடலில் எடுத்துக்காட்டுகிறார். முதலாவது வகையினர் இவ்வுலகச் செல்வங்கள்மீது தங்கள் மனங்களைச் செலுத்தி கெட்டழிந்துபோகக் கூடியவர்கள். இரண்டாவது வகையினர் கடவுளை மட்டுமே தங்களின் உயர்ந்த செல்வமாகக் கருதி நிலைவாழ்வுக்குத் தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் எல்லாவிதமான துயரங்களையும் அனுபவிக்க நேர்ந்தாலும் அவர்கள் ஒருபோதும் கடவுளால் கைவிடப்படமாட்டார்கள் என்பதையும் முதலாமவர், பலியாடுகளென சாவுக்குக் குறிக்கப்பட்டவர்கள் என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார் தாவீது. இறுதியாக, மனிதர்கள் எப்போதுமே தாங்கள் பெற்ற செல்வத்தின் வளமையில் நீடித்து நிலைத்திருக்க முடியாது என்றும், ஒருநாள் அது காற்றடித்துச் செல்லும் பதரைப்போல மாயமாக மறைந்துபோய்விடும் என்றும் அறிவுறுத்தி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. இத்திருப்பாடலை வாசித்து முடிக்கும்போது, நீதிமொழிகள், சபையுரையாளர், சாலமோனின் ஞானம், சீராக் போன்ற நூல்களை வாசிப்பது போன்ற திருப்தியைக் கொடுப்பதுடன், இந்நூல்களைத் தழுவியிருப்பது போன்ற தோற்றத்தையும் தருகின்றது. ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டுமெனில், கடவுள் மட்டுமே உண்மைச் செல்வம்,  அவரை மட்டுமே நாம் நாடித்தேடி நமது உடமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஒற்றைவரி படிப்பினையைத் தருகின்றது இத்திருப்பாடல்.

இத்திருப்பாடலின் முதல் நான்கு இறைவசனங்களை இன்றையத் தியானச் சிந்தனைகளுக்கு எடுத்துக்கொள்வோம். இப்போது அவ்வார்த்தைகளை பக்திநிறைந்த மனதுடன் வாசிக்கக் கேட்போம். “மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள். தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள். என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்; என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும். நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில் நான் கருத்தாய் உள்ளேன்; யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்” (வச 1-4).

01. ஞானமிகு சொற்கள் விவேகமான சிந்தனை

முதலாவதாக, "என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்; என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும்" என்று கூறுகின்றார் தாவீது அரசர். இன்றைய உலகம் செல்வத்திற்குப் பின்னால் நிற்பதற்கு முக்கிய காரணம், அவை ஒருநாள் அழிந்துபோகும் என்பதை அறியாததும், அவற்றைக் குறித்து விவேகமாக சிந்திக்காததுமே ஆகும். அழிந்துபோகும் செல்வம் குறித்து எத்தனையோவிதமான அறிவுரைகள், படிப்பினைகள், கற்பித்தல்கள் இருந்தபோதிலும் யாருமே அவற்றிக்குச் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. அண்மையில் சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் பெண் ஒருவரிடமும், பிரேத பரிசோதனை செய்யும் ஆண் ஒருவரிடமும் நேர்காணல் மேற்கொண்டார் செய்தியாளர் ஒருவர். அவர்கள் பேட்டிக் கொடுத்தது தனித்தனி ஊர் என்றாலும், அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் மிகவும் ஒத்ததாகவே இருந்தன. அதாவது பல்வேறுபட்ட சூழல்களில் இறந்தவர்களை எரியூட்டும்போதும், பிரேத பரிசோதனை செய்யும்போது, ‘ச்சே... என்னடா வாழ்க்கை இது..! நிரந்திரமில்லாத வாழ்க்கை.! யாரு எப்ப எப்படி இறப்போமுன்னே தெரியாது. இந்த உண்மையப் புரிஞ்சுக்காம, ஒவ்வொரு மனுசனும் பணம், காசுன்னு பேயா அலையுறான். அதுமட்டுமில்லாம நான் உயர்ந்தவன்.. நீ தாழ்ந்தவன், நீ ஏழை.. நான் பணக்காரன், நீ தாழ்ந்த சாதி.. நான் உயர்ந்த சாதி'ன்னு எத்தனை வேறுபாடுகளைக் கடைபிடிக்கிறான்...’ என்று கூறினர். இவ்விருவரின் கூற்றையும் கேட்கும்போது எத்தனை பெரிய அறியாமையில் மனிதர் வாழ்கின்றனர் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான், “ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன். என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே!” (காண்க திபா 39:4-5) என்றும், "மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்; மனிதர் வெறும் மாயை; துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்; எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள்" (காண்க திபா 62:9) என்றும், வேறுசில திருப்பாடல்களிலும் வாழ்வின் நிலையாமைப் பற்றி மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர்.

02. நீதி மொழிக்கு செவிசாய்த்து அதன் உண்மையை உரைப்பது

இரண்டாவதாக, "நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில் நான் கருத்தாய் உள்ளேன்; யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்" என்கின்றார் தாவீது. நமது வாழ்க்கையில் எது நல்லது, எது தீயது என்று கூறும் நீதிமொழிகளுக்கு நாம் செவிமடுக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுகின்றார் தாவீது. நமது திருவிவிலியத்தில் வரும் நீதிமொழிகள் மற்றும் சாலமோனின் ஞான நூற்களுக்குச் செவிமடுத்தாலே போதும் வாழ்வின் உண்மைப்பொருளை உணர்ந்து அவற்றை நாம் கண்டிப்பாகக் கடைபிடிக்க முடியும். இன்றைய தொழில்நுட்ப உலகில் வாட்சப், முகநூல், யூடியூப், இணையதளம், வலைத்தளம் என அத்தனையிலும் எத்தனை எத்தனை படிப்பினைகள், பாடங்கள், கற்பித்தல்கள்! அவற்றிக்கு நாம் உண்மையிலேயே செவிமாடுகின்றோமா என்று இப்போது நாம் சிந்திப்போம்.

