தேடுதல்

உணவு பெற காத்திருக்கும் சூடானியப் பெண்கள் உணவு பெற காத்திருக்கும் சூடானியப் பெண்கள்   (ZOHRA BENSEMRA)

அனைத்துலகச் சமூகத்தினரே, சூடான் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்!

ஒன்பது மாதங்களாக நிகழ்ந்து வரும் இந்த மோதலில் இதுவரை 12,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர் மற்றும் ஏறக்குறைய 70 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஐ.நா., அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நார்வே மற்றும், அனைத்துலகச் சமூகத்தின் பிற உறுப்பினர்கள் அனைவரும், சூடானில் நிகழ்ந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தங்களின் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிக்கையொன்றில் கேட்டுக்கொண்டுள்ளனர் சூடான் மற்றும் தென்சூடானின் கத்தோலிக்க ஆயர்கள்.

மேலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமன்றி, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தேவையான ஆதரவைத் தொடரவும் ஆயர்கள் அவ்வறிக்கையில் அழைப்புவிடுத்துள்ளனர்.

டிசம்பர் 26, செவ்வாயன்று, வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், "இந்த மோதல் மனித உயிர்கள், உடைமைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது என்றும், சூடானில் இதுபோன்றதொரு எதிர்பாராத சூழ்நிலை ஏற்படும் என்று யாரும் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும், தனது பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்பேரவை.

மேலும் மோதலில் சிக்கிய குடிமக்களின் அவலங்கள் குறித்தும் இவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள ஆயர்கள்,   டார்பூர் மற்றும் கோர்டோஃபன் மாநிலங்களில் உள்ள இறைமக்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் கவலையோடு விளக்கியுள்ளனர்.

சூடானில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதியன்று, அந்நாட்டு ஆயுதப் படைகளுக்கும் (SAF), விரைவு ஆதரவு படைகளுக்கும் ( RSF) இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து தலைநகர் கார்ட்டூமில் வன்முறை ஏற்பட்ட பிறகு, பரவலான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் நாடு முழுதும் பரவியது. மேலும் ஒன்பது மாதமாக நிகழ்ந்து வரும் இந்த மோதலில் இதுவரை 12,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர் மற்றும் ஏறக்குறைய 70 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2024, 12:52