நிகரகுவா அரசு நோக்கி ஐ.நா. மனித உரிமைகள் அவை கேள்வி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நிகரகுவா நாட்டில் ஆயர் இசிதோரோ மோரோ அவர்கள் கட்டாயமாக காணாமல் போக வைக்கப்பட்டுள்ளது குறித்து அரசை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளது மத்திய அமெரிக்காவிற்கான ஐ.நா.வின் மனித உரிமைகள் அவை.
16 நாட்களுக்கு மேலாக அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியாமலேயே அரசு மறைத்து வைத்துள்ளது என குற்றஞ்சாட்டிய ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு, இவ்வாறு தகவலை மறைத்து வைப்பது, ஆயரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் தெரிவிக்கிறது.
எந்த ஒரு குடியரசிற்கும் தூணாக இருக்கும் மதசுதந்திரத்திற்கான உரிமையை மீறி, மதத் தலைவர்களை நிகரகுவா அரசு கைது செய்துவருவது குறித்து ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
நிகரகுவா அரசு, அடிப்படை சுதந்திரங்களுக்கு எதிராக, அரசியல் மற்றும் பழங்குடி இனத் தலைவர்களையும், கத்தோலிக்கத் திருஅவையின் அங்கத்தினர்களையும், மனித உரிமை நடவடிக்கையாளர்களையும், சமூகத்தொடர்பாளர்களையும் சித்ரவதைச் செய்வதுடன் அவர்களை சட்டவிரோத தடுப்புக் காவலில் வைப்பதையும் ஏற்கனவே குறைகூறியுள்ளது இம்மனித உரிமைகள் அமைப்பு.
மக்களுக்காக குரல் கொடுத்துவரும் நிகரகுவா தலத்திருஅவையின் அங்கத்தினர்களை, தொடர்ந்து அந்நாட்டு அரசு கைது செய்து வரும் நிலையில், திருக்காட்சி திருவிழாவான கடந்த சனிக்கிழமையன்று மனகுவா பேராலயத்தில் 9 புதிய அருள்பணியாளர்களை திருநிலைப்படுத்தினார் அந்நாட்டு கர்தினால் Leopoldo José Brenes Solórzano.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்