தேடுதல்

INDIA-RELIGION-CHRISTIANITY-EASTER INDIA-RELIGION-CHRISTIANITY-EASTER  (AFP or licensors)

மதமாற்ற குற்றச்சாட்டில் இரண்டு அமெரிக்கர்கள் இந்தியாவில் கைது!

கிறிஸ்தவ மறைபணியாளர்கள் 1626-இல் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு வந்தனர். 1819-ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு, அப்பகுதியில் அமைதியைப் பாதுகாக்க கிறிஸ்தவ மறைபணியாளர்களின் பணியை ஊக்குவித்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த ஜனவரி மாதம் 31, புதனன்று, வடகிழக்கு இந்திய மாநிலமான அஸ்ஸாமில் மதமாற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு அமெரிக்க நாட்டவரைக் கைது செய்ததை கிறிஸ்தவக் குழுவொன்று கண்டித்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் John Matthew Boone மற்றும் Michael James Flinchum இருவரும் மத மாற்றத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் அதில் எந்த உண்மையும் இல்லை என்று அஸ்ஸாம் கிறிஸ்தவ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Allen Brooks அவர்கள், பிப்ரவரி 5, இத்திங்களன்று அச்செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமின் சோனித்பூர் மாவட்டத்தில் சுற்றுலா விசாவில் இருந்தபோது மதக் கூட்டத்தில் பங்கேற்றதற்காக Boone  மற்றும் Flinchum இருவரையும் கிழக்கு அஸ்ஸாம் மாநிலத்தின் காவல்துறையினர் ஜனவரி 31, புதனன்று கைது செய்தனர் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் பாப்டிஸ்ட் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர் என்றும், இந்தியாவின் விசா விதிகள் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்கிறது என்றும், இந்தக் கைது நடவடிக்கைக் குறித்து அம்மாநிலக் காவல்துறை கூறியுள்ளது. 

காவல்துறையின் இந்தக் கருத்தை மறுத்த Brooks அவர்கள், இது செபக் கூட்டம் அல்ல, மாறாக, இது அலுவலகக் கட்டிடம் ஒன்றின் திறப்பு விழா என்றும், அமெரிக்காவைச் சேர்ந்த இவ்விருவரும் விருந்தினர்களாக இவ்விழாவில்  பங்கேற்க அழைக்கப்பட்டனர் என்றும் யூகான் செய்தி நிறுவனத்திடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்விழாவில் மதியுணவிற்கு முன்பாக இறைவேண்டல் வழிபாடு நடைபெற்றது என்றும், இது மதமாற்றம் செய்வதற்கான கூட்டம் என்று தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு இவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் விளக்கமளித்துள்ளார் Brooks.

மேலும் 64 வயதான Boone மற்றும் 77 வயதான Flinchum இருவருக்கும் தலா 500 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு ஜனவரி 31, அன்று விடுவிக்கப்பட்டனர் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2024, 13:20