தேடுதல்

தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்தும் இயேசு தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்தும் இயேசு  

பொதுக் காலம், 4-ஆம் ஞாயிறு: உண்மை இறைவாக்கினர்களாய் ஒளிர்வோம்!

நமது அன்றாட இறைவாக்கினருக்குரிய பணிகளில் போலித்தன்மையை அகற்றி இயேசுவிடம் விளங்கிய உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவோம்.
பொதுக் காலம், 4-ஆம் ஞாயிறு: உண்மை இறைவாக்கினர்களாய் ஒளிர்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.  இச 18: 15-20      II. 1 கொரி 7:32-35      III.  மாற் 1:21-28)

இன்று நாம் பொதுக் காலத்தின் நான்காம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் ஓர் உண்மையான இறைவாக்கினருக்கு இருக்கவேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் சுட்டிக்காட்டுகின்றன. இன்றைய முதல் வாசகத்தில், "கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு" என்று மக்களிடம் உரைக்கும் மோசே, "உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன் ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்" என்று ஆண்டவர் தன்னிடம் கூறியதாகவும் எடுத்துரைக்கின்றார். மேலும் இப்பகுதியை நாம் தொடர்ந்து வாசிக்கின்றபோது, "ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று எப்படி நான் அறிவது?’ என்று நீ உன் மனத்தில் எண்ணலாம். ஓர் இறைவாக்கினன் ஆண்டவரின் பெயரால் உரைப்பது நடைபெறாமலும் நிறைவேறாமலும் போனால், அந்த இறைவாக்கினன் தன் எண்ணப்படியே பேசுபவன். அவனுக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை" என்று கடவுள் உரைப்பதையும் காண்கின்றோம்.

அண்மையில் போலிப் போதகர்கள் குறித்த இரண்டு செய்திகளை இணையதளத்தில் வாசித்தேன். இலங்கையைச் சேர்ந்தவர் மனுவேல் மரியா செல்வம். கிறிஸ்தவப் பெண் மதபோதகரான இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா வந்தார். பின்னர், சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி மத போதகராக செயல்பட்டு வந்தார். அண்மையில் (இச்செய்தி வெளியான தருணத்தில்) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பேராயர் காட்ஃப்ரே வாஷிங்டன் நோபுள் என்பவர் இந்தப் பெண் மதபோதகர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், “இலங்கையைச் சேர்ந்த மரியா, எனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8.50 இலட்சத்தை ஏமாற்றிப் பறித்துக்கொண்டார். பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்தார். என்னை போலவே பல குருக்களையும் ஏமாற்றியுள்ளார்” என்று கூறினார். இப்புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மரியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். மரியாவிடம் குடியுரிமை ஆவணங்கள் குறித்த விசாரணைபோது அவரிடம் இந்திய முகவரியுடன் கூடிய இந்திய பாஸ்போர்ட் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கிறிஸ்தவ மதபோதகர் மனுவேல் மரியா செல்வம், போலி ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்கி, போலியாக இந்தியக் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. கடந்த 6 ஆண்டுகளாகப் போலி பாஸ்போர்ட் வைத்து இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பது தெரியவந்த நிலையில், மனுவேல் மரியா செல்வத்தை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இரண்டாவதாக, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கிறிஸ்தவப் போதகர் ஒருவர் பிரைன் டியூமர், சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்களை கை அசைவிலேயே குணப்படுத்துவதாகக் கூறி, ஏழை எளியோரை ஏமாற்றி வருவதாக, இந்திய மருத்துவ சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் மதனாங்குப்பத்தில் ஜெப்ரி மினிஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி வரும் போதகர் ஜெப்ரி, தனது கை அசைவால் பேய்களை விரட்டுவதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாகவும் கூறி வந்ததாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தனக்கு மருத்துவர் என்று பட்டம் போட்டுக் கொள்ளும் போதகர் ஜெப்ரி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமல்லாமல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் நடத்துகின்ற சுகமளிக்கும் கூட்டங்களில் பிரைன் டியூமர், சிறுநீரகப் பாதிப்பு மற்றும், கண்பார்வை இழந்த நோயாளிகள் எல்லாம், தனது கை அசைவில் சுகம் பெற்றதாகப் பெருமை கொள்கிறார் என்றும், இதற்கெல்லாம் உச்ச கட்டமாகத் தன்னுடைய வீடியோவை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் கூட சுகம் பெற்றதாக ஜெப்ரி கூறி வருகிறார் என்றும் அச்செய்தியில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் போலிப்போதகர்கள் பலரால் இயேசு வியாபாரம் செய்யப்படுகிறார் என்பதே நிதர்சனமான உண்மை. இவர்கள் தூய ஆவியானவரைவிடவும் தங்களை மேலானவர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். நம் இந்தியாவில் அதிலும் குறிப்பாக, நம் தமிழகத்தில் இந்தப் போலிப்போதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. மூலைமுடுக்களில் எல்லாம் போலிப்போதகர்கள் கிளம்பி அபிஷேகக் கூட்டங்கள் என்பதன் பெயரில் மக்களை மதிமயங்கச் செய்வதாக செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தங்களின் சுயநலத்திற்காகவும், பேராசைக்காகவும் கடவுளின் பெயரால் மக்களை வசியம் செய்யும் இத்தகைய போலிப்போதகர்களால் மக்களின் நலன்களுக்காக உழைக்கும் உண்மை போதகர்களும் பாதிக்கப்படுவதுதான் பெரும் வேதனையாக இருக்கின்றது. அதனால்தான் நமதாண்டவர் இயேசு போலி இறைவாக்கினர்கள் குறித்து நம்மை இவ்வாறு எச்சரிக்கிறார். போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது. நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.இவ்வாறு, போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள் (காண்க மத் 7:15-20).

