தேடுதல்

திருத்தூதர் பேதுரு திருத்தூதர் பேதுரு   (credits Mallio Falcioni)

தூய பேதுரு தலைமைப்பீடத் திருவிழா – பிப்ரவரி 22

முதல் திருத்தந்தையான தூய பேதுரு, கி.பி. 30ம் ஆண்டு முதல் கி.பி. 67 அல்லது 68ம் ஆண்டு வரை அதாவது 37 ஆண்டுகள் திருத்தந்தையாக பணியாற்றித் திருஅவையை வழிநடத்தியுள்ளார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்பு நேயர்களே தவக்காலத்தை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தனது தியானத்தைத் துவக்கியுள்ளார். பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை மதியம் வரை நீடிக்க உள்ள இந்த தியான நாள்களை முன்னிட்டு  இன்று பிப்ரவரி 21 புதன்கிழமை, வழக்கம் போல் நடைபெறும் திருத்தந்தையின் புதன் பொதுமறைக்கல்வி உரையானது இடம்பெறவில்லை. ஆகையால் பிப்ரவரி 22 வியாழன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் தூய பேதுருவின் தலைமைப்பீடம் - திருவிழா பற்றியக் கருத்துக்களை இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.

"பாறை எனப் பொருள்படும் கேபா" இதுவே இயேசு திருத்தூதர் பேதுருவிற்கு அளித்த பெயர். இந்தப்பாறையின் மீதே திருஅவையைக் கட்டியுள்ளதாக நற்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. கிறிஸ்தவத்தை நிலைநாட்டியதில், உலக மக்களுக்கு எடுத்துரைத்து நம்பிக்கையை ஊட்டியதில், மிக முக்கியமான நபராக, வரலாற்று நபராகப் பேதுரு திகழ்கின்றார். திருஅவையை சிறப்பான முறையில் வழிநடத்திய திருத்தூதர் பேதுருவின் தலைமைத்துவத்தைப் போற்றும் விதமாகவும், அவர் செய்த பணிக்கு மரியாதை செய்யும் விதமாகவும், தலைமைப்பீடத்திற்கென்று ஒரு தனி விழா எடுக்க முடிவுசெய்யப்பட்டது. சீமோன் பேதுரு என்று அறியப்படும் தூய பேதுரு, திருஅவையை உருவாக்கியவர், அதை வழிநடத்தியவர். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், கிபி 64 முதல் 68 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இறந்ததாக வரலாறு கூறுகின்றது.

ஜனவரி மாதம் 18 ஆம் நாள் திருத்தூதர் பேதுரு உரோம் மக்களுக்கு முதல் உரை ஆற்றியதாகவும், பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் அந்தியோக்கியா மக்களுக்கு பேதுரு உரையாற்றியதாகவும் கூறப்படுகின்றது. விண்ணகத்தின் திறவுகோல்களை வைத்திருக்கும் நபராக தூய பேதுரு எல்லாராலும் அறியப்பட்டார். திருத்தந்தை தூய 23 யோவான், 1960 ஆண்டு முதல் இந்த நாளைத் திருவிழாவாகக் கொண்டாடப் பணித்தார்.  பல்வேறு மறுப்புக்கள் மற்றும் இடர்ப்பாடுகளைக் கடந்து 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உரோமன் கத்தோலிக்க நாள்காட்டியிலும் இவ்விழா குறிக்கப்பட்டது. திருஅவையின் ஒற்றுமையை, கிறிஸ்தவத்தின் ஒற்றுமையைக் கொண்டாடுவதே இந்நாளின் மையக்கருத்து. தூய பேதுருவின் அதிகாரம், திருஅவையின் உறுதியான அடித்தளத்தை அமைப்பதற்கான அவரின் அர்ப்பணிப்பு போன்றவற்றை இந்நாளில் நாம் அதிகமதிகமாக உணர்கின்றோம். உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்களின் முதல் தலைவராக திகழும் தூய பேதுரு, வத்திக்கானின் வரலாற்றில் ஒரு முக்கிய நபராக  உள்ளார். அவர் முதல் திருத்தந்தையாக நீண்ட காலம் இருந்து, அதாவது முதல் நூற்றாண்டு வரை பதவியில் நீடித்து, திருஅவையை சிறப்பாக வழிநடத்தியவர்.

தூய பேதுரு, கி.பி.67 அல்லது 68ம் ஆண்டில்,  நீரோ மன்னர் ஆட்சியின் 13 அல்லது 14வது ஆண்டில், தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கேபா உன்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் என்று இயேசுவால் தலைமைப்பொறுப்பு வழங்கப்பட்ட தூய பேதுரு, இயேசுவின் இறப்பு உயிர்ப்புக்குப்பின் கிபி 42 - ஆம் ஆண்டு உரோமைக்கு வந்து 25 ஆண்டுகள் உரோமை ஆயராகப் பணியாற்றினார். முதல் திருத்தந்தையான தூய பேதுரு, கி.பி. 30ம் ஆண்டு முதல் 67 அல்லது 68ம் ஆண்டில், அதாவது, 37 ஆண்டுகள் திருத்தந்தையாக பணியாற்றித் திருஅவையை வழிநடத்தியுள்ளார்.

