தேடுதல்

உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டம் நடைபெறும் இடம் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டம் நடைபெறும் இடம்  

நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புங்கள் !

நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது என்பது, எந்தவொரு துறையிலும் முன்னேற்றத்திற்கான இன்றியமையாதத் தேவையாக உள்ளது : முனைவர் ஜெர்ரி பிள்ளை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஜனவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வரும் வேளை, அனைத்து மக்களின் நீண்ட கால நலனுக்காக பலதரப்பு ஒத்துழைப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் WCC எனப்படும் ​​உலகத் திருச்சபைகளின் பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ஜெர்ரி பிள்ளை.

மேலும் நம்பிக்கை என்பது இன்றியமையாத மூலப்பொருள் என்று கூறியுள்ள பிள்ளை அவர்கள்,  இந்த நம்பிக்கை என்பது இல்லாமல் மனிதச் சமூகங்கள் மற்றும் உலகளாவியச் சமூகம் செயல்பட முடியாது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

டாவோஸ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் சமத்துவமின்மை, அநீதி மற்றும் பிரிவினையின் இயக்கிகளாக இருந்தாலும், உலகில் நீதி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காகத் தங்கள் கணிசமான செல்வாக்கைப் பயன்படுத்துவதில் பலர் உண்மையாகவே கடமைப்பட்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் பிள்ளை.

உலகளாவிய நெருக்கடிகளை, குறிப்பாக காலநிலை மாற்றம், மோதல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை கருத்தில்கொண்டு, பிளவு மற்றும் கட்டமைப்பற்ற போட்டியைக் காட்டிலும் ஒத்துழைப்பு மற்றும் செயலுக்கான அவசரத் தேவை அதிகம் உள்ளது என்பதை உணர்ந்திட வேண்டும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் பிள்ளை.

இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், பலதரப்பு ஒத்துழைப்பிற்கான அர்ப்பணிப்பை புதுப்பிப்பதற்கும் இந்தக் கூட்டத்தின் வலிமை பயன்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பிள்ளை அவர்கள், சலுகை பெற்ற சிலரின் குறுகிய கால நலன்களுக்காக மட்டுமல்லாது, அனைத்து மக்களின் நீண்ட கால நலனுக்காகவும் நமது பொதுவான இல்லத்திற்காகவும் இதன் வலிமை பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.  

‘நம்பிக்கையை மீண்டும் கட்டயெழுப்புதல்’என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் இந்த உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், அரசியல், பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகளில் முக்கிய முடிவெடுப்பவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2024, 15:29