இயேசுவின் போதனைகளிலும் அருளடையாளங்களிலும் உண்மைத்தன்மை இருந்தது. அவர் நோயாளர்களை பாவக்கட்டுகளிருந்து மட்டுமல்ல, சமுதாயத்தில் நிலவிய அனைத்துவிதமான அடிமைத்தளையின் கட்டுகளிலிருந்தும் விடுதலை அளித்தார். மேலும் அவரது போதனைகள் மற்றும் இறைவாக்குகள் யாவும், தனிமனிதரின் நலனையும், சமுதாய நலனையும் உள்ளடக்கியதாக இருந்தன. அவர் செய்த அருளடையாளங்களும், படிப்பித்தப் போதனைகளும் குற்றம் கண்டுபிடிக்க முடியாதவையாக இருந்தன. இறைமனிதரான இயேசுவை யாரும் எதிர்த்து நிற்கமுடியவில்லை. மனிதரின் நலன்களை முதன்மைப்படுத்தி ஓய்வு நாள் சட்டத்தையும் அவர் எதிர்க்கத் துணிந்தார். மனிதராக, இறைவாக்கினராக, மெசியாவாக, மீட்பராக அவர் தன்னை வெளிப்படுத்தியவிதம் யாராலும் குறைசொல்ல முடியாததாக இருந்தது. தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவரை இயேசு குணப்படுத்தும் இன்றைய நற்செய்தியில், “வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு போட்ட அதட்டலுக்குத் தப்பியோடிய தீய ஆவியை கண்ணுற்ற மக்கள், “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக் கொண்டதைப் பார்க்கின்றோம். அதுமட்டுமன்றி, இயேசுவின் செயல்களைக் கண்ட பலர் அவரை இறைமகனாக, தாவீதின் மகனாக, இறைவாக்கினராக, மீட்பராக, மெசியாவாக அங்கீகரித்து அவரில் ஆழமான நம்பிக்கை கொண்டனர்.

நற்செய்தியாளர் மாற்குவைப் பொறுத்தளவில், தீய ஆவி பிடித்திருந்தவரைக் குணப்படுத்தியதைத்தான் இயேசு ஆற்றிய முதல் இறையாட்சிப் பணியாக எடுத்துக்காட்டுகின்றார். இறையாட்சி என்பது அடிப்படையில் தீய சக்திகளின் ஆதிக்கத்தை அகற்றுவதே என்பதை இயேசு இச்செயல் வழியாக வெளிப்படுத்துகின்றார் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். இயேசுவின் காலத்தில் கடவுளுக்கு எதிராகப் பல்வேறு வகையான தீய சக்திகள் மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தன. அன்றுமுதல் இன்று வரை தங்கள்மீது தீமைகளை விளைவிக்கும் சக்திதான் ஒருவகையான பேய் அல்லது தீய ஆவி  என்று அனைத்து மக்களாலும் நம்பப்பட்டு வருகிறது. நற்செய்தியாளர் மாற்கு காலத்தில் வாழ்ந்த யூதர்களைப் பொறுத்தளவில், கடவுளுக்கு எதிரான ஓர் ஆதிக்க சக்திதான் பேய் என்றும், மக்களைப் பாதிக்கும் நோய்கள் மட்டுமன்றி, இயற்கையில் ஏற்படும் அனைத்துவிதமான அழிவுகளுக்கும் இத்தீய சக்தியே காரணம் என்றும் கருதினர். குறிப்பாக, தாங்கள் புரிந்துகொள்ள இயலாத பல மனநோய்கள் சாத்தானின் தூண்டுதலால் ஏற்படுகின்றன என்றும் நம்பினர். தூய்மை, தீட்டு என்ற இரண்டு நிலைகளை தங்கள் மனதில் கொண்டிருந்த யூத மக்கள், கடவுளின் தூய சக்திக்குப் பெரிதும் சவாலாக விளங்கிய சாத்தானின் செயல்பாடுகளை தீய சக்தி என்று எண்ணி வந்தனர். ஆக, தங்களை ஆட்டிப்படைத்த தீய சக்திகளை அகற்றி விடுதலை தருவதே ஓர் இறைவாக்கினருக்குரிய முதல் பணியாக அமையவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதாக, இயேசு, 'தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்' நிகழ்ச்சி அமைந்துள்ளதாக நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதே நற்செய்தியில் வரும், இயேசுவும் பெயல்செபூலும் (3:20-30), கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவரை நலமாக்குதல் (5:1-20), தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாதல் (9:14-27) ஆகிய மூன்று நிகழ்வுகளும் தீய ஆவிகளிடமிருந்து விடுதலை தரும் செயல்களாகவே நற்செய்தியாளர் மாற்கு சுட்டிக்காட்டுவதை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் சாரிபாத்துக் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர்ப்பித்துக்கொடுத்த நிகழ்விலும் (காண்க 1 அர 17:8-24) இறைவாக்கினரான எலியா இயேசுவின் அதே அணுகுமுறையைக் கொண்டிருந்ததை நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

