தேடுதல்

மாய்ந்துபோகும் மனித உடல்! மாய்ந்துபோகும் மனித உடல்!  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 49-4, மாய்ந்துபோகும் மனித உடல்!

இவ்வுலகம் தரும் வெற்றுக்காரியங்களில் நாம் நம்பிக்கை கொள்ளாமல், நமது உயிரை நிலைவாழ்வுக்கு உயர்த்தும் என்றும்முள்ள இறைவன்மீது நமபிக்கைகொண்டு வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 49-4, மாய்ந்துபோகும் மனித உடல்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

இந்த உலகத்தையே ஆளும் அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். ஒரு துறவியிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். அவனது உள்ளத்தின் ஆசைகளை உணர்ந்துகொண்ட அத்துறவி, மன்னனுக்குப் பாடம் புகட்ட விரும்பினார். "மன்னா, நீ கேட்டதற்கு உனக்கு நான் வழி சொல்கின்றேன், அதற்கு முன்பு எனக்கு நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்” என்று கேட்டார். உடனே மன்னன் ஆவலுடன், "சொல்லுங்கள்! சொல்லுங்கள்!" என்றான். "ஒன்றுமில்லை, இந்தச் செப்புக் குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயா!” என்று கேட்டார் துறவி. “அட! இதென்ன பெரிய காரியம்” என்று கூறியபடியே, பணியாளரை அழைத்த மன்னன். அவனிடம் பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அப்பணியாளரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினார். ஆனால், குடுவை நிறையவே இல்லை! அது மிகவும் சிறியதுதான். ஆனால் போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. தொடர்ந்து இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. ஆனாலும் அது நிறையாமலேயே இருந்தது. அப்போது துறவி, “என்ன மன்னரே, இந்தச் சின்னக் குடுவையை உங்களால் நிறைக்க முடியவில்லையா?” என்று கேலியாகக் கேட்டார். துறவி அப்படி கேட்டது மன்னனுக்குப் பெருத்த அவமானமாகிவிட்டது. ஆகவே, தனது கருவூலத்திலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள், மாணிக்கங்கள், வைடூரியங்கள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். உடனே அனைத்தும் கொண்டுவரப்பட்டு அதில் போடப்பட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. அரசனின் கருவூலமும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். அவனது உடலும் உள்ளமும் சோர்ந்து போனது. அப்போது அம்மன்னன் துறவியிடம், "ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! ஆனால் பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே?” என்று கலங்கிப்போய்க் கேட்டான். அதற்குத் துறவி, "மன்னா, இது ‘மனித மனத்தின் ஆசை’ என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை யாராலும் நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு?” என்றார். அப்போதுதான் மன்னனுக்கு எல்லாமே புரிந்தது. உடனே மனம் தெளிவு பெற்றவனாகத் துறவியை வணங்கிவிட்டுச் சென்றான் மன்னன்.  

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நிலபுலன்கள் பயன்தராது!’ என்ற தலைப்பில் 49-வது திருப்பாடலில் 9 முதல் 11 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 12 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். “ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார். தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே; தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே. பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்; சாவே அவர்களின் மேய்ப்பன்; அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்; அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்; பாதாளமே அவர்களது குடியிருப்பு. ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார்” (வச 12-15)

