தடம் தந்த தகைமை – குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இயேசு சமாரியப் பெண்ணிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச் சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார்.
தாகத்திற்குத் தண்ணீர் கேட்பது தவறன்று. யார் யாரிடம் கேட்டது என்பதே இங்கு எழும் விவாதம். தண்ணீர் வாழ்வின் அடையாளம். புத்துணர்வும், புதுத்தெம்பும் தரும் சக்தி. வாழ்வு தரும் தண்ணீரைக் கொண்டிருந்த யூதராகிய இயேசு, வாழ்வு இழந்திருந்த ஒரு சமாரியப் பெண்ணிடம் கேட்டது இரு இனச் சட்டங்களின் அடிப்படையில் தவறு.
இயேசுவின் தண்ணீர் கேட்டல் தாகத்திற்கானது அன்று, இரு சமூகப் பிணைப்பிற்கானது. இரு இனக் கலாச்சார இணைவுக்கான ஒரு தொடக்கம். யூதர்கள் சமாரியரை எப்படி அருவருப்பானவர்களாகப் பார்த்தார்களோ அப்படியே சமாரியரும் யூதர்களைப் பார்த்தனர். இரு சமூகங்களுள் கொடுக்கல் வாங்கலோ, உறவாடலோ, இணைந்து வழிபடுதலோ எதுவும் இல்லா பகைச்சூழலில் இயேசுவின் “தண்ணீர் கேட்பு” சமூகச் சட்டமீறலாகவே கணக்கிடப்படும். அதன் அக வெளிப்பாடுதான் சமாரியப் பெண்ணிடமிருந்து புறப்பட்ட வார்த்தைகள். ஒரு பெரு நன்மைக்காக சிறு சட்ட மீறல் தவறன்று என்பதே இயேசுவின் பார்வை. மனித உறவின் நிறைவே பகிர்வு.
இறைவா! பாகுபாடின்றிப் பழகும் பண்புமிக்க உள்ளத்தைப் பரிசாகத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்