03. அனைவரும் செவிகொடுங்கள்

மூன்றாவதாக, "மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள். தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்" என்று கூறுகின்றார் தாவீது. அதாவது, தான் உரைக்கும் ஞானம் நிறைந்த சொற்களைக் கேட்டு வாழ்க்கையின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள அனைவருக்கும் அழைப்புவிடுகின்றார் தாவீது. இங்கே, பணிபுரிவதில் கீழ்நிலையில் உள்ளோரை தாழ்ந்தோர் என்றும், உயர்நிலையில் பணியாற்றுவோரை உயர்ந்தோர் என்றும் தாவீது அழைப்பதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். ஏனென்றால், செல்வம் படைத்தோரை செல்வர்களே என்றும், செல்வமில்லா மனிதரை ஏழைகளே என்றும் தனித்தனியாக அழைக்கின்றார் தாவீது அரசர். இந்த உலகத்தில் இத்தகைய வேறுபாடுகள் இருப்பினும், கடவுளின் பார்வையில் அனைவருமே சமம்!  என்று உரைப்பதற்காக இவ்வாறு சமுதாயத்தில் நிலவும் படிநிலைகளை தாவீது அரசர் இங்கே எடுத்துக்காட்டியிருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

பெரியதொரு மடாலயம் ஒன்றில் துறவி ஒருவர் தனது சீடர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். அந்த மடாலயத்தில் சீடராக யார் வந்து சேர விரும்பினாலும் அவர்களை நன்கு பரிசோதித்துவிட்டுதான் சேர்ப்பார் அத்துறவி. ஒருநாள் மூன்று இளைஞர்கள் அக்குருவின் சீடராகவேண்டுமென வந்தனர். மறுநாள் வந்து தன்னைச் சந்திக்குமாறு அக்குரு அவர்களிடம் கூறினார். அவர்கள் “சரி” என்று கூறிவிட்டுப் போய்விட்டனர். அவர்கள் சென்றதும் தனது சீடர்களில் ஒருவரை அழைத்து, "நாளை அம்மூவரும் வரும்போது, என் காதில் ஓணான் புகுந்து நான் இறந்துவிட்டதாகச் சொல்" என்று கூறினார் அக்குரு. மறுநாள் அந்த மூவரும் திரும்ப வந்தபோது குரு சொல்லிக்கொடுத்தவாறே அவர்களிடம் கூறினார் அச்சீடர். அதற்கு முதலாமவர், "துறவியின் ஜாதகப்படி அவருக்கு சனிதிசை என்பதால் இப்படி ஆகியிருக்கும்" என்று கூறிவிட்டு வருத்தத்துடன் சென்றுவிட்டார். இரண்டாமவர், "அக்குரு போனஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக அவர் இறந்துபோயிருப்பார்" என்று கூறி கவலையுடன் சென்றுவிட்டார். ஆனால் மூன்றாமவர், அச்சீடரின் முகத்தை நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு, "குரு கண்டிப்பாக இறக்கவில்லை" என்று உறுதியாகக் கூறினார். அதுவரை மடாலயத்திற்குள் இருந்த குரு வெளியே வந்து, "எப்படி சரியாகச் சொன்னாய்" என்று அவனிடம் கேட்டார். அதற்கு அவன், “குருவே, உங்கள் இறப்பினால் வரக்கூடிய வருத்தும் சிறிதளவுகூட உங்கள் சீடனின் முகத்தில் தென்படவில்லை. மேலும் ஒருவரின் காதுக்குள்ளே ஓணான் நுழைவதென்பது நிச்சயம் சாத்தியமே இல்லை. அதனால்தான், நீங்கள் இறக்கவில்லை என்று நான் உறுதியாகக் கூறினேன்” என்றான். அவனது விவேகத்தைக் கண்டு திகைத்துப்போன குரு, அந்நேரமே அவனைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்.

பொதுவாக, நான்கு வகையான செல்வங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, நாம் என்ன வைத்திருக்கின்றோமோ அதில் செல்வம் இருக்கிறது (riches in what we have). இரண்டாவதாக, நாம் என்ன செய்கிறோமோ அதில் செல்வம் இருக்கிறது (riches in what we do). மூன்றாவதாக, நமக்கு என்ன தெரிகிறதோ அதில் செல்வம் இருக்கிறது (riches in what we  know). நான்காவதாக, நாம் என்னவாக இருக்கின்றோமோ அதில் செல்வம் இருக்கின்றது (riches in what we are - riches of character). இவ்வுண்மையை, ஞானமும் விவேகமும் கொண்டு, நீதிமொழிகளுக்குச் செவிமடுப்போரே உணர்ந்துகொள்ள முடியும் என்பது திண்ணம். ஆகவே, தேனீக்கள் மலர்களைத் தேடிச்சென்று தேனை சேகரிப்பதுபோல ஞானமும் விவேகமும் தரும் நீதிமொழிகளைத் தேடிச் சென்று படித்துப் பயன் பெறுவோம். அப்போதுதான் இறைவனுக்கு உகந்ததொரு வாழ்வை நாம் வசமாக்கிக்கொள்ள முடியும். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2024, 11:59