தடம் தந்த தகைமை - எலிசாவின் வியத்தகு செயல்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் தம் கண் முன்னால் நிகழ்ந்தவற்றைக் கண்டு, “எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கியுள்ளது!” என்று கூறி அவர்கள் அவரிடம் வந்து, அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினர். மேலும், அவரை நோக்கி, “இதோ! உம் அடியார்களிடம் ஐம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்!” என்றனர். அதற்கு அவர், “அவர்களை அனுப்ப வேண்டாம்” என்றார்.
ஆனால், எலிசா சலிப்படையும் வரை அவர்கள் அவரை வற்புறுத்தினர். இறுதியாக அவர், “அனுப்பிவையுங்கள்” என்றார். எனவே, அவர்கள் ஐம்பது ஆள்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், “போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா?” என்றார்.
அந்த நகர மக்கள் எலிசாவை நோக்கி, “இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது என்பதை எம் தலைவராகிய தாங்கள் அறிவீர். ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை” என்றனர். அதற்கு அவர் “ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவாருங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே கொண்டுவர, எலிசா நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, “இதோ! ஆண்டவர் கூறுகிறார்: இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது; நிலமும் பயன் தரும்” என்றார். அன்று முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசாவின் வாக்கிற்கேற்ப நல்லதாக இருக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்