விடை தேடும் வினாக்கள் - என்மீது அன்பு செலுத்துகிறாயா?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இயேசு இறந்து உயிர்த்தபின், பேதுருவோடு சேர்த்து இயேசுவின் ஏழு சீடர்கள் இரவில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இரவு முழுவதும் எந்த மீனும் கிட்டவில்லை. விடியற்காலை ஆனபோது, இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. மீன் கிடைக்காத சீடர்களிடம், வலப்புறம் வலையைப் போடச் சொல்லி ஒரு புதுமையை நிகழ்த்தியவுடன், சீடர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள பேதுருவோ கடலில் குதித்து இயேசுவை நோக்கி நீந்தி வருகிறார். இயேசுவோ அவர்களுக்கான காலை உணவை அங்கு தயாராக வைத்திருந்தார். அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட(இவைகளைவிட) மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்கிறார். இதையே மும்முறை கேட்கிறார். இருவருக்குமான உரையாடல் முடிந்தபின், பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதையும் குறிப்பிட்ட இயேசு, பின்னர் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்கிறார். இந்த நிகழ்வில் இயேசு கேட்ட, “என்மீது அன்பு செலுத்துகிறாயா? ” என்ற வினாவுக்கு விடை தேட இன்றைய நிகழ்ச்சியில் முயல்வோம்.
இயேசுவை அன்பு செய்வது என்றால் என்ன என்பதை மிகக் கடினமான வழிகளில் அறிந்துகொண்டவர் பேதுரு. தான் இயேசுவை எவ்வளவு தூரம் அன்பு கூர்கிறேன் என்பதை ஒருமுறைக்குமேல் நேரடியாக வெளிப்படுத்தியவர் பேதுரு.
நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது…… ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்று இயேசு கூறிய நிகழ்வைக் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றுப் பார்ப்போம். இப்போது பின்தொடர முடியாது என இயேசு கூறியதை பொறுத்துக்கொள்ள முடியாத பேதுரு, “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்று கூற, இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்கிறார்.
இந்த இரு நிகழ்வுகளையும், அதாவது, மறுதலித்ததையும், அன்புகூர்கிறாயா என்று கேட்டதையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம். அங்கும் இங்கும் அன்பு குறித்ததுதான் மையக்கருத்தாக இருக்கின்றது. மும்முறை மறுதலிப்பாய் என இயேசு கூறியதும், இங்கு மும்முறை ஒரே கேள்வியைக் கேட்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றன. பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்ததை இயேசு நினைவூட்டுவதாக இருக்கின்றது. அதற்கு காரணமும் இருந்தது. ஏனெனில், உயிருக்குப் பயந்து தன் தலைவனையே மறுதலித்தவர் எவ்வாறு அந்த புது இயக்கத்திற்கு தலைவனாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படும் என்பதை உணர்ந்ததால், பேதுருவின் உள்ள உறுதியை, தலைவன் மீது கொண்ட அன்பை பொதுவில் வெளிப்படுத்த விரும்புகிறார் இயேசு. அது மட்டுமல்ல, இந்த துரோகத்தை எண்ணி எண்ணி மனம் நொந்து அழுத பேதுருவையும் அந்த குற்ற உணர்விலிருந்து வெளிக்கொணர ஆவல் கொள்கிறார் இயேசு. தன் மரணத்திற்குப்பின் மீண்டும் தன் மீன்பிடித் தொழிலுக்கேச் சென்ற பேதுருவுக்கு இது இயேசு விடுக்கும் இரண்டாவது அழைப்பாக இருக்கின்றது. அதனால்தான் இறுதியில், என்னைப் பின்தொடர் என்று கூறுகிறார். இப்போது என்னச் செய்வது என்று தெரியாமல், குழம்பி நின்ற, அதாவது, மறுபடியும் பழையத் தொழிலுக்கேச் சென்ற சீடர் கூட்டத்தின் தலைவனுக்கு புது ஊக்கத்தைத் தருவதாக இந்த நிகழ்வு உள்ளது.