மரபுவழிச்செய்தி

திருத்தூதர் பேதுரு, அந்தியோக்கு நகரில் நற்செய்திப் பணியாற்றிக் கொண்டிந்தபோது அந்நகரின் ஆளுநராக இருந்த தியோப்பிலிஸ் என்பவன் பேதுருவைக் கைதுசெய்து சிறையில் அடைத்து உணவு, நீர் என எதுவும் கொடுக்காமல் தண்டித்தான். இதனால் மிகவும் துன்புற்ற பேதுரு, வானத்தை அண்ணார்ந்து பார்த்து “இயேசுவே! என் தலைவரே! எனக்கு எதற்கு இத்தகைய கொடிய தண்டனை என்று வேண்டினார்,?”. அதற்கு ஆண்டவர் இயேசு அவருக்கு “பேதுரு! நான் உன்னை ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டேன் என்று உனக்குத் தெரியாதா?, சிறுது பொறுத்திருந்து பார். எல்லாமே நல்லதாகவே நடக்கும்” என்று பதிலுரைத்தார்.

இந்நேரத்தில் பேதுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தூய பவுல், அந்தியோக்கியா நகர் ஆளுநரைச் சந்தித்து, “நீங்கள் சிறை பிடித்து வைத்திருக்கும் மனிதர் சாதாரண மனிதர் இல்லை மாறாக இறைமனிதர். அவரால் இறந்துபோன உங்களது மகனை உயிர்த்தெழ வைக்க முடியும்” என்று கூறினார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஆளுநன் தியோப்பிலிஸ், “ஒருவேளை நீ சொல்வது உண்மையானால், நான் அவரை விடுதலை செய்வேன் என்றான். பின்னர் பவுல் ஆளுநனோடு சிறைகூடத்திற்கு வந்து, பேதுருவிடம், இறந்த ஆளுநனின் மகனை உயிர்பெற்றழச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு பேதுரு, “அது எப்படி என்னால் முடியும்?” என்று கேட்க, “இறைவனை வேண்டிவிட்டு காரியத்தில் இறங்கு, எல்லாம் உன்னால் முடியும்” என்று பவுல் கூறினார்.

பேதுரு இறைவனிடம் உருக்கமாக வேண்டி, இறந்துபோன ஆளுநனின் மகனை உயிர்த்தெழச் செய்தார். இதைக் கண்டு பிரமித்துப் போன ஆளுநன், பேதுருவை விடுதலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்தியோக்கு நகரில் இருந்த மக்கள் அனைவரையும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளச் செய்தான். மேலும் நகரின் மையத்தில் ஒரு பெரிய ஆலயம் கட்டி, அதன் நடுவே அந்தியோக்கு நகரில் இருந்த மக்கள் அனைவரும் பேதுரு பேசுவதை கேட்கக்கூடிய அளவில் ஓர் அரியணையை நிறுவினான். அங்கே பேதுரு ஏழு ஆண்டுகள் நற்செய்திப் பணியாற்றினார். பின்னர் அவர் உரோமைக்குச் சென்று நற்செய்தி அறிவித்து மறைசாட்சியாக கிறிஸ்துவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார் என்று மரபுவழிச் செய்தியாகக் கூறப்படுவதுண்டு.

கிறிஸ்து தன் பணிவாழ்வைத் தொடங்கியவுடன் செய்த மிக முக்கியமான காரியம் தனக்கான சீடர்களைத் தெரிந்து கொண்டதுதான். அதில் மிக முக்கியமானவரும் முதலானவரும் தூய சீமோன் எனப்படும் பேதுரு. இயேசு தன்னையும் தன் உடன் இருந்த சீடர்களையும் அழைத்ததும், தாங்கள் செய்து கொண்டிருந்த வலைகளை, தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரமான அந்த வலைகளையும் படகுகளையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்கின்றனர். மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவது மிக அவசியமானது என்பதனை தனது செயல்களால் எடுத்துரைத்தார் முதல் சீடர்களுள் ஒருவரான பேதுரு. கிறிஸ்துவின் வார்த்தைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த தூய பேதுரு, உவமைகள் வாயிலாக அவர் பேசியதையும் அதிலுள்ள மறைவான உண்மைகளையும் கண்டறிய விரும்பினார். திருமுழுக்கு யோவானுக்கு அடுத்தபடியாக இயேசுவைக் கடவுளின் மகன் என்று அறிந்து கொண்டவர், அடையாளம் கண்டு கொண்டவர் தூய பேதுரு. உடல் சோர்வுற்று கண் அயர்ந்து இருந்தாலும், மனம் சோர்வுற்று இயேசுவை மறுதலித்து இருந்தாலும், தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் மனநிலை கொண்டவராக இருந்தார். இத்தகைய நற்குணங்களினாலேயே இயேசு இவருக்குத் திருச்சபையின் அடித்தளமாக, அதனை வழிநடத்திச்செல்பவராக இருக்கும் பொறுப்பினை அளிக்கின்றார்.  கிறிஸ்துவின் நம்பிக்கைக்கு உகந்தவராக பேதுரு இருந்தார் என்பது, இயேசு தான் செல்லும் மிக முக்கியமான இடங்களுக்கு உடன் அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட சீடர்களில் ஒருவராக பேதுரு இருந்தார் என்னும் செய்தி தெளிவுபடுத்துகின்றது. ஏராளமான சீடர்கள் இயேசுவிற்கு இருந்தபோதிலும் நெருங்கிய சீடர்கள் நண்பர்களாக, எப்போதும் அவருடனேயே சிலர் கூட இருந்தனர். பேதுரு அவர்களில் ஒருவர். 

