தேடுதல்

ஆண்டவரின் திருக்காட்சி ஆண்டவரின் திருக்காட்சி  

திருக்காட்சிப் பெருவிழா : நம் எல்லோருக்கும் கடவுள் ஒருவரே!

மதங்களற்ற, எல்லோரும் கடவுளை ஒருவராகப் பார்க்கும் சமத்துவ சமுதாயம் படைக்க நாம் ஒவ்வொருவரும் நம்மை அர்பணித்துக்கொள்ளவேண்டும்.
திருக்காட்சிப் பெருவிழா : நம் எல்லோருக்கும் கடவுள் ஒருவரே!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசா 60: 1-6    II. எபே  3: 2-3a, 5-6    III.  மத் 2: 1-12)

இன்று நமது அன்னையாம் திருஅவை ஆண்டவரின் திருகாட்சிப் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது. இது மூன்று அரசர்கள் விழா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இயேசு என்னும் விண்மீன் அனைத்து மக்களுக்கும் மீட்பு என்னும் ஒளிதந்து அனைவரையும் ஒற்றைக் கொடியின்கீழ் இணைகிறது என்றும் இவ்விழாவிற்கு நாம் பொருள்கொள்ளலாம். அதாவது, ‘கடவுள் அனைவருக்குமானவர்’ என்பதே இவ்விழாவின் மையக்கருத்தாக அமைகின்றது. இன்றைய உலகில் கடவுளின் பெயரால் நிகழும் வன்முறை மற்றும் கொலைவெறிச் செயல்கள்தாம் மனிதத்தை மாய்த்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான், "உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம், நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்"  என்றும் "மனசுக்குள்ள நாய்களும் நரிகளும் நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா மனிதனென்னும் போர்வையிலிருக்குது பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா" என்றும் எழுதுகிறார் மறைந்த கவிஞர் வாலி. நமது இந்திய தேசத்தில் குஜராத், ஒடிசா மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் கடவுளின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச் சம்பவங்களும், அதனால் நிகழ்ந்த படுகொலைகளும், மனிதரிடம் நிலவும் இந்த அறியாமைச் செயல்களுக்கு சான்றாகி நிற்கின்றன. இன்றைய மூன்று வாசகங்களும் கடவுள் மதங்களைக் கடந்து அனைவரையும் அன்புகூர்பவர் என்றும், எவ்வித வேறுபாடுகளும் பார்க்காமல் அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடியவர் என்றும், நமக்கு எடுத்துரைக்கின்றன. "பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்" என்ற முதல் வாசகத்தின் இறைவார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. அதாவது, மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டுமன்று, அது எல்லோருக்குமானது என்பதை இன்றைய முதல் வாசகம் மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. மேலும் "மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர்" (திபா 72:11) என்றும், "பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்" (திபா 117:1) என்றும் திருப்பாடல்களில் தாவீது அரசர்  எடுத்தியம்புகின்றார். “கடவுள் ஒருவரே. அவர் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார்” (1 திமொ 2: 4-5), என்று புனித பவுலடியாரும், "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை; எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடப்பவர் அவருக்கு ஏற்புடையவர்" (திப 10: 34-35) என்று புனித பேதுருவும் கூறுகின்றனர்.

இதனைத்தான் ‘மறைபொருள்’ என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் விளக்குகின்றார் புனித பவுலடியார். அதாவது, பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவுடன் ஒன்றிக்கப்படுவதைத்தான் ‘மறைபொருள்’ என்கின்றார் அவர். "உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.” அப்படியென்றால், கடவுள் எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றோ, அல்லது, அவர் எங்களுக்கு மட்டுமே உரிமையுடையவர் என்றோ, எவரும் கூற முடியாது என்பது மிகவும் தெளிவாகிறது. இன்று இஸ்ரேல் மற்றும் ஹமாசுக்கு இடையே நிகழ்ந்துவரும் மோதல்கள் யாவும், இதன் அடிப்படையிலேயே என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அன்பும் இரக்கமும் எல்லோருக்குமானது என்பதைப் புரிந்துகொள்ளாத வரை இப்படிப்பட்ட மோதல்கள் நம்மிடையே தொடரத்தான் செய்யும். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் மூன்று ஞானியரும் வெவ்வேறு நாடுகள், இனங்கள், மொழிகள், நிறங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள்.  இயேசு என்னும் மெசியாவைத் தேடும் அவர்களின் பயணத்தில், இந்த வேறுபாடுகளையெல்லாம் களைந்துவிட்டு ஒருமித்த மனமுடன் ஒன்றிணைந்து பயணித்ததுதான் அவர்களின் வெற்றிக்கு (இயேசுவைக் கண்டடைந்தது) அடிப்படைக் காரணம்,