தன் தலைவருக்காக உயிரையும் கொடுக்க உண்மையிலேயே தயாராக இருந்த சீடர், மும்முறை மறுதலித்தது மட்டுமல்ல, தன் தலைவனால் அவ்வேளையில் திரும்பிப் பார்க்கவும் படுகிறார். ஆண்டவர் திரும்பி, தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: “இன்று சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார் என லூக்கா நற்செய்தி 22ஆம் பிரிவில் வாசிக்கின்றோம்.
இங்கு மும்முறை இயேசு பேதுருவை நோக்கி, என்னை அன்பு கூர்கிறாயா என்று கேட்பதில் அர்த்தம் உள்ளது. ஏனெனில், இயேசு மீது பேதுரு அன்பு கொண்டிருப்பது, இயேசுவுக்கும் தெரியும், பேதுருவுக்கும் தெரியும். இருப்பினும் இயேசு இந்த கேள்வியை கேட்கிறார் என்றால், இது பேதுருவின் நன்மைக்காகவே. நாம் ஏற்கனவே கூறியதுபோல், அவர் வழிநடத்தவிருக்கும் சீடர்கள் முன் அவரை உறுதிப்படுத்தவும், அவரை அவரின் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கவும், அவர் தன்னை அன்புகூர்ந்த பழைய அதே பேதுருதான் என்பதை சீடர்கள் முன் நிரூபிக்கவும்தான். மும்முறை பேதுருவை நோக்கி ஒரே கேள்வியைக் கேட்டது, தான் அவரை மன்னித்துவிட்டேன் என்பதை எடுத்துரைக்கவும்தான் என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். மறுதலித்தலும் மன்னித்தலும் இடம்பெற்ற இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையில் காணப்படும் ஓர் ஒற்றுமையையும் நாம் நோக்கவேண்டும். இயேசுவை பேதுரு மறுதலித்தபோது அங்கு குளிர்காய கரிகொண்டு தீ மூட்டப்பட்டிருந்தது. இங்கும், படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் சீடர்கள் காண்கின்றனர். இந்த தீ மூட்டலைக் கண்டவுடன், மறுதலித்த ஞாபகம் பேதுருவுக்கு வந்து நிச்சயம் அவர் உணர்ச்சி வசப்பட்டிருக்க வேண்டும். அன்று தீ மூட்டப்பட்ட இடத்தில் இயேசு ஒரு துன்புறும் ஊழியனாக இருந்தார், இன்றோ ஒரு தேற்றும் தலைவனாக வந்து நிற்கிறார். மேலும், இன்று நாம் காணும் நிகழ்வில், இயேசுவின் மரணம் சீடர்களிடம் உருவாக்கியிருந்த வெற்றிடத்தை, முதலில் மீனே கிடைக்காமல் காலியாக இருந்த வலை உருவகப்படுத்துவதையும் நாம் நோக்கலாம்.
அன்புகூர்கிறாயா என்ற கேள்வியை இயேசு பேதுருவிடம் மீண்டும், மீண்டும் கேட்டதால், பேதுருவிடமிருந்து எதார்த்தமான, தன்னிலை உணர்ந்த பதில் இறுதியில் வெளிவந்தது: "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்கிறார். இந்தப் பதிலுக்குப் பின், இயேசு, பேதுருவை ஒரு திருத்தூதராக உறுதிப்படுத்துவதைக் காண்கிறோம். இங்கே ஆண்டவர் தன் ஆடுகளை பேதுருவின் அதிகாரத்திலோ அல்லது தனி கவனிப்பிலோ விடவில்லை, மாறாக இயேசுவை அன்புசெய்வதென்றால், தன் ஆடுகளை பேணிகாப்பதே ஆகும் என்பதை தெளிவுப்படுத்துகிறார். இறுதியாக, இயேசு, 'என்னைப் பின்தொடர்' என்று பேதுருவை அழைக்கின்றார். முதல் சீடர்களை ஒத்தமைவு நற்செய்திகளில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு இயேசு அழைக்கின்றார். இது, பேதுருவுக்கான இரண்டாவது அழைப்பாகின்றது.