என் ஆடுகளை வளர், என் ஆடுகளைப் பேணி வளர், என்ற வார்த்தைகள் வழியாக தான் இதுவரை காத்துவந்த மந்தையாம் மக்களை வழிநடத்தும் பொறுப்பினை பேதுருவிடம் ஒப்படைக்கின்றார் இயேசு. உண்மையை உறுதியாய் எடுத்துரைத்த பேதுருவின் வார்த்தைகளால் தூண்டப்பட்ட பலர் மனம் மாறினர். எளிய படிப்பறிவில்லாத மனிதராக இருந்தபோதும், துணிவுடன் தான் பெற்ற இயேசு அனுபவத்தை பிறருக்கு எடுத்துரைக்கின்றார். தாழ்சியுள்ளவராய், தூய்மையான மனிதராக அவர் இருந்தார். கொர்னேலியு பேதுருவைக் காணவந்தபோது அவரின் காலில் விழுந்தார். விழுந்தவரைத் தூக்கி எடுத்து நானும் மனிதன் தான் என்று தனது தாழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார் பேதுரு.

நான்காம் நூற்றாண்டு முதல் உரோமையின் பாரம்பரிய வழக்கப்படி கொண்டாடப்படும் இத்திருநாள். 'உன் பெயர் பாறை. இந்தப் பாறையின்மேல் நான் திருச்சபையைக் கட்டுவேன்' என்னும் இயேசுவின் வார்த்தைளைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. திருஅவை என்னும் மந்தையை நம் ஆண்டவராகிய இயேசு திருத்தந்தையின் பொறுப்பில் விட்டுச் சென்றார் என்றும், நம் திருத்தந்தை உறவு ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ்கிறார் என்றும் நாம் இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இத்திருவிழா நமக்குத் தரும் பாடங்களாக அருள்முனைவர் இயேசு கருணாநிதி இவ்வாறு எடுத்துரைக்கின்றார்.

'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்னும் இயேசுவின் கேள்விக்கு, 'நீர் மெசியா' எனப் பதில் தருகின்றார் பேதுரு. இது பேதுருவின் உள்ளுணர்வு அல்லது தனிப்பட்ட அனுபவமாக இருக்கிறது. பேதுருவின் பெயர் பாறை என இருந்தாலும், அவர் என்னவோ பல நிலைகளில் உறுதியற்றே இருந்தார். இயேசு தன் பாடுகளை முதன்முறை அறிவித்தபோது, சிலுவை வேண்டாம் என இயேசுவைக் கடிந்துகொள்கின்றார். பாடுகள் நிகழ்வில் இயேசுவை மறுதலிக்கின்றார். பாறை போல உறுதியாக இருக்க வேண்டிய பேதுரு, களிமண் போல நெகிழ்வுத்தன்மை கொண்டிருந்தார். ஆனால், அந்த நெகிழ்வுத் தன்மையை உறுதியாக்கும் பொறியாளர் இயேசுவே. ஆக, நம் வலுவின்மைகளையும் உறுதியாக்க வல்லவர் இயேசு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பேதுரு செய்தது போல, 'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!' (காண். யோவா 27:17) என்று அவரிடம் சரணாகதி அடைவதுதான். நாம் எப்போதும் நான்கு பிரமாணிக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்!' நம்மேல் பிரமாணிக்கம் (faithfulness to self), கடவுள்மேல் பிரமாணிக்கம் (faithfulness to God), இறையழைத்தல்மேல் பிரமாணிக்கம் (faithfulness to vocation), திருஅவைமேல் பிரமாணிக்கம் (faithfulness to church).' திருஅவை என்பது சிறிய அளவில் நாம் சார்ந்திருக்கின்ற மறைமாவட்டத்தையும், அகல்விரிவெளி அளவில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையையும் குறிக்கிறது. திருஅவையின்மேல் நமக்குள்ள கடமைகைளை நினைவுகூரவும், திருஅவையை இன்னும் அதிகம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் இந்த நாள் நம்மைத் தூண்டுவதாக!

ஆகவே, பேதுருவின் தலைமைபீட விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாம் திருச்சபையின் திருமரபிற்கு தகுந்த மரியாதை செலுத்துவோம். நம் அகில உலகத் திருஅவையின் தலைவராம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும், நம் தலத்திருஅவையின் தலைவராகத் திகழ்கின்ற, பேராயர்கள், ஆயர்கள், நிர்வாகிகள்,என அனைவருக்காகவும் சிறப்பாக இறைவனின் அருளை மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2024, 13:08