நாம் தியானிக்கும் இந்த இறைவார்த்தைகள், மனிதர் எப்போதும் நிலையற்றவர் என்பதையும் கடவுள் மட்டுமே என்றும் நிலையானவர் என்பதையும் நமக்கு மீண்டும் நினைவூட்டுகின்றன. தங்களை வலிமைமிக்கவர்களாக, ஆற்றல்மிக்கவர்களாக, அனைத்திலும் மிகச் சிறந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் எல்லாருமே சுவடு தெரியாமல் மறைந்து போனார்கள் என்பதை வரலாற்றின் ஏடுகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இன்று ஒவ்வொரு மனிதரின் உள்ளமும் ‘உலக ஆசை’ என்ற மாபெரும் அலகையால் ஆட்டிப்படைக்கப்படுகின்றது. செல்வம், பெயர், புகழ், செல்வாக்கு, அதிகாரம் ஆகிய இவைகளைப் பெறுவதற்காக எதையும் செய்யத் துணிகின்றனர் பலர். அப்பாவி மக்களைச் சுரண்டி பிழைத்து, அவர்களைக் கொன்றுகுவித்து அவர்களின் இறந்த உடல்கள்மீது தங்களின் சாம்ராச்சியத்தைக் கட்டியெழுப்பி சரித்திரப் புகழ்நாட்ட நினைக்கிறார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்ற நெறிமுறைகளை விடுத்து எப்படியும் வாழலாம் என்ற பொறுப்பற்ற வாழ்க்கையால் பிறரின் வாழ்வில் ஆறாக் காயங்களையும், மீளாத் துயரங்களையும் ஏற்படுத்திவிடுகின்றனர். நிலநடுக்கம், சுனாமி, புயல், பெருவெள்ளம், போன்ற இயற்கைப் பேரிடர்களாலும், கொரோனா போன்ற பெருந்தொற்றுகளாலும், விபத்து மற்றும் திடீர் மரணங்களாலும் இழப்புகளும் இறப்புகளும் ஏற்பட்டும் கூட, செல்வதின்மீது மிதமிஞ்சிய பற்றுகொண்டவர்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இதனை அறியாமை என்று சொல்வதா அல்லது ஆணவம் என்று சொல்வதா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்" என்று எழுதினார் கவிஞர் கண்ணதாசன். வாழ்வின் நிலையாமையை உணர்ந்து செல்வத்தின்மீது மிதமிஞ்சிய பற்றுக்கொள்வதை விடுத்து இந்தச் சமுதாயத்தின் நலன்களுக்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள்தாம் இன்றும் மக்கள் மனங்களில் நீடித்து நிலைத்து வாழ்கின்றார்கள்.  ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், காந்தியடிகள், ஜவர்ஹலால் நேரு, கக்கன், காமராஜர், ஜீவா என்று அந்த நல்லவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இதனால்தான் இறையச்சமின்றி தங்களுக்கென்று வாழ்பவர்களையும் செல்வத்தின்மீது மிதமிஞ்சிய பற்றுக்கொண்ட பேராசைக்காரர்களையும் பற்றிக் குறிப்பிடும் தாவீது,  “ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார். தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே; தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே” என்று கூறி அவர்களின் அழிவு எப்படி இருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது. மேலும், ‘அவர்கள் விலங்குகள் போல மாண்டழிவர்’ என்றும், இதற்குக் காரணம் அவர்களின் மதியீனம் என்றும் விளக்குகின்றார் தாவீது. இங்கே, ஏன் அவர்களை விலங்குகளுடன் ஒப்பிடுகின்றார் என்றால், அவைகளுக்குப் பகுத்தறிவு கிடையாது, இந்த உலக வாழ்வின் மேன்மை தெரியாது. அதுமட்டுமன்றி, பசியென்று வந்துவிட்டால் அவைகள் தங்கள் இனத்தையே கூட அடித்துச் சாப்பிடும் அளவிற்கு மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக, விலங்குகளுக்கு அழிவு திடீரென்று நேரும். மனிதர்கள் தங்களையும் பிறரையும் காப்பாற்றும் ஆற்றலும் நுண்ணறிவும் படைத்தவர்கள். ஆனால் விலங்குகள் அவ்வாறு செய்ய முடியாது. மரணம் என்று வந்துவிட்டால் அந்த இடத்திலேயே சுருண்டுவிழுந்து அப்படியே மடிந்துபோய்விடும். அதனால்தான் பல நேரங்களில், "ஏண்டா, மிருகம் மாதிரி நடந்துக்குற" என்று நாம் சொல்கின்றோம்.