ஒருமுறை சுற்றுலா பயணி ஒருவர் மலைகளைப் பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை பார்த்துக் கொண்டே சென்றார் அப்பொழது எதிர்பாராதவிதமாக அவர் கால்கள் நழுவி மலைமேலிருந்து தவறி கீழே விழத் தொடங்கினார். இதை மலைக்கு கீழே இருந்த மூன்று நபர்களும் பார்த்துவிட்டனர். இந்த மூவரும் வெவ்வேறு மதத்தினர். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளமாட்டார்கள். தங்கள் மதக் கடவுளே உண்மையானவர் மற்ற மதத்தினரின் கடவுள் எல்லாம் போலிகள் என்று அவர்கள் மூவரும் அடிக்கடி சண்டையீட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் இப்போது மலை மேலிருந்து கீழே விழுபவரை எப்படியாவது உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு. மூவரும் ஒற்றுமையாகக் கைக்கோர்த்து நின்று அருகில் வைத்திருந்த வலையால் அம்மனிதரைத் தாங்கிப் பிடித்தார்கள். அவரும் மலைமேலிருந்து விழுந்த அதிர்ச்சியில் மயங்கிய படியே இருந்தார். உடனே அம்மூவரும் அந்த மனிதரைத் தங்களின் தோல் மீது சுமந்துச் சென்று அவரது முகத்தில் தண்ணீரைத் தெளித்து மயக்கத்தை போக்கினார்கள். அச்சுற்றுலாப் பயணி கண் விழித்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இது நிஜமா அல்லது கனவா என்று திகைத்து நின்றார். பிறகு தெளிவுப் பெற்ற அவர், தான் இன்னும் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன் என்று எண்ணி மகிழ்ந்தார். அப்போது தான் மிகவும் மிகிழ்ந்து தன்னைக் காப்பாற்றியவர்களிடம் இருகரங்களையும் கூப்பி வணங்கி நன்றி கூறினார். "ஐய்யா, நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது மலைமேலிருந்து விழுந்த என்னைக் காப்பாற்றிவிட்டீர்கள். உங்கள் மூவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் உங்களை நான் மறக்கவே மாட்டேன். யாரும் துணிந்து செய்ய முடியாத இச்செயலை நீங்கள் மூவரும் எனக்கு செய்துள்ளீர்கள். இதற்கு கைமாறாக நான் உங்களுக்கு என்ன செய்யப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் கடவுளாகத் தோன்றி என்னைக் காப்பாற்றிவிட்டீர்கள். இனி எனக்கு நீங்கள்தான் கடவுள்" என்றார். அதற்கு அந்த மூவரும், "நீ யாருடைய கடவுளுக்கு நன்றியை சொல்கிறாய்" என்று கேட்டார்கள். அவர் சற்று நேரம் சிந்தித்துவிட்டு, "நான் எந்த மதக் கடவுளையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மற்றவருக்கு உதவ வேண்டும் என்கின்ற நற்குணம் கொண்ட உங்களைளைத் தான், ‘நான் தெய்வஙக்ள்” என்கிறேன் என்றார். அதற்கு அந்த மூவரும், "உனது பேச்சு எங்களுக்கு இரசிக்கும் படியில்லை. ஆகையால், நீ எங்கள் மூவரின் எந்தக் கடவுள் உன்னை காப்பாற்றியது என்பதை சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் நாங்கள் மூவரும் வெவ்வேறு மதத்தினர், வெவ்வேறு கடவுளை வணங்குபவர்கள் என்பதை உன் நினைவில் வைத்துக் கொண்டு சொல்" என்றனர். அந்த மூவரின் பேச்சைக் கேட்டதும் அவர் நடுங்கிப் போய் செய்வதறியாது திகைத்து நின்றார். அப்போது அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அவர்கள் மூவரையும் பார்த்து, "நான் மலைமேலிருந்து கீழே விழுப்போவதை உங்கள் மூவரில் முதலில் பார்த்தது யார்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நாங்கள் மூவருமே ஒன்றாகத் தான் பார்த்தோம்" என்றனர். "சரி அப்போது உங்கள் கடவுள் என்னை காப்பாற்றும்படி உங்களிடம் கூறினாரா? இல்லை உத்தரவு தான் கொடுத்தாரா? எந்த மதக் கடவுள் என்னை காப்பாற்றும் படி உங்களுக்கு உத்தரவுக் கொடுத்ததாக நினைக்கிறீர்களோ அந்தக் கடவுளுக்கு எனது நன்றி" என்றார். அது மட்டுமன்றி, "நீங்கள் மூவரும் வெவ்வேறு மதத்தினராக இருந்தபோதிலும், நீங்கள் ஏன் ஒன்றாகக் கரம்கோர்த்துக்கொண்டு என் உயிரைக் காப்பாற்றினிர்கள் சொல்லுங்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அது எங்கள் மூவர் மனதிலும் தோன்றிய உணர்வு. அதை குறை சொல்கிறாயே உன்னை காப்பாற்றியது எங்கள் தவறு தான்" என்றார்கள். அம்மனிதர் சிரித்துக் கொண்டே, "அப்போ உங்கள் கடவுள் சொல்லி நீங்கள் என்னை காப்பாற்றவில்லை. உங்கள் உள்ளுணர்வு சொல்லியதால் தானே காப்பாற்றினீர்கள்” என்று மீண்டும் கேட்டார். அதற்கு அம்மூவரும், "ஆமாம் அதுதான் உண்மை" என்றனர். அப்போது அந்தச் சுற்றுலா பயணி, "உங்கள் மூவரின் உணர்வுகளையும் மதிக்கிறேன். இங்கு நாம் கடவுள் வேறு உணர்வு வேறு என்று நினைக்கிறோம் ஆனால் மனிதரின் உணர்வில் தான் கடவுள் இருக்கிறார் என்பதை நாம் உணரவில்லை. மனிதரின் சிந்தனைகள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் உணர்வு ஒன்றே. அந்த உணர்வுதான் உண்மையான ஒரே கடவுள். உங்கள் மூவரின் கடவுள் சொல்லி நீங்கள் என்னை காப்பாற்றவில்லை உங்கள் மனதில் ஏற்பட்ட ஒருமித்த உணர்வால்தான் நீங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து என்னைக் காப்பாற்றியுள்ளீர்கள் அல்லவா? அப்படியென்றால், ஓர் உயிர் ஆபத்தில் இருக்கும் போது அதற்கு உதவ வேண்டும் என்ற உணர்வில் ஒற்றுமை உள்ளது என்றால் அதை நீங்கள் கடவுளாக வணங்கினால் போதும். சக மனிதரை மதிக்கக் கற்றுக் கொண்டால், உன் மதம் என் மதம் என்ற வேற்றுமை இல்லாமல் நீங்கள் எப்போது ஒற்றுமையாக வாழ முடியும்” என்றார். அப்போது தெளிவுபெற்ற அம்மூவரும், "இனி எங்களுக்கான கடவுள் ஒருவரே. அவர் பலவித வடிவங்களின் உணர்வாக எவ்வித பாகுபாடுமின்றி எங்களில் ஒன்றித்து வாழ்கின்றார் என்று கூறினர். அண்மையில் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற நகரங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உதவியவர்கள் அனைவருமே மதங்களைக் கடந்தவர்கள்தாம். இல்லையா? அவ்வாறே, 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி என்னும் பேரழிவின்போதும் மக்கள் மதங்களைக் கடந்துதான் பணியாற்றினார்கள். இன்று 20 விழுக்காட்டு மத அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளால் மட்டுமே மதக்கலவரங்கள் பெருமளவில் தூண்டிவிடப்பட்டு மனிதம் சிதைக்கப்படுகின்றது என்ற பேருண்மையை இன்று நாம் புரிந்துகொள்வோமா?

