போதகரே என நிக்கதேம் அழைத்த இயேசு போதகரே என நிக்கதேம் அழைத்த இயேசு 

தடம் தந்த தகைமை - தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்

நல்ல உரையாடலுக்கும் உறவாடலுக்கும் இயேசு - நிக்கதேம் சந்திப்பு ஒரு சிறந்த சான்று. இத்தகு மனநிலை நம் மத்தியில் பூத்தால் எத்துணை அழகாயிருக்கும் மானுடம்!

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நிக்கதேம் இயேசுவைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என பதிலுரைக்கிறார்.

அழகையும், அதிசயங்களையும் கண்ணுற்று ஆச்சரியப்படுபவர்கள் குழந்தைகளும் குழந்தை மனத்தவர்களும். அந்த மனம் நிக்கதேமுவுக்குள் நிறைந்திருந்தது. வரி தண்டுவோருக்குத் தலைவராய் இருந்த சக்கேயு என்ற செல்வர் எப்படியேனும் இயேசுவைக் காண வேண்டும் எனும் நோக்கில் எப்படி காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டாரோ (லூக் 19:4) அப்படித்தான் நிக்கதேமும் இயேசுவைத் தேடிச் சென்று கேட்ட கேள்விகளும் பெற்ற பதில்களும். இயேசுவின் பதில்கள் யாவும் நிக்கதேமுவைத் திக்குமுக்காடச் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தின. நிக்கதேம் இயேசுவை ரபி என்றழைத்து, போதகராய்ப் பார்த்தப் பார்வையும், இயேசு போதகர் என நிக்கதேமுவை ஏற்று அழைப்பதும் ஆச்சரியமானவை. அதோடு இறையாட்சிக்குரிய அடிப்படைப் பண்புகளை நிக்கதேம் அறியாதிருந்தது அதனிலும் ஆச்சரியத்துக்குரியது என யூத இனம் கொண்டிருந்த குறுகியப் பார்வைகளைக் கோடிடுகின்றார் இயேசு.

நல்ல உரையாடலுக்கும் உறவாடலுக்கும் இயேசு - நிக்கதேம் சந்திப்பு ஒரு சிறந்த சான்று. இத்தகு மனநிலை நம் மத்தியில் பூத்தால் எத்துணை அழகாயிருக்கும் மானுடம்! நம்மை நாம் நம்பத் தொடங்கிவிட்டால், நாம் உலகில் வாழக் கற்றுக் கொண்டோம் என்றே பொருள்.

இறைவா! எல்லாருக்குள்ளும் உண்மை உள்ளது. அதைக் கண்டுகொள்ள என் இதய விழிகளைத் திறந்தருளும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2024, 09:35