தடம் தந்த தகைமை - ஒளியிடம் வருபவர்கள்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும், என நிக்கதேமுவிடம் கூறினார் இயேசு (யோவா 3:20-21).
யார் அதிகமாகக் குறை சொல்பவர்கள்? தங்களுக்குள் அதிகமாகக் குறை உடையவர்களே. குறைகளில் உருண்டும் புரண்டும் வாழ்வோரால் குறைகளையேயன்றி, பிறரது நிறைகளை ஒருபோதும் காண இயலாது. அவற்றைக் காண அவர்களது கண்கள் கூசும். ஏனெனில் நிறை மனமும், நிறைவு தரும் செயல்களும் செய்வோர் ஒளி போன்றவர்கள். ஒளியைப் பார்த்து ஓராயிரம் நாய்கள் குரைத்தாலும் ஒளிரும் வெளிச்சக் கீற்றில் ஒரு
துளியும் குறைவுபடுவதில்லை.
அதிகமாக நிறைவு காண்பவர் யார்? இயல்பாகவும், உண்மையாகவும், வாழ்பவரே பிறரின் குறைகளைக் காணாமல் நிறைவு காணுவர். அந்நிறைவு நல்ல சொற்களாய் நல்ல உணர்வுகளோடு கருக்கொண்டு நல்ல செயல்களாய் வெளிப்படும். அதுவே ஒளிமயமான
வாழ்வு. அதுவே இறைமையோடு இணைந்த வாழ்வு. நிறைவோடும், நிறைவு ஈந்தும் வாழும் ஒவ்வொருவரும் இறையோடு வாழ்பவர். இறைவன் இத்தகு நிறைமனத்தாருடன்தான் வாழ்கின்றார். நாம் எங்கே, யாரோடு இருந்தாலும் அந்நேரத்தில் செய்யும் சிறுசிறு நற்செயல்களும் வெளிப்படுத்தும் நற்பழக்கங்களும் நாம் ஒளி என்பதன்
சான்று.
இறைவா! நீர் பேரொளி; நான் சிற்றொளி. உண்மையின் ஒளியில் எப்போதும் என்னை வழிநடத்தும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்