ஆறுகள் பலவகைப்பட்டவையாக இருந்தாலும் அவைகள் சேருமிடம் கடல். அவைகளில் ஒவ்வொன்றும் கடலில் கலந்தபின்பு தனது அடையாளத்தை இழந்து கடலோடு கடலாகிவிடுகிறது. நமது மதங்களும் அப்படிதான். ஆன்மிகத்தின் பாதைகள் பலவகைகயாக இருந்தாலும் இறைவனை அடையும் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கின்றது. மதங்கள் இறைவனை நோக்கிச் செல்ல செல்ல அன்பு, அமைதி, இரக்கம் போன்ற இறைகுணங்களில் மனிதகுலம் மேம்பாட்டு உலகில் அமைதி நிலவிடவேண்டும் என்பதே ஆன்மிகத்தின் குறிக்கோளாக இருக்கின்றது. ஆனால் இன்றைய உலகில் இந்த முக்கிய நோக்கம் மறக்கப்பட்டு மதத்தின் பெயராலும் தெய்வங்களின் பெயராலும் கலவரங்களும் கொலைவெறியாட்டங்களும் அரங்கேறி வருவது மனித குலத்தை பேராபத்தின் பிடியில் சிக்கவைத்துள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. "சாதியிலே, மதங்களிலே, சமயநெறி களிலே, சாத்திரச்சந் தடிகளிலே, கோத்திரச்சண் டையிலே, ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே" என்ற பாடலில், சாதிகள், மதங்கள், சமயநெறிகள், சாத்திரங்கள், கோத்திரங்கள் என ஏராளமான பிரிவுகளை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் தாங்கள் சார்ந்ததே உயர்ந்ததென்று சண்டையிட்டுக்கொண்டு அழிவது அழகல்ல என்கின்றார் வள்ளலார். மேலும் "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே, அன்பெனும் குடில்புகும் அரசே" என்னும் பாடலில், ‘அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்றும், குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் இறைவன் என்ற அரசன் விரும்பி நுழைவான்’ என்றும் பாடுகிறார் வள்ளலார்.