அடுத்து, "பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்; சாவே அவர்களின் மேய்ப்பன்; அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்; அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்; பாதாளமே அவர்களது குடியிருப்பு” என்று கூறுகின்றார், இங்கே இவ்வுலகக் காரியங்கள்மீது மிதமிஞ்சிய அளவில் பற்றுகொண்டுள்ள மதியீனர்களைத்தான் ‘பலியாடுகள்’ என்று அழைக்கின்றார் தாவீது. காரணம், தான் எக்காரணத்திற்காக வளர்க்கப்படுகின்றோம் என்பதையும், எதற்காகத் தன்னை வளர்ப்பவர் தன்மீது இவ்வளவு பாசத்தைப் பொழிகிறார் என்பதையும்  அவைகள் அறியாது. அதுமட்டுமன்றி, தனது இனத்தைச் சேர்ந்த மற்றோர் ஆடு தனது கண்ணுக்கு முன்பாகவே அறுத்துக் கொல்லப்படும்போது, அடுத்து தனக்கும் இதுதான் நேரப்போகிறது என்பதை அறியாது, தனது போக்கில் தீனி தின்றுகொண்டே இருக்கும். மேலும் இந்த நாளில் எந்த ஆட்டை முதலில் அறுக்கவேண்டும், எதனை இரண்டாவதாக, மூன்றாவதாக, அறுக்க வேண்டும் என்பதையெல்லாம்  வியாபாரி நன்கு முடிவு செய்திருப்பான். ஆக, இறைபற்றின்றி உலக ஆசைகளில் மூழ்கிப்போய் வாழும் மனிதருக்கும் இதுதான் நடக்கும் என்பதால்தான் "பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறுகின்றார் தாவீது.

அதற்கடுத்து “சாவே அவர்களின் மேய்ப்பன் என்றும் கல்லறையில் அவர்களின் உருவம் மாய்ந்துபோகும்” என்றும் கூறுகின்றார் தாவீது. இதன் அர்த்தம் என்ன? எத்தனையோ பேர் என்னதான் செல்வச் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும், இறந்தபிறகு, ஆடம்பராக இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு சந்தனப் பேழைகளில் உடல் கிடத்தப்பட்டு கல்லறைக்குள் புதைக்கப்பட்டிருந்தாலும் ஒருசில ஆண்டுகளிலேயே அவர்களின் ஒட்டுமொத்த உருவமும் சிதைந்தழிந்துவிடும் என்பது மாபெரும் உண்மையன்றோ! இதனை நமது நடைமுறை வாழ்க்கையில் கண்டுவருகின்றோம் அல்லவா? இப்படிப்பட்ட மதியீனர்களின் நிரந்தரமான இல்லம் பாதாளம் என்பதைத்தான், பாதாளமே அவர்களின் குடியிருப்பு என்கின்றார் தாவீது. ஒருமுறை, இயேசு சபை சகோதரர் ஒருவர் என்னிடம், “சாமி, எங்கள் வளாகத்திலுள்ள கல்லறையில் அடுத்தடுத்து இறப்பவர்களை வைக்கவேண்டும் என்பதற்காகப் பழைய கல்லறைகளைத் திறந்து சுத்தம் செய்வோம். அப்போது பார்த்தால் சிலவற்றில் எலும்புகளைக் கூடப் பார்க்க முடியாது. அந்தளவுக்கு அவைகள் சிதைந்தழிந்தருக்கும். அவற்றைப் பார்க்கும்போது, என்னடா மனித வாழ்க்கை என்றுதான் எண்ணத்தோன்றும்ட என்று கூறினார். அவர் கூறிய கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கின்றது பாருங்கள்!

இறுதியாக, “ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார்” என்கின்றார் தாவீது அரசர். இங்கே நிலையற்ற வாழ்வு குறித்து தெளிவாகக் கூறும் தாவீது, தான் இறைவன்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத ஆழமான அன்பாலும் நம்பிக்கையாலும், நல்லுறவாலும் என்றுமுள்ள நிலைவாழ்வை அவர் தனக்கு அருள்வார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு கூறுகின்றார். அப்படியென்றால் இவ்வுலக வாழ்வு நிலையற்றது, கடவுள் மட்டுமே என்றும் நிரந்தரமானவர் என்பதைத் தாவீது தெளிவாக அறிந்துணர்ந்திருக்கின்றார் என்பதைப் பார்க்கின்றோம். ஆகவே, இவ்வுலகம் தரும் வெற்றுக்காரியங்களில் நாம் நம்பிக்கை கொள்ளாமல், நமது உயிரை நிலைவாழ்வுக்கு உயர்த்தும் என்றும்முள்ள இறைவன்மீது நமபிக்கைகொண்டு வாழ்வோம். அதற்காக ஆண்டவராம் கடவுளிடம் அருள்வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2024, 12:52