தேடுதல்

இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து 

தடம் தந்த தகைமை - புதிய நம்பிக்கையும் புதிய வாழ்வும்

இயேசு வாழ்ந்த சமூகத்துள் வறுமை இருந்தது. அது பொருளாதாரம் சார்ந்தது. அந்த வறுமையோடு ஒருவித வெறுமையும் இருந்தது. அது நிறைவின்மை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

கானாவூர் திருமணத்தின்போது, கல்தொட்டிகளை நிரப்பச்சொன்ன இயேசு, அதன்பின் அதை மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுச் செல்ல பணிக்கிறார்.

இயேசு வாழ்ந்த சமூகத்துள் வறுமை இருந்தது. அது பொருளாதாரம் சார்ந்தது. அந்த வறுமையோடு ஒருவித வெறுமையும் இருந்தது. அது நிறைவின்மை. அந்த சமூகம் அதிகமான சட்ட, சடங்கு, மரபுகளால் முடங்கிக் கிடந்தது. அங்கே ஏழ்மையும் ஏகாதிபத்தியமும் இரு துருவங்களாய் இருந்தன. இதனால் ஏழையர் வாழ்வு கேள்வியாகிப் போனது. இத்தகையோருக்குப் புதிய நம்பிக்கையும் புதிய வாழ்வும் அடிப்படைத் தேவை என்றுணர்ந்தார். வெறுமையான கல் தொட்டிகள் வெறுமைப்படுத்தப்பட்ட மக்களே. அவற்றில் தண்ணீர் நிரப்பப் பணித்தது புதிய வாழ்வளித்தலே.

இயேசு தரும் தண்ணீர் நிறைவாழ்வும் நிலைவாழ்வும் தர வல்லது (யோவா 4:14). அது வெறுமனே குடிநீரன்று, புது வாழ்விற்கான ஆற்றல். யூதம் கொக்கரித்துக் கொண்டிருந்த பழமைக்கு மாற்றான புதுமை நீர். புதிய சட்டம், புதிய வழிபாடு, புதிய ஆலயம், புதிய சிந்தனை என்ற புதியவை பொதிந்த புதிய சமூகம். அது பரிவு – பாசத்தினாலும், உண்மை

- நீதியாலும், சமத்துவ - சகோதரத்துவத்தாலும் கட்டியெழுப்பப்பட வேண்டியது. அதுவே புதிய இரசம். அது பதுக்க வேண்டியதல்ல, உலகெங்கும் வாடுகின்ற எல்லாக் கடையருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் வேண்டல். பிறருக்கு உதவுவதைவிட மேலான கிறிஸ்தவக் கடமை வேறு இல்லை.

இறைவா! ஏழையர் மீதான அக்கறையிலும், ஏழ்மையைப் போக்க மேற்கொள்ளும் தியாகச் செயல்களிலும் ஈடுபட்டு என்னை இழக்கும் இதயம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2024, 12:39