தடம் தந்த தகைமை – எலியாவை விட்டுப் பிரிய மனமில்லாத எலிசா
மெரினா ராஜ் - வத்திக்கான்
எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம் அரசன் ஆனான். ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். எலியா எலிசாவை நோக்கி, “ஆண்டவர் என்னைப் பெத்தேலுக்கு அனுப்பியுள்ளார். எனவே, நீ இங்கேயே தங்கியிரு” என்றார். எலிசா அவரை நோக்கி, “வாழும் ஆண்டவர்மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே, அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.
அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, “ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டனர். அதற்கு அவர் “ஆம், எனக்குத் தெரியும்; அதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்று கூறினார். எலியா அவரை நோக்கி, “எலிசா! ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே, நீ இங்கேயே தங்கியிரு” என்றார். அதற்கு அவர், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே, அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர். அப்பொழுது, எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை அணுகி, “ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டனர். அதற்கு அவர், “ஆம், எனக்குத் தெரியும்; அதைப் பற்றிப் பேச வேண்டாம்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்