பாவத்தால் பிளவுபட்டிருந்த இம்மனுக்குலத்தை மீட்கவும், பல்வேறு பிரிவினைகளால் சிதறிக்கிடந்த மானிடர் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தி அவர்களை ஒன்றிணைக்கவுமே நமதாண்டவர் இயேசு மனுவுருவெடுத்தார் என்பதை இன்று நாம் கொண்டாடும் திருகாட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது. மேலும் இந்நோக்கிற்காகவே குழந்தை இயேசு எருசலேம் ஆலயத்தில் தனது தாய் தந்தையரால் அர்ப்பணிக்கப்படுகிறார். அங்கே, 'பிற இன மக்களின் இருளகற்றும் ஒளியாக' சிமியோனால் இவ்வுலகிற்குக் காட்டப்படுகிறார் (காண்க லூக் 2:32). ஆகவே, பிரிவினைகள் பேதங்கள் நீங்கி எல்லாரும் எல்லாமும் பெற்று வாழவேண்டும் என்று நினைத்து நாம் ஒவ்வொருவரும் பணியாற்றுகின்றபோது இங்கே எல்லாமே நல்லாதாகவே நடக்கும் என்பது திண்ணம். மேலும் மதங்களற்ற, எல்லோரும் கடவுளை ஒருவராகப் பார்க்கும் சமத்துவ சமுதாயம் படைக்க நாம் ஒவ்வொருவரும் நம்மை அர்பணித்துக்கொள்ளவேண்டும் என்ற படிப்பினையை இன்றைய நாள் நமக்கு வழங்குகின்றது என்பதையும் நம் மனங்களில் இருத்துவோம். இந்த மனப்பாங்கினைத்தான், தாயுமானவர், 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே' என்கின்றார். ஆகவே, நமது அன்றாட ஆன்மிகப் பயணத்தில் நாடு, மதம், இனம், மொழி, பண்பாட்டு கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து, ஒரே இறைவனின் பிள்ளைகளாக வாழும் வழியைக் காட்டும் விண்மீன்களாகத் திகழ்ந்திடுவோம். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2024, 12:12