தடம் தந்த தகைமை – மறுபடியும் பிறந்து வா
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது, என இயேசுவிடம் கூறுகிறார் நிக்கதேம்.
இயேசுவோ அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்கிறார்.
“ரபி” என்னும் சொல் “வாழ்ந்து காட்டுபவர்” எனப் பொருள்படும். இயேசுவின் வாழ்வு நிக்கதேமுவை ஈர்த்தது. எனவே இயேசுவோடு உறவாட ஆசைப்பட்டார். பகலில் சென்றால் ஏனையோர் பார்த்துப் பரிகசிப்பர் அல்லது பழி சுமத்துவர் எனக் கருதியே இரவு நேரத்தில் இயேசுவிடம் செல்கின்றார். இயேசுவை ஓர் உயர்ந்த போதகராக, கடவுளோடு வாழ்பவராக, அருஞ்செயல்களின் ஆசானாகப் பார்த்துப் பாராட்டுகின்றார். நிக்கதேமுவின் உண்மை தேடும் பயணம் அவரது உயர்ந்த உள்ளத்தின் சான்று.
இயேசு வாழ்ந்த சமூகத்தில் யூதராகப் பிறப்பது பெருமை என்ற எண்ணம் யூதக் குலத்துள் நிறைந்திருந்தது. நிச்சயமாக, நிக்கதேமுவையும் அந்த எண்ணம் ஆட்கொண்டிருக்கும். ஆனால் அவருள் திறந்த மனம் இருந்தது. யூதப் பிறப்பு மட்டும் இறையாட்சிக்குரியவராக ஒருவரை மாற்றிவிடுமா என்பதே அவரது தேடல். ஒருவரது பிறப்பால் அல்ல, சிறப்பான வாழ்வாலே இறையாட்சிக்குரியவராக முடியும்; அதற்குப் பழையதும், குறுகியதும் இறுகியதுமான பார்வைகளைக் களைந்து நன்னெறிகளோடு ஒளியாய் ஒளிர வேண்டுமென்பதே இயேசுவின் பதில். அதனை “மறுபடியும்” என்ற ஒற்றைச் சொல் வழியாக விளக்கேற்றினார்.
யாருடைய இதயம் ரோஜாவாக இருக்கிறதோ அவரது வாய் எப்போதும் வாசமுள்ள சொற்களையே பேசும்.
இறைவா! திறந்த மனதோடு எதையும், எவரையும் அணுக அருள் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்