தேடுதல்

குழந்தை இயேசுவுடன் அன்னைமரியா குழந்தை இயேசுவுடன் அன்னைமரியா  (Copyright (c) 2017 Renata Sedmakova/Shutterstock. No use without permission.)

விடை தேடும் வினாக்கள் - ``என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?''

'இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்' என்று இயேசு கூறும்போது, மரியாவின் பேறுபெற்ற நிலை இன்னும் ஒரு படி மேலே போகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்ற கேள்வியை இயேசு எத்தகைய சூழலில் கேட்டார் என்பது குறித்துக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். இயேசு தம் சீடர்களாக பன்னிருவரை நியமித்தபின் வீட்டிற்குச் செல்கிறார். பின்னர் கலிலேயா பகுதிக்கு வந்தபோது மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவரும் சீடர்களும் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும், “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். இத்தகையப் பின்னணியில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்புகிறார்கள். ஏனெனில், அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வந்திருப்பதை சிலர் இயேசுவிடம் சொல்ல, அவரோ, அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்கிறார்.

இதையொத்த ஒரு நிகழ்வை பிறிதொரு இடத்திலும் பார்க்கிறோம்.

ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டியதைத் தொடர்ந்து பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுவதாக எழுந்த புகார் குறித்தும், தீய ஆவி திரும்பி வருதல் குறித்தும் அவர் பேசியதைக் கேட்ட பெண் ஒருத்தி,  “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார். இயேசுவோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்கிறார்.

முதல் நிகழ்வுக்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுப்பதாக இரண்டாவது நிகழ்வு உள்ளது. இங்கு அந்தப் பெண் எடுத்துரைக்கும் தாய்க்கும், இறைவார்த்தையை கடைபிடிக்கும் மனிதருக்கும் இடையேயான ஒப்பீடு இருக்கின்றதேயொழிய யார் என் தாய் என்ற கேள்வியில்லை. யார் என் தாய் என்ற கேள்வி பல்வேறு பிரிந்த சபைகளால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

அன்னை மரியாவின் இடம்

நான் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, என் மாமாவின் கடைக்கு வரும் ஒரு முதியவருடன் அன்னைமரியா பற்றி ஒரு கருத்துப் பரிமாற்றம் நடந்தது. அவர் அன்னைமரியாவை நம்பாத ஒரு கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர். கத்தோலிக்கர்கள் தேவையில்லாமல் அன்னைமரியாவை வணங்குகிறார்கள், அன்னைமரியாவின் சிலையை வணங்குகிறார்கள் என்று விவாதித்த அந்த முதியவர், யார் என் தாய் என கேட்டு இயேசுவே அவரை ஏற்றுக்கொள்ளாமல் அவமதித்தாரே என்றார். சிறுவயதிலிருந்தே எனக்கு விவிலியத்தை சற்று ஆழமாகப் படிப்பதில் ஆர்வம் உண்டு. நான் அவரிடம் அன்று கூறிய பதில் இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவரிடம், என் தாய் யார் என இயேசு கேட்டதோடு நிறுத்திவிட்டீர்களே, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே என் தாயும் சகோதரரும் என்று இயேசு கூறியதை விட்டுவிட்டீர்களே என்றேன். அதற்கென்ன, அது கூட மரியாவுக்கு எதிராகத்தான் செல்கிறது. கடவுளின் திருவுளம் நிறைவேற்றுபவர்கள்தான் தாயும் சகோதரர்களும், இவர்களல்ல என்று இயேசுவே கூறிவிட்டார் என்றார். நான் அவரிடம், அப்படியானால் அன்னைமரியா கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றாமல், அதாவது கடவுளின் விருப்பத்திற்கு ஆம் சொல்லாமல் இறைமகனின் தாயானாரா என்று கேட்டேன். இப்படியே விவாதம் தொடர்ந்தது. அதன்பின் இந்த கேள்வி குறித்து பல ஆண்டுகளுக்குப்பின் ஆழமாக சிந்தித்தபோது ஒரு சந்தேகம் தோன்றியது. ஒருவேளை அன்னமரியாவை கௌரவிக்கத்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒரு எதிர்மறைக் கேள்வி வழியாக, அன்னை மரியா இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றியவர் என விளக்கமளித்தாரா இயேசு என்று எண்ணத் தோன்றியது. யார் என் தாய் என்ற கேள்வியை இயேசு கேட்டபோது, அவர் எப்படி இறைமகனின் தாயானார் என்ற கேள்வியும் அங்கு மறைந்து இருப்பதுபோல் தெரிகிறது.

நம் தாய் பேறுபெற்றவர்

“உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று ஒரு பெண் குரலெழுப்பிக் கூறியபோது, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என உரைத்த இயேசு, அன்னை மரியா பேறுபெற்றவர் என்பதை மறுக்கவில்லை, ஆனால் அதைவிட உயர்ந்த பேறுபெற்றோர் கடவுள் விருப்பதை நிறைவேற்றுபவர் என்று கூறும்போது, அன்னைமரியா இறைவிருப்பதை நிறைவேற்றியவர் என்பதும் அங்கு பொதிந்து நிற்கிறது. இதில் இயேசு கிறிஸ்து தன்னுடைய தாய் மரியாவை அவமதித்துவிட்டார் என்று நாம் எண்ணக்கூடாது. மாறாக, தன்னுடைய தாயை இன்னும் ஒருபடி மேலே உயர்த்திப் பேசுகிறார் என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டுமல்ல, மாறாக, தந்தையின் திருவுளத்தை அறிந்து, அதன்படி தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்ததாலும் அவர் இயேசுவின் தாயாக மாறுகிறார். கூட்டத்திலிருந்த ஒரு சாதாரண பெண்மணிக்குத் தெரிந்த உண்மை, அதாவது அன்னை மரியாவின் பெருமை, எல்லாம் அறிந்த இறைமகனுக்கு தெரியவில்லை என்று நாம் புரிந்துகொண்டோமானால், நாம்தான் மடையர்கள்.

'இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்' என்று இயேசு கூறும்போது, மரியாவின் பேறுபெற்ற நிலை இப்போது இன்னும் ஒரு படி மேலே போகிறது. இயேசுவைப் பெற்றதால் மட்டுமல்ல, இறைத்திட்டத்திற்கு, 'ஆம்' என்று சொன்னதால் இன்னும் அதிகம் பேறுபெற்றவர் ஆகிறார். "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக்கா 1:48) என்ற மரியாவின் இறைவாக்கு நிறைவேறுவதை இங்கு முதல்முறையாக காண்கிறோம். இதனை முன்னிறுத்தியே இயேசு அளிக்கும் பதிலும் அமைந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது.

இந்த நிகழ்வு, நமக்கு ஓர் உண்மையை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. அது என்னவென்றால், ஒருவருக்கு அவருடைய பிறப்பினால் அல்ல, அவருடைய செயல்களால், அவர் வாழ்வினால் மட்டும் பெருமை சேரும் என்பதாகும். ஆபிராகாமின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு எப்படியும் வாழ்பவர்களை விடவும், எந்த குலத்தில் பிறந்தாலும் இறைவார்த்தையைக் கேட்டு நடப்பவர்கள் இன்னும் அதிகமாய் பேறுபெற்றவர்கள் என்கின்றார்.

சீடத்துவ உறவே முதன்மை

யூதரென்றும், புறவினத்தாரென்றும், ஆணென்றும், பெண்ணென்றும், அடிமையென்றும், உரிமை குடிமக்களென்றும், எதுவும் இனி பொருள் தராது. பொருள் தரக்கூடியதெல்லாம் ஒன்றே: கிறிஸ்துவை நாம் அணிந்திருக்கிறோமா, அவராகவே நாம் மாறியிருக்கிறோமா, அவரது உடன்பிறப்புக்களாய், கடவுளின் பிள்ளைகளாய் நாம் மாறி வாழுகின்றோமா, வளர்கின்றோமா என்பதே என்றும் பொருள் தரும் என்கிறார் திருத்தொண்டர் பவுலடிகளார்.

இதைத்தான் கிறிஸ்துவும் இங்கு விளக்குகிறார். என்னை பெற்றெடுத்ததால் மட்டும் அன்னை மரியா உயர்ந்துவிடவில்லை, ஆனால் இறைவார்த்தையை கேட்டதால், அதை மனதில் நிறுத்தியதால், அதன்படி வாழ முன்வந்ததால், முற்றிலும் அந்த வார்த்தைக்காகவே தன்னையே அர்ப்பணித்ததால், மரியா கடவுளுக்குரியவராகிறார், கிறிஸ்துவின் உறவாகிறார் என்பதை இங்கு அறிகிறோம். ஆண்டவரையே தம் மகன் என்று அழைக்கும் பேறுபெற்றவர் மரியாவைத் தவிர வேறு யார்?

இந்த உலகில் வாழும் எல்லா மனிதரும் ஏதோ வகையில் உறவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதருக்கு உறவு முக்கியம் தான். ஆனால் அது, நம் குடும்பம், நம் சொந்தம், நம் ஊர், நம் சாதி போன்ற மன நிலையைத் தாண்டி அனைவரையும் அன்பு செய்து, நல்லுறவு கொள்வதுதான் உண்மையான உறவாகக் கருதப்படுகிறது. இத்தகைய மனப்பான்மையே ஒரு முதிர்ச்சியான மனப்பான்மையாகும். இதைத்தான் இங்கு வலியுறுத்துகிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

நம் பிறப்பால் வந்த உறவுகளைத் தாண்டி இந்த உலகில் பிறந்த எல்லோரையும் அன்பு செய்து நல்லுறவு கொள்ளும் மனப்பான்மையே உண்மையான உறவுக்கு வழிகாட்டும். இங்கு உறவின் உச்ச நிலையை நமக்கு அறிமுகம் செய்கிறார் இயேசு. "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?" என்று இயேசு கேட்டபோது, உறவுகளை அவமதிக்கவில்லை, மாறாக, இறையாட்சி பணியில் இரத்த உறவைத் தாண்டி சீடத்துவ உறவே முதன்மையாக்கப் படுகிறது.

இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு ஒருசில உண்மைகளை உணர்த்துகின்றன. அதில் முதலாவது, நாம் இயேசுவின் உறவினர் என்பதாலோ அல்லது கிறிஸ்தவர்கள் என்பதால் மட்டுமோ பேறுபெற்றவர்கள் ஆகிவிடமுடியாது. மாறாக, இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும்போதுதான் பேறுபெற்றவர்கள் ஆகமுடியும் என்பதாகும்.

இப்போது இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை மத்தேயு நற்செய்தி 19ஆம் பிரிவிலிருந்து எடுத்துரைத்து இதனை முடிக்கிறோம். தன்னைப் பின்பற்ற விரும்பிய செல்வரான இளைஞரிடம் இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறுகிறார். அந்த இளைஞர் சென்றபின் இயேசு, “என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்” என்று சீடர்களிடம் கூறுகிறார்.

தாய் தந்தையை மதித்து நட என உரைக்கும் இயேசுதான், சில நிமிடங்களிலேயே, என் பெயரின் பொருட்டு தந்தையையோ, தாயையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர் என்று கூறுவதைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இப்போது, என் தாய் யார் என இயேசு கேட்ட கேள்வியையும் இணைத்துப் பாருங்கள், முழு உண்மையும் விளங்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2024, 12:51