அவ்வாறே, இயேசு நிகழ்த்திய அருளடையாளங்களில் அன்பும், கனிவும், அக்கறையும், விடுதலையும் வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். அதற்கொரு எடுத்துக்காட்டாக, இயேசு நயீன் ஊர்க் கைம்பெண் மகனை உயிர்பெறச் செய்த நிகழ்வைக் கூறலாம். இந்நிகழ்வில், யாரும் சொல்லாமல், தானாக அறிந்தவராய் அந்நகருக்கு வந்து அந்தக் கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பித்துக் கொடுக்கின்றார் இயேசு. காரணம், கைம்பெண்ணான தனது தாயின் துயரங்களை அவர் அறிந்திருந்ததால், அக்கைம்பெண்ணுக்கும் தானாக உதவ முன்வருகிறார் இயேசு. அதனால்தான், “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லி அம்மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர் (காண்க லூக் 7:16) என்று வாசிக்கின்றோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஒரு குடும்பத்திலுள்ள கணவன் மனைவியின் செயல்பாடுகள் எப்படி கடவுளுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் என்பதை ஒரு சிறந்த இறைவாக்கினருக்குரிய தொனியில் எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார். "உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்" (வச 35) என்று மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் அவர் கூறும் அறிவுரையில் அன்பு, கனிவு, இரக்கம், கரிசனை, அக்கறை, பொறுப்புணவு, சமுதாய நலன் ஆகிய இறையாட்சிக்குரிய விழுமியங்கள் அவரது இறைவாக்கினருக்குரிய போதனைகளாக வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். மேலும் போலிப்போதகர்கள் குறித்து புனித பவுலடியாரும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். "சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது; நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள். ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை; தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள். இவர்கள் இன்சொல் பேசி முகமன் கூறிக் கபடற்ற உள்ளத்தினரை ஏமாற்றுகிறார்கள்" (காண்க உரோ 16:17-18)

இன்றைய நம் உலகில் தங்களை இறைவாக்கினர்களாகக் கட்டிக்கொள்ளும் போலிப் போதகர்கள் தீய ஆவியை ஓட்டுகின்றோம் என்றும், நோய்களிலிருந்து அற்புதமாக மக்களைக் குணப்படுத்துகிறோம் என்றும் கூறிக்கொண்டு மக்களைப் பிளவுபடுத்துவதையும், பணம் சம்பாதிப்பையும் தங்களின் ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி, இத்தகையச் செயல்கள் வழியாகப் பெண்களைப் பாலியல் துன்புறுத்துலகுக்கு உள்ளாக்குவதாகவும் அடிக்கடிக் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்துலகளவிலும் காணப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் அன்றைய காலத்தில் வாழ்ந்த போலிப்போதகர்களின் உண்மை முகத்தைத் தோலுரித்துக்காட்டுகின்றார் புனித பேதுரு. அதனால்தான், முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்; தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்; விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள். அவர்களுடைய காமவெறியைப் பலர் பின்பற்றுவார்கள். அவர்களால் உண்மை நெறி பழிப்புக்குள்ளாகும். பேராசை கொண்ட அவர்கள் கட்டுக் கதைகளைச் சொல்லி உங்கள் பணத்தைச் சுரண்டுவர். பழங்காலத்திலிருந்தே அவர்களுக்குத் தண்டனை தயாராய் உள்ளது. அழிவு அவர்களுக்காக விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது. (காண்க 2 பேது 2:1-3) என்று போலிப்போதகர்கள் குறித்து புனித பேதுருவும் காட்டமாகக் கூறுகின்றார். ஆகவே, நமது அன்றாட இறைவாக்குப் பணிகளில் போலிக் கிறிஸ்தவர்களாக வாழ்வதும், போலிப்போதனைகளைக் கற்பிப்பதும், போலியான அருளடையாளங்களை வெளிப்படுத்துவதும் சாத்தானான தீய ஆவியின் செயல்களே என்பதை இந்நாளில் உணர்வோம். நமது அன்றாட இறைவாக்கினருக்குரிய பணிகளில் போலித்தன்மையை அகற்றி இயேசுவிடம் விளங்கிய உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2024, 13:14