தேடுதல்

இறைஊழியர் Laureana Franco இறைஊழியர் Laureana Franco  

இறைஊழியர் Laureana Franco-வை புனிதராக்க தலத்திருஅவை முயற்சி!

இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் வழியாக, ஒருவர் இயேசுவைப் போல் மாறுகிறார். இறைஊழியர் பிராங்கோவின் வாழ்க்கையில் புனிதம் இப்படித்தான் பிரதிபலிக்கிறது : ஆயர் Vergara

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மறைக்கல்வி கற்பிப்பதற்காகத், தனது அரசு வேலையையைத் துறப்பு செய்த பொதுநிலையினரான இறைஊழியர் Laureana Franco அவர்களுக்குப் புனிதர் பட்டம் கோரும் தலத்திருஅவையின் நடவடிக்கைக்குப் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள், பாராட்டுத் தெரிவித்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pasig மறைமாவட்டம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில், 2011-ஆம் ஆண்டு 75 வயதில் புற்றுநோயால் இறந்த Laureana Franco-விற்குப் புனிதர் பட்டப் பணியைத் தொடங்கியுள்ளதாக பிப்ரவரி 24, சனிக்கிழமையன்று அறிவித்தது என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

இதுகுறித்துத் தனது கருத்தை வெளியிட்டுள்ள Pasig மறைமாவட்டத்தின் ஆயர் Mylo Hubert Vergara அவர்கள், இந்தச் சுற்றறிக்கை கடிதத்தின் வழியாக, ஒரு பழம்பெரும் மறைக்கல்வி ஆசிரியையின் வாழ்க்கையையும், அவரது வீரத்துவ நற்பண்புகளையும் புனிதர் நிலைக்குக் கொண்டு வரும் கடினமான செயல்பாட்டில், இம்மறைமாவட்டத்திலுள்ள அனைத்துக் கத்தோலிக்க விசுவாசிகளையும் பங்கேற்க நான் அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.  

தலத்திருஅவையின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த இறைஊழியர் பிராங்கோ அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட முற்றிலும் தகுதியானவர் என்று கூறியுள்ள ஆயர் Vergara அவர்கள், ஏழைகளுக்குப் பணியாற்றுவதில் அவர் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை என்றும், ஆனால் குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தல் வழியாக இறைநம்பிக்கையை எளிய வழியில் ஏற்படுத்தினார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் வழியாக, ஒருவர் இயேசுவைப் போல் மாறுகிறார் என்று விளக்கிய ஆயர் Vergara அவர்கள்,  இறைஊழியர் பிராங்கோவின் வாழ்க்கையில் புனிதம் இப்படித்தான் பிரதிபலிக்கிறது என்றும் உரைத்துள்ளார்.

1936-இல் பிறந்த பிராங்கோ, பிலிப்பீன்ஸ் விமானப்படையில் தொலைபேசி மின்தொடர் பிணைப்புப்பலகை இயக்குபவராகவும் (telephone switchboard operator) கணக்கியல் எழுத்தராகவும் பணியாற்றினார். தென்கிழக்கு மணிலா புறநகர் பகுதியான Taguig இல் உள்ள புனித அன்னாள் பங்கில் தன்னார்வ மறைக்கல்வி ஆசிரியராகப் பணிபுரிவதற்காக அவர் தனது வேலையைத் துறந்தார். (UCAN )

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 February 2024, 12:26