தன் காலடிகளை இயேசு கழுவக்கூடாது என்று தடுத்து நிறுத்திய பேதுரு, அந்தச் செயல் வழியே திருஅவையைக் குறித்து இயேசு சொல்லித் தந்த ஒரு பாடத்தைப் பயின்றார். காயப்பட்டத் திருஅவை, தன் காயங்கள் கழுவப்பெற்று, காயப்பட்டிருக்கும் மனித சமுதாயத்திற்குப் பணியாற்றச் செல்லவேண்டும் என்பதே அந்தப் பாடம். அடுத்து, இறைவனை மறுதலித்ததன் வழியாகவும் ஒரு பாடத்தை அழுது, அழுது கற்றுக் கொள்கிறார். இப்போது மீண்டும், அன்பு செய்கிறாயா என்ற கேள்வி வழி இன்னுமொரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறார். புடமிடப்பட்ட தங்கமாக மாற அந்த தலைவனுக்கு பல சோதனைகள் தேவைப்பட்டன. இப்போது அன்புகூர்வது குறித்த பாடம் நடத்தப்படுகிறது. பேதுரு மற்றவர்களைவிடவும், மற்றவைகளை விடவும் இயேசுவை மிகுதியாக அன்பு செய்தார். அந்த அன்பின் வெளிப்பாடுதான், அவரது ஆடுகளை மேய்த்து, இயேசுவுக்காகத் தன் உயிரைத் தந்தது.
நமது பணியும், அர்ப்பணமும் இவ்வுலகை உன்னதமான உலகமாக மாற்ற வேண்டுமானால், முதலில் கடவுளையும், அவர் படைப்பான மனிதர்களையும் அன்பு கூர நாம் அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளை நாம் அன்பு கூர்கின்றோம் என்பதன் வெளிப்பாடுதான், அவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பது. ஏனெனில், “என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்” (யோவா 14:21) என்பது இயேசுவே கூறிய வார்த்தை.
அன்பு தான் இங்கு அனைத்துமாய் இருக்கிறது என்றும், அன்பே சிவமென்றும் சொல்வதுண்டு. இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம். அந்த புரிதல் தான் அன்பு. ஒரு காதலன் காதலிக்கு இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும் அன்பே காதல் ஆகும். குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் புரிதலை பாசம் என்றும் நேசம் என்றும் எடுத்துரைக்கின்றோம். கடவுளுக்கும் நமக்கும் இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும் அன்பை பக்தி என்கிறோம். இப்படி புரிதலே அனைத்து இடங்களிலும் அடிப்படையில் அன்பாய் இருந்து, அன்பாய் மலர்கிறது. ஆனால், முழுநிறைவான அன்பு, அதாவது அனைத்தையும் தாண்டிய அன்பு, மற்றவர்களைவிடவும், மற்றவைகளை விடவும் இறைவனை மிகுதியாக அன்பு கூர்வது, நம் ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இடையேயான புரிதலில் பிறக்கின்றது. இதைத்தான் பேதுருவின் வாயால் பொதுவில் வெளிப்படுத்த உதவுகிறார் இயேசு. தெய்வத்தில் நாம் கொள்ளவேண்டிய அன்பு, சுயநலமற்றது, நிபந்தனையற்றது, எல்லையற்றது, மாற்றமற்றது. ஏனெனில், அன்பு காட்டும் மனம் ஆண்டவன் இருக்கும் இடமாகும். உண்மையான அன்பிற்கு உயிர் உண்டு என்பதை உணர்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்