தேடுதல்

இந்திய கிறிஸ்தவர்கள் பேரணி இந்திய கிறிஸ்தவர்கள் பேரணி  (AFP or licensors)

மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தாளும் முயற்சிகள்

சத்தீஸ்கரில் 249 கிறிஸ்தவக் குடும்பங்கள், மற்றும் இரு முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 1000 பேரை இந்துவாக மதம் மாற்றியுள்ளதாக உரைக்கும் இந்து அமைப்பினர்,

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில்  250 கிறிஸ்தவக் குடும்பங்களை இந்து மதத்திற்கு அண்மையில் மதம் மாற்றியுள்ளதாக இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் விசுவாசத்தில் ஒன்றித்திருக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார் அம்மாநிலத்தின் ராய்ப்பூர் பேராயர் விக்டர் ஹென்றி தாக்கூர்.

249 கிறிஸ்தவக் குடும்பங்கள், மற்றும் இரு முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்த  ஏறக்குறைய 1000 பேரை இந்துவாக மதம் மாற்றியுள்ளதாக உரைத்த இந்து அமைப்பினர், தாய் மதத்திற்கு திரும்பும் இந்த நிகழ்ச்சி ஒரு தொடர்கதையாக இடம்பெறும் எனவும் அறிவித்தனர்.

251 குடும்பங்களின் கால்களை கங்கை நீரால் கழுவி இந்து மதத்தில் இணைத்த சடங்கு முறைகள் இம்மாதம் 27ஆம் தேதி தலைநகர் ராய்ப்பூரில் பண்டித் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி மற்றும் சத்தீஸ்கர் மாநில பாஜக செயலர் பிரபால் பிரதாப் சிங் ஜாதவ் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சத்தீஸ்கர் மாநில கத்தோலிக்கர்களுக்கு செய்தி வெளியிட்ட பேராயர் ஹென்றி தாக்கூர் அவர்கள், மதம், இனம், நம்பிக்கை ஆகியவைகளின் அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சிகள் இடம்பெறும் இவ்வேளையில், கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்று செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இத்தகைய முயற்சிகளை கையிலெடுக்கும் இந்து அமைப்புக்களின் செயல் குறித்து கவலை கொள்ள வேண்டாம் என கத்தோலிக்கர்களை விண்ணப்பித்துள்ள பேராயர் ஹென்றி தாக்கூர் அவர்கள், தவறான தகவல்கள் குறித்து கவனமுடன் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவ விரோத நடவடிக்கைகளால் தலத்திருஅவையின் கோவில்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், கைவிடப்பட்டோர் பாதுகாப்பகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் மட்டும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 148 வன்முறை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2024, 15:31