தேடுதல்

காங்கோவில் மோதலுக்கு எதிராகக் குரலெழுப்பும் மக்கள் காங்கோவில் மோதலுக்கு எதிராகக் குரலெழுப்பும் மக்கள்   (ANSA)

காங்கோவில் ஒவ்வொரு திருப்பலிக்குப் பின்னரும் அமைதிக்கான செபம்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் வன்முறைகளால் ஏறக்குறைய 60 இலட்சம் பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த 30 ஆண்டுகளாக வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் காங்கோ ஜனநாயகக் குடியரசில் பிப்ரவரி 18, கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒவ்வொரு திருப்பலிக்குப் பின்னரும் நாட்டின் அமைதிக்காக செபிக்க வேண்டும் என விசுவாசிகளை விண்ணப்பித்துள்ளது தலத்திருஅவை.

நாட்டில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திருப்பலியும், நாட்டின் அமைதிக்கான செபத்துடனேயே நிறைவுக்கு வரும் என அறிவித்துள்ளனர் காங்கோ ஆயர்கள்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ வேண்டும் எனப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் காங்கோ ஆயர்கள், தற்போது ஒவ்வொரு திருப்பலியின் இறுதியிலும் நாட்டின் அமைதிக்காக செபிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இம்மாதம் 24-ஆம் தேதி சனிக்கிழமையன்று, தலைநகரின் காங்கோ நமதன்னை பேராலயத்தில் Kinshasa பேராயர், கர்தினால் Fridolin Ambongo அவர்கள் நாட்டில் அமைதியும் சுமுக வாழ்வும் இடம்பெற அனைவருடன் இணைந்து திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.

ருவாண்டுவுடனான எல்லைக்கருகில் இருக்கும் காங்கோ குடியரசின் வட கிவு மாவட்டத்தின் தலைநகர் Goma-வைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளதால் பல உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

ஏறக்குறைய 20 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள Goma நகர் ஏறக்குறைய 8 இலட்சத்து 50 ஆயிரம் புலம்பெயர்ந்த மக்களுக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளது.

காங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் வன்முறைகளால் ஏறக்குறைய 60 இலட்சம் பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2024, 14:03