தண்ணீரின் முக்கியத்துவம் தண்ணீரின் முக்கியத்துவம்  (© Notice: UNICEF photographs are copyrighted and may not be reproduced in any medium without written permission from authorized)

தடம் தந்த தகைமை – நான் கொடுக்கும் தண்ணீர்

இயேசுவுடனான மனந்திறந்த உரையாடல் வழியாக பொய் நீர் எது, உண்மை நீர் எது என உணர்ந்துகொண்டு, அந்த உண்மை நீருக்காக இயேசுவிடம் யாசித்து நின்றார் சமாரியப் பெண்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இயேசு சமாரியப் பெண்ணைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; என்கிறார்.

சமாரியப் பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது” என்று பதிலுரைக்கிறார்.

தண்ணீர் தாகத்திற்கானது மட்டுமன்று; தயக்கமின்றி உழைக்க வேகம் அளிப்பது. தடை தாண்டிப் பயணிக்கும் சக்தி ஊட்டுவது. சாதாரண தண்ணீரே இப்படி என்றால் வாழ்வளிக்கும் ‘தண்ணீர்’ இயேசு எத்துணை சக்தி மிக்கவர்.

சமாரியப் பெண்ணுக்கு இயேசு ஒரு மிகச் சாதாரண யூதர், வழிப்போக்கர், இன எதிரி. ஆனால் அவரது வார்த்தைகளுள் உயிர் இருந்தது, உண்மை மிளிர்ந்தது. அது தண்ணீராகி அப்பெண்ணை ஆட்கொண்டது. நிலைவாழ்விற்கு வழிகாட்டும் நிறைவான தண்ணீர் இயேசுதான் என மெல்ல மெல்ல உணரத் தொடங்கினார்.

ஒருவர் ஒன்றை ஆய்ந்து உண்மை என்று உறுதி செய்துவிட்டால், அதைச் செய்து முடிக்கும் சக்தி அவருக்குள் ஏற்பட்டுவிடுகிறது. அந்த நிலைதான் சமாரியப் பெண்ணின் உணர்வுக்குள்ளும் எழுந்தது. இயேசுவுடனான மனந்திறந்த உரையாடல் வழியாக பொய் நீர் எது, உண்மை நீர் எது என உணர்ந்துகொண்டார். அந்த உண்மை நீருக்காக இயேசுவிடம் யாசித்து நின்றார். மனந்திறந்த உரையாடல் எப்போதும் உண்மையை நோக்கி அழைத்துச் செல்லும். அது நன்மைக்கான தொடக்கமாக அமையும். அதுவே இயேசு - சமாரியப் பெண் உரையாடலில் உயிர் பெற்று எழுந்தது. எதையும், யாரையும் பார்க்கும் விதத்திலும், புரியும் விதத்திலுமே எல்லாம் அடங்கியிருக்கின்றன.

இறைவா! முற்சார்பு எண்ணங்களில் நிலைகொள்ளாமல் திறந்த மனதோடு பிறரைப் புரிந்து ஏற்று வாழும் வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 February 2024, 12:47