தடம் தந்த தகைமை – இக்கோவிலை இடித்துவிடுங்கள்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்கிறார்கள்.
இயேசுவோ மறுமொழியாக, “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்கிறார்.
உண்மையான அர்ப்பணர்கள் எப்போதும் அடித்தட்டு மக்களோடு இருப்பார்கள். ஆதிக்கவாதிகளால் சாமானியர்கள் அடிமைப்படுத்தப்படுகையில் தங்கள் அர்ப்பணத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவார்கள். அங்கே சமரசத்திற்கு இடமில்லை. இயேசுவின் எருசலேம் ஆலயத் தூய்மையாக்கல்; ஆட்சியிலும், ஆலயத்திலும் அதிகாரம் செலுத்தியவர்கள் மீதான சாட்டையடி. அன்றுவரை இயேசு ஒரு சராசரி யூதராகவே பார்க்கப் பட்டார். ஆனால் அவர் மேற்கொண்ட ஆலயத் தூய்மை ஆச்சரியத்தையும்
அசாத்தியக் கோபத்தையும் அங்கிருந்தவர்களுள் உண்டாக்கிற்று. அதன் வெளிப்பாடே அடையாளம் கேட்டுக் கொக்கரித்தல். சாலமோன், செருபாபேல், ஏரோது என ஒவ்வொருவரும் தங்கள் செல்வாக்கையும் செயல்திறனையும் வெளிப்படுத்தவே எருசலேம் ஆலயத்தைக் கட்டினர். ஆனால் அதைத் தங்கள் இனச் சின்னமாக்கிக் கௌரவம் கொண்டாடினர் யூதர்கள். ஆலயக் கட்டமைப்பின் உண்மையான நோக்கம் மழுங்கடிக்கப்பட்டுத் தம்பட்டம் அடிக்கவும், பணம் சுரண்டவும், பகட்டு காட்டவும் பயன்படுத்தப்பட்டது. எனவேதான் எரேமியா, எசேக்கியேல் போன்ற இறைவாக்கினர்களைப்போல் இயேசுவும் மனிதம் மதியா ஆலய இடிப்பு பற்றி உரைத்ததோடு ஒவ்வொரு மனித ஆலய மாண்பும் காக்கப்படக் குரல் உயர்த்தினார்.
நம் கடவுள் உயிருள்ளவர், உயிருள்ளவர்களைத்தானே உறைவிடமாக்குவார்.
இறைவா! கோடிகளைக் கொட்டிக் கட்டப்பட்ட உயர் கோபுர ஆலயங்களில் அல்ல, ஒவ்வொருவரின் உள்மன நல்லுணர்வில் நீர் வாழ்கிறீர் எனப் புரிய வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்